என் மலர்
செய்திகள்

6-வது கட்ட தேர்தல்: 59 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 11-ந்தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 91 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. ஏப்ரல் 18-ந்தேதி 2-வது கட்ட தேர்தலில் 97 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 23-ந்தேதி 3-வது கட்ட தேர்தலில் 116 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.
ஏப்ரல் 29-ந்தேதி 4-வது கட்டமாக 76 தொகுதிகளுக்கும், கடந்த 6-ந்தேதி 5-வது கட்டமாக 51 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இந்த நிலையில் 6-வது கட்டமாக 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
பீகார் (8), அரியானா (10), ஜார்க்கண்ட் (4), மத்திய பிரதேசம் (8), உத்தரபிரதேசம் (14), மேற்குவங்காளம் (8), டெல்லி (7) ஆகிய 7 மாநிலங்கள் 6-வது கட்ட தேர்தலை சந்திக்கின்றன. இந்த மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்று வந்தது.
இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியுடன் 59 தொகுதிகளிலும் பிரசாரம் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் வெளியேறி விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெற உள்ளது.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 59 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சில தொகுதிகளில் மாலை 4 மணியுடன் ஓட்டுப்பதிவு நிறைவு பெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை ஓட்டுப் பதிவு நடக்கும் 59 தொகுதிகளிலும் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 311 வேட்பாளர்கள் கோடீசுவரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான வேட்பாளர்கள் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் இருக்கின்றன. அதிகபட்சமாக பா.ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகி இருக்கின்றன.
59 தொகுதிகளில் உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், மத்திய மந்திரி மேனகா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளும் அடங்கும். இவர்கள இன்று இறுதி கட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரியங்கா உத்தரபிரதேசத்தின் பல்வேறு தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார். இன்று மாலை அவர் தனது சித்தி மேனகாகாந்தி போட்டியிடும் சுல்தான்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய்சிங்கை ஆதரித்து பேசுகிறார்.
6-வது கட்ட தேர்தலை சுமூகமாக நடத்த தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. 5-வது கட்ட தேர்தலின் போது மேற்கு வங்காளத்தில் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.
அதை கருத்தில் கொண்டு மேற்கு வங்காளத்தில் ஓட்டுப்பதிவு நடைபெறும் 8 தொகுதிகளிலும் அதிகபட்சமாக 70 ஆயிரம் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். டெல்லியில் 7 தொகுதிகளிலும் சுமார் 60 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். #Loksabhaelections2019






