என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jyothi aditya scindia"

    தேர்தலுக்கு பிறகு கூட்டணி பற்றி பேசுவோம் என்று உபி காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா கூறியுள்ளார்.

    குணா (மத்திய பிரதேசம்)

    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், உத்தரபிரதேச மாநில மேற்கு பகுதி பொறுப்பாளருமான ஜோதிர் ஆதித்யா சிந்தியா அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- ஏராளமான மக்கள் மத்திய பிரதேச மாநிலம் குணா தொகுதியில் நீங்கள் ஜெயிக்க வேண்டும். ஆனால் மோடி பிரதமராக வர வேண்டும் என நினைக்கிறார்களே, இந்த வேறுபாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:- உங்கள் கணிப்பை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் நிஜத்தில் நிலைமை வேறாக உள்ளது. மோடி அளித்த பொய்யான வாக்குறுதியை மக்கள் பார்த்து விட்டனர். எல்லோரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் வழங்குவோம், 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை என அவர்கள் கூறிய எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை.

    காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பாரத் நிர்மான் திட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம் போன்றவற்றை நிறைவேற்றி காட்டியது. இதை மக்கள் உணர்ந்துள்ளதால் காங்கிரஸ் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது.

    கேள்வி:- பாரதீய ஜனதா ஆதரவாளர்கள் இந்த தேர்தல் மோடியை மையப்படுத்தியது என்கிறார்கள். இந்த கருத்து வாசகர்களுடன் ஒத்து போகிறதா?

    பதில்:- மே 23-ந்தேதி இந்த கேள்விக்கு விடை கிடைக்கும். அவர்கள் ஜெயித்தால் மிகுந்த கவலையாக இருக்கும். ஆனால் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.

    கேள்வி:- நீங்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என கூறினீர்களே? அதற்கு காங்கிரஸ் எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது?

    பதில்:- நாங்கள் பாரதீய ஜனதா கூட்டணியை விட அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். சில கட்சிகளுடன் கூட்டணி சேருவது பற்றி மே 23-ந்தேதிக்கு பிறகு பேசுவோம்.

    கேள்வி:- ராகுல்காந்தி, ராஜீவ்காந்தி மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது மோடி குற்றம் சாட்டி பேசுவது பற்றி என்ன கூறுகிறீர்கள்?


    பதில்:- மோடியும், பாரதீய ஜனதாவும் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவது கிடையாது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., வேலை வாய்ப்பின்மை பற்றி பேசுவது இல்லை. இந்த பிரச்சினைகள்தான் தேர்தலில் எதிரொலிக்கும். எனவே தான் பாரதீய ஜனதா 3-ம் தரத்துக்கு இறங்கி பேசுகிறார்கள்.

    கேள்வி:- உத்தரபிர தேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி-சமாஜ் வாடி கட்சியுடனான கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகியதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

    பதில்:- உத்தரபிரதேசத்தில் நாங்கள் காங்கிரஸ் கட்சியை மீண்டும் கட்டமைத்து வருகிறோம். இதை வாக்கு சதவீதத்திலும், எங்களுக்கு கிடைக்கும் இடங்களிலும் நீங்கள் உணர்வீர்கள். நாங்கள் பிரசாரம் செய்யும்போது எல்லா வி‌ஷயங்களையும் பற்றி பேசுகிறோம். இந்த தேர்தலில் நாங்கள் எங்கள் பலத்தை நிரூபிக்க போராடுகிறோம்.

    கேள்வி:- ராகுல்காந்தி பிரதமராக கூட்டணி கட்சிகள் ஒப்புக் கொள்வார்களா?

    பதில்:- பிரதமர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் ராகுல்காந்திக்கு உள்ளது. அவர் நாட்டை முன்னேற்றத்துக்கு கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது. மே 23-ந்தேதி காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×