search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூலூர் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசிய காட்சி.
    X
    சூலூர் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசிய காட்சி.

    எத்தனை பெட்டிகள் எடுத்து சென்றாலும் மக்கள் நீதி மய்யம் வெல்லும்- கமல்ஹாசன்

    எத்தனை பெட்டிகள் எடுத்து சென்றாலும் மக்கள் நீதி மய்யம் வெல்லும் என்று சூலூர் தொகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.
    சூலூர்:

    சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமியை ஆதரித்து அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். சூலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது-

    சாராய கங்கை பெருகி ஓடும் இந்த நாட்டில் ஜீவநதிகள் வற்றிப்போய் கிடக்கின்றன. தற்போதைய ஆட்சியாளர்கள் நாடாள தகுதியற்றவர்கள்.

    தவறுகளையும் பித்தலாட்டங்களையும் செய்பவர்கள். அவர்களை குறைசொல்வதை விட்டு விட்டு மக்களுக்கு என்ன செய்ய போகிறோம் என்பதை சொல்கிறோம். மற்ற கட்சிகளை பற்றி சொல்ல நிறைய இருந்தாலும், நாங்கள் உங்களுக்கு என்ன செய்ய போகிறோம் என்பதை சொல்கிறோம்.

    குடிநீர் பற்றாகுறை தீர்க்க முடியாத பிரச்சனையல்ல. நேர்மையான அரசியல் நடந்தால் வீடு தேடி குடிநீர் கிடைக்கும். அதற்கான நேரத்தையும், வாய்ப்பையும் எங்களுக்கு கொடுக்க வேண்டும் . 3 துறைகள் குழி தோண்டிக்கொண்டே இருக்கின்றன.

    அவர்களுக்குள் கருத்துகளை பரிமாறிக்கொள்வதில்லை என்பது தெரிகிறது . இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.எங்களை தூக்கி பிடிப்பவர்கள் கட்சிக்காரர்கள் மட்டுமல்ல. மக்களும் தான். தண்ணீர் பிரச்சனை தீர்க்க முடியும் என நல்ல நீர்நிலை ஆய்வாளர்கள், அறிவாளர்கள் சொல்கின்றனர் .

    டாஸ்மாக் கடைகளை மூடி பூரண மது விலக்கை கொண்டு வர முடியுமா? என மக்கள் கேட்கின்றனர். உலகத்தில் ஒரே நாளில் மது விலக்கை கொண்டு வந்தால் கோட்டையில் இருப்பவர்கள் சாராயம் காய்ச்ச போய்விடுவார்கள். மது விலக்கை மெது மெதுவாக கொண்டு வர முடியும். மக்களிடம் பொய் சொல்ல விரும்பவில்லை.

    ஒருவர் குழியை தோண்டுவார். ஒருவர் மூடுவார். இப்படி பள்ளத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அதை சமப்படுத்த வேண்டிய நேரம் இது.

    சாராயம், போனஸ் கொடுத்து அழைத்து வரும் கூட்டத்திற்கு எங்கள் பெண்கள் போக மாட்டார்கள். விண்வெளியானாலும், விவசாயமானலும் பெண்களுக்கு சம உரிமை கொடுப்போம்.

    எத்தனை பெட்டிகள் எடுத்து சென்றாலும் மக்கள் நீதி மய்யம் வெல்லும். அதனை நம்பி தைரியமாக மாற்றத்திற்கான விதையை தூவுங்கள். நேர்மை என்ற ஒரு வரியே மக்கள் நீதி மய்யம் என்று மார் தட்டி சொல்வோம்.

    உங்கள் ஊரில் என்ன பிரச்சனை. அதனையே நாங்கள் தேர்தல் அறிக்கையாக கொடுக்கிறோம். மக்களின் மனதை அறிந்தே தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு தான் தீர்வுகளை கொடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசியதாவது-

    அநீதியை அழிக்க தொடங்கப்பட்ட கட்சிதான் மக்கள் நீதி மய்யம். எங்களுக்கு அலங்காரங்களுக்கு நேரம் இல்லை. மக்கள் பணி மட்டுமே எங்கள் நோக்கம். எங்களை கவிழ்ப்பதற்காக எத்தனை பண பெட்டிகள் கைமாறினாலும் எங்களை தடுக்க முடியாது.

    மக்கள் நீதி மய்யத்தை தூக்கி பிடிப்பவர்கள் இளைஞர்களும், பெண்களும் தான். நேர்மையாக இருந்தால் எதுவும் சாத்தியமே. அந்த நேர்மை எங்களிடம் உள்ளது.

    எனவே மாற்றத்தை உருவாக்க மக்கள் முன் வர வேண்டும். கோட்டையில் இருப்பவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு அநியாயத்தை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற மன நிலையில் உள்ளனர். அவர்களுக்கு மக்கள் பணி செய்வதில் ஆர்வம் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×