search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள போலீசாரின் 25 ஆயிரம் தபால் ஓட்டுகள் தில்லுமுல்லு
    X

    கேரள போலீசாரின் 25 ஆயிரம் தபால் ஓட்டுகள் தில்லுமுல்லு

    25 ஆயிரம் கேரள போலீசாரின் தபால் ஓட்டுகள் கள்ளத்தனமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு போடப்பட்டதாக புதிய சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. #LokSabhaElections2019

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடை பெற்றது.

    இந்த தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டணிக்கும், எதிர்க் கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

    தேர்தலின்போது கேரளாவில் உள்ள பல வாக்குச் சாவடிகளில் கள்ள ஓட்டுகள் பதிவானதாகவும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இதில் ஈடுபட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டது. மேலும் ஓட்டுச்சாவடிகளில் வாக்குப்பதிவின் போது வெப் கேமிரா மூலம் பதிவு செய்யப்பட்ட சில வீடியோ காட்சிகளும் வெளியானது.

    அந்த வீடியோ காட்சியில் பெண்கள் உள்பட சிலர் ஓட்டுப்போட்டவுடன் அடையாள மையை தலையில் தேய்த்து அழித்துவிட்டு மீண்டும் ஓட்டுப் போட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் நடத்திய விசாரணையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் உள்பட 3 பெண்கள் கள்ள ஓட்டுப் போட்டது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் 25 ஆயிரம் கேரள போலீசாரின் தபால் ஓட்டுகள் கள்ளத்தனமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு போடப்பட்டதாக புதிய சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

    கேரளாவில் போலீசாருக்காக சங்கம் செயல்பட்டு வருகிறது. போலீசாரின் தபால் ஓட்டுகளை அந்தந்த போலீசாரின் முகவரிக்கு அனுப்பி வைப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டார். அவர்தான் தபால் ஓட்டுகளை போலீசாரின் முகவரிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆனால் இந்த தபால் ஓட்டுகள் மொத்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆதரவு சங்க தலைவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த ஓட்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர்களுக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் சில போலீசாரை மிரட்டி அவர்களது தபால் ஓட்டுகளை பெற்று அதையும் முறைகேடாக பயன்படுத்தியதாகவும் புகார் எழுந்தது.


     

    இந்த நிலையில் சமீபத்தில் போலீஸ் சங்கத்தை சேர்ந்த ஒரு போலீஸ்காரர் செல்போனில் மற்றொரு போலீஸ்காரருடன் பேசுவது போன்ற ஆடியோ வெளியானது. அவர் தனது பேச்சில் போலீசாரின் தபால் ஓட்டுகளை மொத்தமாக பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு அதை பதிவு செய்துவிட்டனர் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த போலீஸ்காரர் பத்ம நாபபுரம் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருப்பதும் அவரது பேச்சின் மூலம் தெரியவந்தது.

    இதன் மூலம்போலீசாரின் தபால் ஓட்டுக்களில் தில்லு முல்லு நடந்து இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு மேலும் வலுப்பெற்றது. இந்த ஆடியோ வேகமாக பரவியதால் இது போலீசார் மத்தியிலும், கேரள அரசியல் கட்சியினரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா கவனத்திற்கு சென்றது அவர் இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி. வினோத் குமாருக்கு உத்தரவிட்டார். அவரும் விசாரணை நடத்தி அது தொடர்பான அறிக்கையை டி.ஜி.பி.க்கு தாக்கல் செய்தார்.

    அந்த அறிக்கையில் ‘கேரள போலீசாரின் தபால் ஓட்டுக்களை மொத்தமாக வாங்கி அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆதரவு போலீஸ் சங்கத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கு அனுப்பி வைத்ததும் அந்த தபால் ஓட்டுகள் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களுக்கு போடப்பட்டதும் உண்மைதான்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்த அறிக்கை டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா மூலம் கேரள தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து கேரளா தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். வருகிற 15-ந் தேதிக்குள் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டு உள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    போலீசாரின் தபால் ஓட்டுகளில் முறைகேடு நடந்தது தொடர்பான புகார் பற்றி விசாரணை நடத்தப்பட்டது. கேரளாவை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் இதில் முக்கியபங்காற்றியது தெரியவந்துள்ளது. அவர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த விவகாரத்தில் 4 போலீசாருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது. அவர்கள் பற்றியும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பான அனைத்து விவரங்களும் மாநில தலைமை தேர்தல் கமி‌ஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள போலீஸ்காரர், கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனின் முன்னாள் பாதுகாப்பு படை வீரர் ஆவார். அவர் பாதுகாப்பு பணியில் 5 மாதங்கள் பணியாற்றி உள்ளார்.

    இதற்கிடையில் கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா, போலீசாரின் 25 ஆயிரம் தபால் ஓட்டுகள் கள்ளத்தனமாக கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களுக்கு போடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் போலீசாரை மிரட்டி அவர்களது தபால் ஓட்டுகளை போலீஸ் சங்க தலைவர்கள் கைப்பற்றி அந்த ஓட்டுகளை கம்யூனிஸ்டு வேட்பாளர்களுக்கு அவர்கள் போட்டு உள்ளதாக போலீஸ் உளவுப்பிரிவு தலைவர் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது அதிர்ச்சியளிக்கிறது. போலீசாரின் தபால் ஓட்டுகளை முழுமையாக திரும்ப பெற்று அவர்கள் மீண்டும் ஓட்டுப்போட வாய்ப்பு அளிக்க வேண்டும். இந்த செயல் மாநில போலீஸ் துறைக்கே அவமானம் என்று கூறி உள்ளார். #LokSabhaElections2019

    Next Story
    ×