search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேசம், மேற்கு வங்கத்தில் மேலும் 10 கூட்டங்களில் பிரதமர் மோடி பிரசாரம்
    X

    உத்தரபிரதேசம், மேற்கு வங்கத்தில் மேலும் 10 கூட்டங்களில் பிரதமர் மோடி பிரசாரம்

    உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் மேலும் 10 கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். #Loksabhaelections2019 #BJP #PMModi

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மாநில வாரியாக சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    இதுவரை அவர் சுமார் 300 பொதுக்கூட்டங்களில் பேசி பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டி உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் இன்று 6-வது கட்ட ஓட்டுப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதையடுத்து 7-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    7-வது கட்ட தேர்தலில் 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் தலா 13 தொகுதிகளிலும் மேற்கு வங்காளத்தில் 9 தொகுதிகளிலும், பீகாரில் 8 தொகுதிகளிலும், இமாச்சலபிரதேசத்தில் 4 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட்டில் 3 தொகுதியிலும், சண்டிகாரில் ஒரு தொகுதியிலும் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த 59 தொகுதிகளில் உத்தரபிரதேசம், மேற்கு வங்காளத்தில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள 23 தொகுதிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளன. இந்த தொகுதிகளில் பா.ஜனதா, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் முற்றுகையிட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள்.

     


     

    பிரதமர் மோடி இந்த 23 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே திட்டமிட்டுள்ள பொதுக்கூட்டங்களை தவிர மேலும் 10 பொதுக்கூட்டங்களில் பேச அவர் முடிவு செய்துள்ளார்.

    உத்தரபிரதேசத்தில் காசிப்பூர், ராபர்ஸ்ட் கஞ்ச், கோசி, சந்தலி, மிர்சாபூர் ஆகிய இடங்களிலும் மேற்கு வங்காளத்தில் பசிர்கட், டைமண்ட் ஆர்பர், மதுராபூர், டம்டண்ட் ஆகிய இடங்களிலும் மோடி பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    7-வது கட்ட தேர்தல் பிரசாரம் மே மாதம் 17-ந் தேதி நிறைவு பெறுகிறது. தேவைப்பட்டால் மேலும் 5 இடங்களில் மோடியை பேச வைக்க பா.ஜனதா மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். #Loksabhaelections2019 #BJP #PMModi

    Next Story
    ×