என் மலர்
விருதுநகர்
- பட்டாசு ஆலையில் உள்ள ஒரு அறையில் மருந்து கலக்கும் பணியின்போது விபத்து.
- பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அப்பையநாயக்கன்பட்டியில் சாய்நாத் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகிறார்கள். இன்று காலை பட்டாசு ஆலையில் உள்ள ஒரு அறையில் மருந்து கலக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
இதில், 6 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயம் அடைந்த மேலும் ஒருவர், மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக ஏற்கனவே 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது மேலும், 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக போர்மேன்கள் கணேஷ், சதீஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- வெடி விபத்தில் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
- ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசிபாலன், மேலாளர் தாஸ், போர்மேன் பிரகாஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அப்பையநாயக்கன்பட்டியில் சாய்நாத் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகிறார்கள். தற்போது பட்டாசு ஆலையில் வெடிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இன்று காலை பட்டாசு ஆலையில் உள்ள ஒரு அறையில் மருந்து கலக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன், நாகராஜ், கண்ணன், சிவக்குமார், காமராஜ், மீனாட்சிசுந்தரம் ஆகிய 6 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் இடிபாடுகளில் சிதறி கிடந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசிபாலன், மேலாளர் தாஸ், போர்மேன் பிரகாஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, உரிய பாதுகாப்பின்றி தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- வெடி விபத்தின் சத்தம் சில கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டது.
- வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி, சாத்தூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் விரைந்தன.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அப்பையநாயக்கன்பட்டியில் சாய்நாத் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகிறார்கள். தற்போது பட்டாசு ஆலையில் வெடிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர். பட்டாசு ஆலையில் உள்ள ஒரு அறையில் மருந்து கலக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது உராய்வு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் அருகில் இருந்த அறைகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளிலும் தீ பரவி பயங்கரமாக வெடித்தது. வெடி விபத்தின் சத்தம் சில கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டது.
இந்த விபத்தில் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன், நாகராஜ், கண்ணன், சிவக்குமார், காமராஜ், மீனாட்சிசுந்தரம் ஆகிய 6 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி, சாத்தூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் விரைந்தன. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் இடிபாடுகளில் சிதறி கிடந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சாத்தூர் பகுதியில் இன்று காலை நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்து 6 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- உணவுத் திருவிழாக்கள் போன்ற அதிக மக்கள் கூடும் இடங்களிலும் இவை தொடர்ந்து நடத்தப்படும்.
- தங்கள் ஆலோசனைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நன்றிகள் என தெரிவித்துள்ளார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்து ஒருவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
90களில் தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவிலேயே அதிக அளவில் புரோட்டா தயாரிக்கும் மாவட்டமாக விளங்கியது விருதுநகர் எனலாம்.
விருதுநகர் எண்ணெய் புரோட்டா எல்லோரும் அறிந்தது. பர்மா கடை பற்றி எல்லோரும் பேசுவார்கள். ஆனால் தாஜ்,கார்னேசன், கமாலியா மற்றும் பெயர் இல்லாத கடைகளும் ஏராளமாக இருந்தன. அவர்கள் எந்த விதத்திலும் பர்மாவிற்கு குறைந்தவர்கள் இல்லை.
பானு என்கிற கடை இப்போதும் இருக்கிறது. அவர்கள் சாதாரணமாக புரோட்டாவிற்கு கொடுக்கும் சால்னாவே பெப்பர் சிக்கன் கிரேவியிலிருந்து சிக்கனை எடுத்துவிட்டு ஊற்றினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்.
மாவட்டத் தலைநகர் விருதுநகராக இருந்தாலும் விருதுநகர் மாவட்டத்தின் கிங் சிவகாசி தான் என்பது போல, புரோட்டா தயாரிப்பிலும் சிவகாசி தான் நம்பர் ஒன். அங்கே நாள் முழுவதும் தீப்பெட்டி, பட்டாசு, காலண்டர்,டைரி, நோட் புக் மற்ற பிரிண்டிங் வேலைகள் என்று குடும்பத்தோடு வேலை பார்த்துவிட்டு, மாலை வேளையில் பார்சல் வாங்குவதற்கு என்றே நேர்ந்து விடப்பட்ட அவர்கள் குடும்பத்தில் ஒருவனை வாளியோடு அனுப்பிவிடுவார்கள்.
அங்கே எல்லா கடைகளிலும் சாப்பிடும் இடம் சிறியதாகவும் பார்சல் வாங்க நிற்பவர்கள் பெரிய இடத்தில் காத்திருக்கும்படிதான் அமைத்திருப்பார்கள். நான்கு பேர் சாப்பிட்டால் 40 பேர் பார்சலுக்கு நிற்பார்கள். அங்கேயும் விஜயம், ஜானகிராம், பெல் என சொல்லிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு கடையுமே ஒரு பிராண்ட் தான்.
அருப்புக்கோட்டையில் அந்த சமயத்தில் ஏராளமான தறி நெசவாளிகள். அவர்களும் சாயங்காலம் ஆகிவிட்டால் கடைகளில்தான். இனிமை,நடராஜ், முக்கு,கடற்கரை, ஆழாக்கு கடை என ஏகப்பட்ட கடைகள்.
ஒவ்வொரு கடை சால்னாவும் texture, consistency, taste ஒவ்வொன்றிலும் வித்தியாசமாக இருக்கும். வாளியை திறந்து பார்த்த உடனேயே சிலர் என்னடா இனிமையில் வாங்க சொன்னேன் நடராஜுல வாங்கிட்டு வந்துட்ட என்று சொல்லும் அளவிற்கு இருக்கும்.
ராஜபாளையத்திலும் சொல்லவே வேண்டாம். ஆனந்தாஸ் பாம்பே ரஹமத் என ஏராள கடைகள். ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூரும் அப்படித்தான்.
சேத்தூர் கண்ணாடி கடை மட்டன் சுக்கா சாப்பிட்டவர்களுக்கு அது ஒரு பென்ச் மார்க்காகவே மாறிவிடும். வேறு எங்கு சாப்பிட்டாலும் அந்த கடை மாதிரி இருந்தது இல்லை என்று யோசிக்க வைத்து விடும்.
விருதுநகர் மாவட்ட கடைகளில் ஒரு விசேஷம். நீங்கள் புரோட்டா வாங்கினாலும் சரி பூரி வாங்கினாலும் சரி கேட்காமலேயே ஒரு கரண்டி நல்ல தேங்காய் சட்டினி வைத்து விடுவார்கள். வைக்கும் போது தான் நாம் பிடிக்கவில்லை என்றால் வேண்டாம் என்று சொல்ல வேண்டும். அதேபோல ரவா தோசை வாங்கினால் சட்னி சாம்பார் ஊற்றிவிட்டு பக்கத்திலேயே ஒரு ஸ்பூன் சீனியும் வைத்து விடுவார்கள். அதுதான் பா காம்பினேஷன் என்பார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சாத்தூர் சேவு, பாலவனத்தம் சீரணி என ஸ்பெஷல் ஐட்டங்களும் இங்கேதான்.
இப்படிப்பட்ட மாவட்டத்தில் உணவு திருவிழா நடத்தினால் எப்படி இருக்கும்? அனேகமாக ஜனவரி 17 மற்றும் 18 தேதிகளில் விருதுநகரில் உணவுத் திருவிழா நடைபெற இருக்கிறது. உணவு மட்டுமின்றி நிறைய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் தளவாய் புரம் பகுதிகளில் தான் ஏராளமான நைட்டி தொழிற்சாலைகள் உள்ளன. பெரிய ஷோரூம்களில் விற்கப்படும் நைட்டிகள் தவிர எல்லா விதமான ரகங்களிலும் அங்கேதான் நைட்டிகள் தயாரிக்கப்படுகிறது.
நூறு ரூபாய் முதல் 2000 ரூபாய் வரையிலான ரகங்கள் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் தயாரிக்கப்படுகின்றன.
இந்த உணவுத் திருவிழாக்களில் அதுபோன்ற நைட்டி அவுட்லெட்கள் சிலவற்றை அமைத்தால் கம்ப்ளீட் பேக்கேஜ் ஆக இருக்கும். விருதுநகர் மாவட்டத்தின் மற்ற தயாரிப்புகளான நோட்புக்குகள் ஸ்டேஷனரிகள் போன்ற ஸ்டால்கள் இருந்தாலும் சிறப்பாக இருக்கும்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தினர் தயைகூர்ந்து பரிசீலிக்க வேண்டும் என்று ஒருவர் எக்ஸ் தளத்தில் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
இதற்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எக்ஸ் தளத்தில் பதில் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-
உங்களுடைய ஆலோசனைகளுக்கு நன்றி.
விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் நைட்டி உள்ளிட்ட ஆடைகள் மற்றும் பல்வேறு உபயோகப் பொருட்களை இது போன்ற மக்கள் கூடும் விழாக்களில் சந்தைப்படுத்துகிறோம். இதன் மூலமாக மகளிர் சுய உதவி குழு பெண்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. உணவுத் திருவிழாக்கள் போன்ற அதிக மக்கள் கூடும் இடங்களிலும் இவை தொடர்ந்து நடத்தப்படும்.
தங்கள் ஆலோசனைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நன்றிகள் என தெரிவித்துள்ளார்.
- அகழாய்வில் இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
- அல்லிமொட்டு வடிவ ஆட்டக்காயில், தயரித்தவர்களின் கைரேகை பதிவாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அகழாய்வில் இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில் ஏராளமான சங்கு வளையல்கள், சுடுமண் பொம்மைகள், செப்புக்காசுகள், வேட்டைக்கு பயன்படுத்திய பழங்கால கருவிகள் உள்பட 2,700-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்றைய அகழாய்வு பணியின்போது, சுடுமண்ணால் ஆன நீள்வட்டம், கூம்பு வடிவம் மற்றும் அல்லிமொட்டு வடிவங்களில் ஆட்டக்காய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அல்லிமொட்டு வடிவ ஆட்டக்காயில், தயரித்தவர்களின் கைரேகை பதிவாகியுள்ளது. கைரேகை பதிவான நிலையில் ஆட்டக்காய் அரிதாக கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
- வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தி பக்தர்களை மலையேற அனுமதித்தனர்.
- மலை பாதைகளில் ஆங்காங்கே வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவா சையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
மார்கழி மாத பிரதோஷம் (இன்று) மற்றும் அமாவாசையை (30-ந்தேதி) முன்னிட்டு இன்று முதல் வருகிற 31-ந்தேதி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பிரதோஷங்களில் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சிறப்பானதாக கருதப்படுகிறது.
அதன்படி இந்த வருடத்தில் இறுதியில் அமைந்துள்ள சனி பிரதோஷமான இன்று சதுரகிரிக்கு செல்ல நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே மலையடிவாரமான தாணிப்பாறையில் திரண்டனர். காலை 6.30 மணிக்கு நுழைவு வாயில் திறக்கப்பட்டது.
வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தி பக்தர்களை மலையேற அனுமதித்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை மலையேறி சென்று சுந்தர மகாலிங்கத்தை தரிசனம் செய்தனர்.
மலை பாதைகளில் ஆங்காங்கே வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கோவில் பகுதியில் செய்யப்பட்டிருந்தது. காலை 10 மணி வரை திரளான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தர-சந்தன மகாலிங்கத்திற்கு 18 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராம கிருஷ்ணன் செய்துள்ளனர்.
நாளை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- வெம்பக்கோட்டை - விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளைப் பார்வையிட்டேன்.
- சங்கத் தமிழர்கள் அரிய கற்களால் ஆன அணிகலன்களை உற்பத்தி செய்து அணிந்தது தெரிகின்றது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கூடுதலாக 2 குழிகள் தோண்டுவதற்கு அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
அகழாய்வு பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். அப்போது அவர் அகழாய்வு குழிகளை சுற்றி பார்வையிட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை - விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளைப் பார்வையிட்டேன்.

அகழாய்வில், இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், 2000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது சுடுமண்ணாலான சிவப்பு நிற வண்ணம் தீட்டப்பட்ட சிகை அலங்காரத்துடன் கூடிய மனிதனின் தலை கிடைத்துள்ளது.
"கொடுமணம் பட்ட ...... நன்கலம்" (பதிற்றுப்பத்து 67) சங்கப் புலவர் கபிலரின் வரிகளிலிருந்து, சங்கத் தமிழர்கள் அரிய கற்களால் ஆன அணிகலன்களை உற்பத்தி செய்து அணிந்தது தெரிகின்றது.
அந்த வகையில், சூதுபவள மணிகள், மாவு கற்களால் செய்யப்பட்ட உருண்டை - நீள்வட்ட வடிவ மணிகள், அரிய வகை செவ்வந்திக் கல் மணிகள் கிடைத்துள்ளன. மேலும், சுடுமண்ணாலான பல வடிவமுடைய ஆட்டக் காய்கள், திமில் உள்ள காளையின் தலை முதல் முன்கால் பகுதி வரை கிடைத்துள்ளது அவர்களின் அணிகலன் வடிவமைப்பு கலை, விளையாட்டு மீதான ஆர்வத்தை பறைசாற்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.
- சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.
- பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
விருதுநகர்:
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 28-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தால் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது ஆற்றில் நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
- கரைபுரண்டு ஓடி வரும் வைகை தண்ணீர் திடீரென அருகிலுள்ள உலக்குடி காலனி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் உலக்குடி காலனி பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வைகை அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது ஆற்றில் நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் விரகனூர் அணைக்கட்டு வழியாக அத்திகுளம் அணையை வந்தடைந்து பின்னர் அங்கிருந்து கிருதுமால் ஆற்றின் வழியாக உலக்குடி மற்றும் மானூர் கண்மாய்களை சென்றடைகிறது.
உலக்குடி காலனி குடியிருப்பை ஒட்டியே கிருதுமால் ஆற்று குறுகிய கால்வாய் செல்வதாலும், அப்பகுதியில் பல ஆண்டுகளாக தடுப்புச் சுவர் இல்லாததாலும், கரைபுரண்டு ஓடி வரும் வைகை தண்ணீர் திடீரென அருகிலுள்ள உலக்குடி காலனி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த நிலையில் காலனி குடியிருப்பை சேர்ந்த பொதுமக்களின் பலரது வீடுகளை கிருதுமால் ஆற்று தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அவர்கள் தங்கள் வீட்டிற்குள் குடியிருக்க முடியாமல் வெளியேறி உள்ளனர்.
எனவே உலக்குடி-மானூர் செல்லும் கால்வாயை ஒட்டியுள்ள உலக்குடி காலனி குடியிருப்பு பகுதியில் கிருதுமால் ஆற்று கால்வாயில் விரைவில் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தண்ணீரால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து வாழ்வாதாரமின்றி தவித்து வரும் காலனி குடியிருப்பு பொதுமக்களுக்கு உரிய நிவாரணமாக இழப்பீடு தொகையும் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- தீ விபத்து குறித்து விருதுநகர் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின் கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
விருதுநகர்:
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக். தொழிலதிபரான இவர் அப்பகுதியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூம் வைத்து நடத்தி வருகிறார். இங்கு விற்பனைக்காக ஏராளமான புதிய ஸ்கூட்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் பழுதுநீக்கும் சர்வீஸ் நிலையமும் அமைந்துள்ளதால் அங்கு பலர் தங்களது வாகனங்களை விட்டு சென்றிருந்தனர்.
நேற்று இரவு வழக்கமான நேரத்தில் ஷோரூம் பூட்டப்பட்டது. பணியில் இருந்த ஊழியர்களும் புறப்பட்டு சென்றனர். நள்ளிரவில் அந்த ஷோரூமில் இருந்து அளவுக்கு அதிகமாக புகை வந்துள்ளது. அடுத்து ஒருசில நிமிடங்களில் அங்கு பயங்கர தீ விபத்தும் ஏற்பட்டது. இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஷோரூம் உரிமையாளருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் உடனடியாக வந்த கார்த்திக் ஷோரூம் அருகில் கூட செல்ல முடியாத அளவுக்கு தீ விபத்து ஏற்பட்டு வெப்பம் வெளியேறியது. இதையடுத்து அவர் விருதுநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 19 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், 9 சர்வீஸ் பணிக்காக வந்த ஸ்கூட்டர்கள் மற்றும் ஏராளமான கம்ப்யூட்டர்கள், பிரிண்டர் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் ரூ.20 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அருகில் உள்ள பாண்டியன் என்பவருக்கு சொந்தமான எலெக்ட்ரிக் கடை உள்ளிட்ட ஒருசில கடைகளிலும் தீ பற்றியது. இதில் எலெக்ட்ரிக் கடையில் இருந்த பொருட்களும் தீயில் எரிந்து சேதமானது.
இந்த தீ விபத்து குறித்து விருதுநகர் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
- மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
- தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
மாதம் தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவிலுக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
சதுரகிரி கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்காக நாளை முதல் 16-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்திருந்தனர்.
இதனிடையே தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது கனமழை காரணமாக பாதுகாப்பு கருதி பக்தர்கள் சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
- அதிகாலையில் புராணம் வாசிக்கப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசி அன்று நம்பாடுவான் என்ற பக்தனுக்கு பெருமாள் அருள்புரிந்ததை முன்னிட்டும், குளிர் காலம் வருவதால் அதனை பக்தர்களுக்கு அறிவிக்கும் வண்ணமும் இங்கு கோவில் கொண்டு அருள்பாலிக்கும் சுவாமிகளுக்கு 108 வஸ்திரங்கள் சாற்றப்படும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டு இவ்வைபவம் இன்று அதிகாலை நடைபெற்றது. அப்போது இன்று ஒரு நாள் மட்டுமே கருடாழ்வார் சன்னதியிலிருந்து புறப்பட்டு பகல் பத்து மண்டபத்துக்கு அனைத்து தெய்வங்களும் எழுந்தருளுவார்கள். இங்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆழ்வார்கள், ஆச்சாரியர்களுக்கு 108 வஸ்திரங்கள் சாற்றப்பட்டது.
இதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதிகாலையில் புராணம் வாசிக்கப்பட்டது. சாரல் மழை, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் பாலாஜி பட்டர் ஸ்தானிகம் என்ற ரமேஷ் பட்டர், அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா, கோவில் செயல் அலுவலர் சக்கரை அம்மாள் மற்றும் கோவில் அலுவ லர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.






