என் மலர்
செய்திகள்

புதிய ஆட்சி அமைப்பதில் மம்தா முக்கிய பங்கு வகிப்பார் - சந்திரபாபு நாயுடு
கொல்கத்தா:
ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று மேற்கு வங்க மாநிலம் சென்றார்.
அங்கு அவர் மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். புதிய ஆட்சியை அமைப்பதில் மாநில கட்சிகள் எத்தகைய பங்கு வகிக்க வேண்டும் என்று அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
அதன் பிறகு மம்தா பானர்ஜியும், சந்திரபாபு நாயுடுவும் கரக்பூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது சந்திரபாபு நாயுடுவை பேசும்படி மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டார். இதையடுத்து அந்த கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசும் போது கூறியதாவது:-

மேற்கு வங்க மாநிலத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக மோடி இதுவரை 16 தடவை வந்து சென்றுள்ளார். இன்னும் அவர் வரப்போவதாக சொல்கிறார்கள். மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளை மேற் கொள்ள மோடி எப்போதாவது வந்தது உண்டா? இதுபற்றி மோடி பதில் சொல்ல வேண்டும்.
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவுக்கு தோல்வி உறுதியாகி விட்டது. அதை உணராமல் மோடி போர்க்களத்தில் நின்று கொண்டு இருக்கிறார். நாங்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற போராடிக் கொண்டு இருக்கிறோம்.
நமது நாடு காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு ஆட்சியில் இருந்து மோடி விரட்டப்பட வேண்டும். தற்போது தேசிய அரசியலில் மம்தா பானர்ஜி முக்கிய பங்காற்றி வருகிறார்.
அடுத்து மத்தியில் புதிய ஆட்சி அமைப்பதில் மம்தா பானர்ஜியின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். எனவே நீங்கள் அவர் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார். #ChandrababuNaidu






