என் மலர்
தேர்தல் செய்திகள்
புதுடெல்லி:
பிரதமர் மோடி சமீபத்தில் டெல்லியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது, “ராஜீவ்காந்தி கடந்த 1987-ம் ஆண்டு ஐ.என்.எஸ். விராட் போர்க்கப்பலை தனது குடும்பத்தினர் பயணம் செய்யும் “டாக்சி” போன்று விடுமுறை கால பொழுது போக்குக்காக பயன்படுத்தினார்” என்றார்.
குறிப்பாக சோனியாவின் இத்தாலி நாட்டு உறவினர்கள் அந்த கப்பலில் பயணம் மேற்கொண்டதாக மோடி குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் மூத்த தலைவர்களும், 1987-ம் ஆண்டு கடற்படை தளபதியாக இருந்த ராமதாசும் மறுத்துள்ளனர். இந்த நிலையில் மோடியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-
விடுமுறையில் பொழுதை கழிப்பதற்காக யாராவது விமானம் தாங்கி போர்க் கப்பலில் செல்வார்களா? அவர் சென்றது போர்க் கப்பல் அல்ல. மோடி வேண்டும் என்றே எனது குடும்பத்தினர் பற்றி விடாப்பிடியாக சில வெறித்தனமான கருத்துக்களை சொல்லி வருகிறார்.
1987-ம் ஆண்டு என் தந்தை ராஜீவ், கப்பலில் லட்சத் தீவுக்கு பயணம் மேற் கொண்ட போது நானும் உடன் சென்றேன். அந்த பயணம் விடுமுறையை கழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பயணம் அல்ல. பிரதமர் என்ற முறையில் என் தந்தை மேற் கொண்ட அரசு முறை பயணமாகும்.

ஆனால் மோடி திட்டமிட்டு என் தந்தை, பாட்டி பற்றி தொடர்ந்து குறை கூறி வருகிறார். அவர் ஏதோ ஒரு நெருக்கடியில் சிக்கி மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பது போல தெரிகிறது. அதனால்தான் என் குடும்பத்தினர் பற்றி இப்படி பேசி வருகிறார்.
என் குடும்பம் பற்றி எனக்கு அத்தகைய எண்ணம் இல்லை. ஆனால் என் மூதாதையர்கள் பற்றி பேசினால்தான் முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பி தப்பிக்கலாம் என்று மோடி நினைக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றாலும் எனது மூதாதையர்கள் பற்றி அவர் தொடர்ந்து விமர்சிப்பதை ஏற்க இயலாது. எனவே என் பெற்றோர், பாட்டி பற்றி மோடி கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு இனி நான் எந்தவித பதிலும் சொல்ல விரும்பவில்லை.
மோடி மட்டுமே தூங்காமல் இந்த நாட்டுக்காக உழைப்பது போல பேசுகிறார். இந்த விஷயத்தில் நான் பந்தயம் கட்ட தயார். மோடி இதுபற்றி என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா?
இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
இதற்கிடையே ராஜீவ் பயணம் குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துக்களை முன்னாள் கடற்படை தளபதி ராம்தாசும் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
1987-ம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் கொடுப்பதற்காக அப்போதைய பிரதமர் ராஜீவ் திருவனந்தபுரத்துக்கு வந்தார். பரிசளிப்பு விழா முடிந்ததும் அவர் அரசு முறை பயணமாக லட்சத்தீவுக்கு புறப்பட்டார்.
லட்சத்தீவில் நடந்த அரசு விழாவில் அவர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக ஐ.என்.எஸ். விராட் கப்பல் வரவழைக்கப்பட்டது. அந்த கப்பலில் ராஜீவும் சோனியாவும் சென்றனர்.
ராஜீவுடன் அந்த கப்பலில் வெளிநாட்டுக்காரர்கள் யாரும் பயணம் செய்யவில்லை. அந்த கப்பலில் ராஜீவ் பயணம் செய்த போது அனைத்து நடைமுறைகளும் சரியாக கடை பிடிக்கப்பட்டன.
எந்த விதி மீறலும் நடைபெறவில்லை. இந்த போர் கப்பலை ராஜீவ் தனது சொந்த உபயோகத்துக்காக பயன்படுத்தினார் என்று சொல்ல முடியாது.
இவ்வாறு கடற்படை முன்னாள் தளபதி ராம்தாஸ் கூறினார். இதே கருத்தை விராட் கப்பலின் முன்னாள் கமாண்டிங் அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.
ஆனால் மற்றொரு முன்னாள் கடற்படை அதிகாரியான வி.கே.ஜெட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ராஜீவும், சோனியாவும் பங்காரம் தீவுக்கு விடுமுறை சுற்றுலா செல்ல போர் கப்பலை பயன் படுத்தினார்கள். இதற்காக கடற்படை பணம் அதிக அளவில் செலவிடப்பட்டது. விராட் கப்பலில் பணி புரிந்தவன் என்ற முறையில் அதற்கு நான் சாட்சியாக உள்ளேன்” என்று கூறியுள்ளார். #RahulGandhi #PMModi
சென்னை:
நடிகர் கமல்ஹாசன் சூலூர் தொகுதி சட்டமன்ற இடைதேர்தலுக்கான பிரசாரத்துக்காக இன்று மதியம் சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-
கேள்வி:- வாக்குப்பெட்டி அறைக்குள் செல்ல முயன்ற விவகாரம்?
பதில்:-தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல் படவேண்டும் என்பது எல்லோருடைய எதிர் பார்ப்பும் கூட. அவர்கள் எல்லா கட்சியினரையும் அழைத்து பேசி இருக்கலாம். அப்படி செய்யாமல் வேட்பாளர்களிடம் மட்டும் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.
அது தவறு. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை திறக்க கூடாது என்பதே எங்களது வலியுறுத்தல். எந்த திருத்தங்களாக இருந்தாலும் அவற்றுக்கான சரியான விளக்கங்கள் கொடுத்த பிறகே செய்யப்பட வேண்டும்.
கே:- மதுரை மருத்துவமனையில் மின் தடையால் நோயாளிகள் பலியான சம்பவம் பற்றி?
ப:- சினிமா தியேட்டர் முதல் சின்ன சின்ன கடைகள் வரை ஜெனரேட்டர் வசதி இருக்கும்போது உயிரை காக்கும் மருத்துவமனைகளில் ஜெனரேட்டர் வசதி செய்யப்படவில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம்.
கே:- ஜெனரேட்டர் பழுதாகி இருந்ததாக கூறப்படுகிறதே?
ப:- எல்லாமே இருக்கிறது. ஆனால் பழுதாகி இருக்கிறது என்பதுதான் அரசின் பிரச்சினையே...அரசே பழுதுபட்டு இருக்கிறது என்பதுதான் என் கருத்து. அதை ஜெனரேட்டர் வைத்து சரி செய்ய முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #kamal #ElectionCommission #maduraigovernmenthospital
அரியானா மாநிலத்தின் ரோட்டக் நகரில் பிரதமர் நரேந்திர மோடி பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். இந்த பேட்டியின்போது அரசியல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையை காங்கிரஸ் கட்சியினர் ‘நடந்து முடிந்த கதை’ என்கின்றனர். இதே விவகாரம் தொடர்பாக முன்னர் கருத்து கூறிய ராஜீவ் காந்தி, ஒருபெரிய மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும் என்றார்.

பாராளுமன்ற தேர்தலில் முதல் மூன்றுகட்ட வாக்குப்பதிவு வரை எதிர்க்கட்சியினர் மோடியை வசைபாடி வந்தனர். பின்னர், காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்பதை அறிந்துகொண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை வசைபாடினர். இப்போது, அவுட் ஆகிவிட்டு வெளியே செல்லும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களைப்போல் தேர்தல் கமிஷனை வசைபாட தொடங்கியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். #AbusingEC #Modi #LSPolls
மும்பை:
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவார் தேர்தல் பிரசாரம் செய்ய சதாரா வருகை தந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓட்டு எந்திரங்களில் குளறுபடி நடைபெறுவதாக ஏற்பட்ட புகாரை தொடர்ந்து தேர்தலுக்கு முன்பு ஆந்திரா மற்றும் குஜராத்தில் நிபுணர்கள் மூலம் பரிசோதனை நடத்தி காட்டப்பட்டது. அதில் நான் கலந்து கொண்டேன்.
அப்போது ஓட்டுகள் பா.ஜனதா கட்சிக்கு சென்றதை நான் நேரில் பார்த்தேன். எந்திரத்தில் ஓட்டு போடும் பட்டனை நான் அழுத்தினேன். ஆனால் நான் போட்ட ஓட்டு தாமரைக்கு சென்றது. தனிப்பட்ட முறையில் எனக்கு அந்த அனுபவம் கிடைத்தது.
எனவே ஓட்டு எந்திரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அனைத்து ஓட்டு எந்திரங்களிலும் தவறு நடைபெறும் என சொல்லவில்லை. ஆனால் குளறுபடிகள் மற்றும் தவறுகள் நடைபெற வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது.

இந்த விவகாரம் குறித்து சில எதிர்க்கட்சிகள் கோர்ட்டில் முறையிட்டன. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை.
ராஜீவ் காந்திக்கு எதிராக பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுகள் துரதிர்ஷ்டவசமானது. நிரூபிக்க முடியாது. அவரது குடும்பம் நாட்டுக்காக பெரிய தியாகம் செய்துள்ளது. 2 தியாகிகளை நாட்டுக்கு தந்துள்ளது. எனவே அந்த குடும்பம் பற்றிய கருத்துக்களை மோடி மிக கவனமாக பேச வேண்டும்.
விடுமுறையை கழிக்க இந்திய ராணுவத்துக்கு சொந்தமான போர்க் கப்பலை ராஜீவ் காந்தி தவறான முறையில் பயன்படுத்தினார் என மோடி குற்றம் சாட்டியுள்ளார். இந்திய ராணுவ கப்பலை பயன்படுத்தியதில் ஆட்சே பனை எதுவுமில்லை.
ராணுவ மந்திரியாக இருந்த போது போர்க்கப்பலில் நான் அந்தமான் சென்று இருக்கிறேன். அது கடலில் தான் பயணம் செய்கிறது. பிரதமராக இருப்பவர் அதை பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது.
இவ்வாறு சரத்பவார் கூறினார். #SharadPawar #PMModi
பாதுகாப்பு படைகளில் பணியாற்றுபவர்கள் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகளுக்கு வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவதால் அவரவர்களுக்கு வாக்குரிமை உள்ள தொகுதிகளில் முன்கூட்டியே அவர்கள் வாக்களித்துவிட்டு செல்வதற்கு வசதி செய்து கொடுக்கப்படுகிறது.
தபால் ஓட்டு என்றழைக்கப்படும் இந்த வாக்குகள்தான் வாக்கு எண்ணிக்கையின் முதல்சுற்றில் எண்ணப்படும். அவ்வகையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியாவில் இருந்து பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒரு வீரர், சுயேட்சை வேட்பாளரும் நடிகையுமான சுமலதாவுக்கு தான் வாக்களித்த காட்சியை செல்பியாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.
இதற்கு சிலர் கண்டனம் தெரிவித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக சிலர் தேர்தல் கமிஷனில் ஆதாரத்துடன் புகார் அளித்தனர். இதனடிப்பையில் நடவடிக்கை எடுத்த தேர்தல் கமிஷன், எண்ணிக்கையின்போது அந்நபரின் வாக்கை தள்ளுபடி செய்யுமாறு தொகுதி தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. #LSPolls #Postalvote #CRPFSoldier #CRPFSoldierPostalvote
ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரபல செய்தி நிறுவனத்துக்கு இன்று பேட்டியளித்தார். இந்த பேட்டியின்போது அரசியல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
நாட்டுக்கு எதுவுமே செய்யாத பிரதமர் நரேந்திர மோடியின் தேசபக்தி போலியானது என்று குற்றம்சாட்டிய கெஜ்ரிவால், தனது ஆட்சியின் சாதனை என்று கூறிக்கொள்ள மோடியிடம் எதுவுமே இல்லாததால் ராணுவ வீரர்களின் சாகசங்களை எல்லாம் தனது சாதனை என்றுகூறி மக்களிடம் ஓட்டு கேட்கிறார்.

என்னைப் பொருத்தவரை மோடியைவிட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆயிரம் மடங்கு மேலானவர். மோடியும் அமித் ஷாவும் மீண்டும் பதவிக்கு வரக்கூடாது என்பதுதான் எங்களின் முக்கிய நோக்கம். இவர்களை தடுக்க நாங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு அளிப்போம்.
டெல்லியில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ், கேரளாவில் மா.கம்யூனிஸ்ட், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ், ஆந்திராவில் தெலுங்கு தேசம், டெல்லியில் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற முடியாதவாறு காங்கிரஸ் கட்சி இடையில் நின்று குழி பறிக்கிறது.
அவ்வகையில், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்து மோடி பிரதமரானால் அதற்கு ராகுல் காந்திதான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #RahulGandhi #NarendraModi #ArvindKejriwal
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் 5 கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து உள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
பீகாரில் பா.ஜனதா, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன.
இதே போல் காங்கிரஸ், லல்லுபிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதாதளம், ராஷ்டீரிய லோக் சமதா கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
6-வது கட்ட தேர்தல் வருகிற 12-ந் தேதி நடக்கிறது. மொத்தம் 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் பீகார் மாநிலத்தில் லால்மீகி நகர், ஷிவான், மகராஜ் கஞ்ச், கிழக்கு சம்பரன் உள்ளிட்ட 8 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதில் ஷிவான் தொகுதி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனென்றால் இத்தொகுதியில் இரண்டு தாதாக்களின் மனைவிகளான ஹினா ஷஹாப், கவிதாசிங் நேருக்கு நேர் களத்தில் மோதுகின்றனர்.
லல்லுவின் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சி சார்பில் ஹினா ஷஹாப் போட்டியிடுகிறார். இவரது கணவர் முகமது ஷஹபுதீன் பிரபல தாதாவான இவர் அரசியலில் நுழைந்து ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் 4 முறை எம்.பி.யாகவும், இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.
தற்போது அவர் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். முகமது ஷஹபுதீன் 2007-ம் ஆண்டு தண்டனை பெற்றதால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அவரது மனைவி ஹினா ஷஹாப்புக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை லல்லு பிரசாத் வழங்கினார்.
ஆனால் அவர் 2009, 2014-ம் ஆண்டுகளில் தோல்வியை சந்தித்துள்ளார். தற்போது அவர் 3-வது முறையாக போட்டியிடுகிறார்.
ஐக்கிய ஜனதாதளம் சார்பில் போட்டியிடும் கவிதா சிங்கின் கணவர் அஜய்சிங்கும் பிரபல தாதா ஆவார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. அஜய் சிங் தற்போது அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
2 தாதாக்களின் மனைவிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஷிவான் தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது. இருவரில் யார்? வெற்றிக்கனியை பறிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. #LokSabhaElections2019 #SiwanConstituency

புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மாநில வாரியாக சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
இதுவரை அவர் சுமார் 300 பொதுக்கூட்டங்களில் பேசி பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டி உள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் இன்று 6-வது கட்ட ஓட்டுப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதையடுத்து 7-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
7-வது கட்ட தேர்தலில் 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் தலா 13 தொகுதிகளிலும் மேற்கு வங்காளத்தில் 9 தொகுதிகளிலும், பீகாரில் 8 தொகுதிகளிலும், இமாச்சலபிரதேசத்தில் 4 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட்டில் 3 தொகுதியிலும், சண்டிகாரில் ஒரு தொகுதியிலும் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த 59 தொகுதிகளில் உத்தரபிரதேசம், மேற்கு வங்காளத்தில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள 23 தொகுதிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளன. இந்த தொகுதிகளில் பா.ஜனதா, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் முற்றுகையிட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள்.

பிரதமர் மோடி இந்த 23 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே திட்டமிட்டுள்ள பொதுக்கூட்டங்களை தவிர மேலும் 10 பொதுக்கூட்டங்களில் பேச அவர் முடிவு செய்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் காசிப்பூர், ராபர்ஸ்ட் கஞ்ச், கோசி, சந்தலி, மிர்சாபூர் ஆகிய இடங்களிலும் மேற்கு வங்காளத்தில் பசிர்கட், டைமண்ட் ஆர்பர், மதுராபூர், டம்டண்ட் ஆகிய இடங்களிலும் மோடி பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
7-வது கட்ட தேர்தல் பிரசாரம் மே மாதம் 17-ந் தேதி நிறைவு பெறுகிறது. தேவைப்பட்டால் மேலும் 5 இடங்களில் மோடியை பேச வைக்க பா.ஜனதா மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். #Loksabhaelections2019 #BJP #PMModi
கொல்கத்தா:
ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று மேற்கு வங்க மாநிலம் சென்றார்.
அங்கு அவர் மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். புதிய ஆட்சியை அமைப்பதில் மாநில கட்சிகள் எத்தகைய பங்கு வகிக்க வேண்டும் என்று அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
அதன் பிறகு மம்தா பானர்ஜியும், சந்திரபாபு நாயுடுவும் கரக்பூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது சந்திரபாபு நாயுடுவை பேசும்படி மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டார். இதையடுத்து அந்த கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசும் போது கூறியதாவது:-

மேற்கு வங்க மாநிலத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக மோடி இதுவரை 16 தடவை வந்து சென்றுள்ளார். இன்னும் அவர் வரப்போவதாக சொல்கிறார்கள். மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளை மேற் கொள்ள மோடி எப்போதாவது வந்தது உண்டா? இதுபற்றி மோடி பதில் சொல்ல வேண்டும்.
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவுக்கு தோல்வி உறுதியாகி விட்டது. அதை உணராமல் மோடி போர்க்களத்தில் நின்று கொண்டு இருக்கிறார். நாங்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற போராடிக் கொண்டு இருக்கிறோம்.
நமது நாடு காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு ஆட்சியில் இருந்து மோடி விரட்டப்பட வேண்டும். தற்போது தேசிய அரசியலில் மம்தா பானர்ஜி முக்கிய பங்காற்றி வருகிறார்.
அடுத்து மத்தியில் புதிய ஆட்சி அமைப்பதில் மம்தா பானர்ஜியின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். எனவே நீங்கள் அவர் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார். #ChandrababuNaidu
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடை பெற்றது.
இந்த தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டணிக்கும், எதிர்க் கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
தேர்தலின்போது கேரளாவில் உள்ள பல வாக்குச் சாவடிகளில் கள்ள ஓட்டுகள் பதிவானதாகவும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இதில் ஈடுபட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டது. மேலும் ஓட்டுச்சாவடிகளில் வாக்குப்பதிவின் போது வெப் கேமிரா மூலம் பதிவு செய்யப்பட்ட சில வீடியோ காட்சிகளும் வெளியானது.
அந்த வீடியோ காட்சியில் பெண்கள் உள்பட சிலர் ஓட்டுப்போட்டவுடன் அடையாள மையை தலையில் தேய்த்து அழித்துவிட்டு மீண்டும் ஓட்டுப் போட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் நடத்திய விசாரணையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் உள்பட 3 பெண்கள் கள்ள ஓட்டுப் போட்டது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் 25 ஆயிரம் கேரள போலீசாரின் தபால் ஓட்டுகள் கள்ளத்தனமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு போடப்பட்டதாக புதிய சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.
கேரளாவில் போலீசாருக்காக சங்கம் செயல்பட்டு வருகிறது. போலீசாரின் தபால் ஓட்டுகளை அந்தந்த போலீசாரின் முகவரிக்கு அனுப்பி வைப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டார். அவர்தான் தபால் ஓட்டுகளை போலீசாரின் முகவரிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் இந்த தபால் ஓட்டுகள் மொத்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆதரவு சங்க தலைவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த ஓட்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர்களுக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் சில போலீசாரை மிரட்டி அவர்களது தபால் ஓட்டுகளை பெற்று அதையும் முறைகேடாக பயன்படுத்தியதாகவும் புகார் எழுந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் போலீஸ் சங்கத்தை சேர்ந்த ஒரு போலீஸ்காரர் செல்போனில் மற்றொரு போலீஸ்காரருடன் பேசுவது போன்ற ஆடியோ வெளியானது. அவர் தனது பேச்சில் போலீசாரின் தபால் ஓட்டுகளை மொத்தமாக பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு அதை பதிவு செய்துவிட்டனர் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த போலீஸ்காரர் பத்ம நாபபுரம் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருப்பதும் அவரது பேச்சின் மூலம் தெரியவந்தது.
இதன் மூலம்போலீசாரின் தபால் ஓட்டுக்களில் தில்லு முல்லு நடந்து இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு மேலும் வலுப்பெற்றது. இந்த ஆடியோ வேகமாக பரவியதால் இது போலீசார் மத்தியிலும், கேரள அரசியல் கட்சியினரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா கவனத்திற்கு சென்றது அவர் இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி. வினோத் குமாருக்கு உத்தரவிட்டார். அவரும் விசாரணை நடத்தி அது தொடர்பான அறிக்கையை டி.ஜி.பி.க்கு தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில் ‘கேரள போலீசாரின் தபால் ஓட்டுக்களை மொத்தமாக வாங்கி அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆதரவு போலீஸ் சங்கத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கு அனுப்பி வைத்ததும் அந்த தபால் ஓட்டுகள் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களுக்கு போடப்பட்டதும் உண்மைதான்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கை டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா மூலம் கேரள தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து கேரளா தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். வருகிற 15-ந் தேதிக்குள் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த புகார் தொடர்பாக டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
போலீசாரின் தபால் ஓட்டுகளில் முறைகேடு நடந்தது தொடர்பான புகார் பற்றி விசாரணை நடத்தப்பட்டது. கேரளாவை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் இதில் முக்கியபங்காற்றியது தெரியவந்துள்ளது. அவர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த விவகாரத்தில் 4 போலீசாருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது. அவர்கள் பற்றியும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பான அனைத்து விவரங்களும் மாநில தலைமை தேர்தல் கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள போலீஸ்காரர், கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனின் முன்னாள் பாதுகாப்பு படை வீரர் ஆவார். அவர் பாதுகாப்பு பணியில் 5 மாதங்கள் பணியாற்றி உள்ளார்.
இதற்கிடையில் கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா, போலீசாரின் 25 ஆயிரம் தபால் ஓட்டுகள் கள்ளத்தனமாக கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களுக்கு போடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் போலீசாரை மிரட்டி அவர்களது தபால் ஓட்டுகளை போலீஸ் சங்க தலைவர்கள் கைப்பற்றி அந்த ஓட்டுகளை கம்யூனிஸ்டு வேட்பாளர்களுக்கு அவர்கள் போட்டு உள்ளதாக போலீஸ் உளவுப்பிரிவு தலைவர் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது அதிர்ச்சியளிக்கிறது. போலீசாரின் தபால் ஓட்டுகளை முழுமையாக திரும்ப பெற்று அவர்கள் மீண்டும் ஓட்டுப்போட வாய்ப்பு அளிக்க வேண்டும். இந்த செயல் மாநில போலீஸ் துறைக்கே அவமானம் என்று கூறி உள்ளார். #LokSabhaElections2019
தேனி:
தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் கம்மவார் சரசுவதி நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடி எண் 67 மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடுகபட்டி சங்கர நாராயணன் நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடி எண் 167 ஆகிய 2 வாக்கு சாவடிகளிலும் வருகிற 19ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பாராளுமன்ற தேர்தலுக்கும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் மறு வாக்கு பதிவு நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்தல் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் அனைத்து வேட்பாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல இந்த வாக்கு சாவடி பகுதிகளில் ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு தண்டோரா மூலம் அறிவிப்பு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மறுவாக்கு பதிவு நடப்பதை முன்னிட்டு ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் ஏற்கனவே பணியில் உள்ள பறக்கும் படை குழுக்களுடன், தலா 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2 வாக்கு சாவடிகளிலும் மறுவாக்கு பதிவுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளது.

மறுவாக்கு பதிவு பகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 1950 என்ற தொலைபேசி எண்ணிலும், சி-விஜில் என்ற செல்போன் ஆப் மூலமாகவும் தெரிவிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார். #LokSabhaElections2019






