என் மலர்
விழுப்புரம்
- வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டமங்கலம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே பள்ளிப்புதுப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அரங்கநாதபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமம் புதுவை மாநிலம் ஏரிப்பாக்கத்தை ஒட்டி அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கதிர்வேல் (வயது 55) தனது தாய் ஆனந்தாயுடன் வசித்து வருகிறார்.
ஏரிப்பாக்கத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்கள்.
அந்த நேரம் பார்த்து மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து மரபீரோவில் இருந்த செயின், அரசு உதவித்தொகை பெற்றதில் மீதி சேமித்து வைத்த ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டார்கள்.
கும்பாபிஷேகத்திற்கு சென்று வீட்டுக்கு வந்து பார்த்த போது நகை-பணம் கொள்ளை போனதை கண்டு ஆனந்தாய், கதிர்வேல் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கண்டமங்கலம் போலீசில் ஆனந்தாய் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பாபிஷேகத்திற்கு சென்ற போது வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 1914-ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை ஆட்சி செய்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
- சமாதியில் பிரந்தா எ டியர் டாக் 26 நவம்பர் 1914 என்ற தேதியையும் ஆங்கிலத்தில் பொறித்து வைத்துள்ளனர்.
செஞ்சி:
செஞ்சியில் பிரெஞ்சுகாரர்கள் வளர்ப்பு நாய்க்கு நினைவிடம் கட்டி வைத்துள்ளனர்.
1914-ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை ஆட்சி செய்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அப்போது அவர்கள் தங்குவதற்காக செஞ்சி-திண்டிவனம் சாலையில் சங்கரபரணி ஆற்றின் அருகே தாழ்வாரம் உள்ள ஒரு அடுக்கு கொண்ட வீட்டினை செங்கற்களால் மிக அழகாக கட்டியுள்ளனர்.
பிரெஞ்சுக்காரர்கள் தங்களுடைய பாதுகாப்பு கருதியும் கவுரவமான வாழ்க்கை நடத்துவதில் ஆசை கொண்ட இவர்கள் மிகச் செல்லமாக வளர்த்து வந்த பிரந்தா என்ற பெயரிட்டுள்ள நாய் இறந்து விட்டதை இந்த பங்களாவுக்கு அருகிலேயே புதைத்து அதற்கு சமாதியும் அமைத்துள்ளனர்.
அவர்கள் வசித்த வீடு 110 வருடங்களுக்குப் பிறகும் இதுவரை நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்பட்டு அந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறை பங்களாவாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் அருகில் உள்ள நாய்க்கு கட்டப்பட்ட சமாதியும் இன்று வரை பராமரிக்கப்பட்டு வருகிறது.
சமாதியில் பிரந்தா எ டியர் டாக் 26 நவம்பர் 1914 என்ற தேதியையும் ஆங்கிலத்தில் பொறித்து வைத்துள்ளனர். இது பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது. நூறாண்டுகளைக் கடந்த பங்களாவும் தற்போது பழமை மாறாமல் நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்பட்டு அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் வந்தால் தங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
- அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும்
- இதற்கென தனி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மே 15ஆம் தேதிக்குள் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டுமென ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பெயர்ப்பலகை தமிழில் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் இதற்கென தனி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி - கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 83 அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
- தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என உத்தரவிட்ட திருவண்ணாமலை கலெக்டரை பாராட்டுகிறோம்.
திண்டிவனம்:
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கை செல்லும் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்பது குறித்து பேசவேண்டும். கடந்த 3 மாதத்தில் 147 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 19 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்னகவே 20 மீனவர்கள் இலங்கை சிறையில் கடும் துன்பம் அனுபவித்து வருகின்றனர். மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது.
இந்திய பிரதமர் இலங்கை சென்று அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசும்போது மீனவர்கள் முறைவைத்து மீன்பிடிப்பது, கச்சத்தீவை மீட்பது குறித்து இலங்கை அதிபரிடம் வலியுறுத்தி ராமேஸ்வரம் வரும்போது நல்ல செய்தியை பிரதமர் தெரிவிக்க வேண்டும்.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டமாக 1118.9 கிலோ மீட்டர் பாதை அமைக்க டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு வழங்கியது சமூகநீதிக்கு பாதிப்பை உள்ளாக்கும்.
இந்தியா முழுவதும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஒன்றான பல்கலை கழகங்களில் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 83 அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழக சித்த நூல்களை ஆயுர்வேத நூலாக ஆயுஷ் மாற்றியுள்ளது. இதன் மூலம் சித்த மருத்துவத்தை கண்டுபிடித்தவர்கள் வட இந்தியர்கள் என சொல்லும் வாய்ப்புள்ளது.
எனவே மே 7-ந் தேதிக்குள் தமிழக அரசு ஆட்சேபணை தெரிவிக்க வேண்டும். "எம்புரான்" மலையாளப் படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றுள்ளது.
இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் தமிழகத்தில் திரையிட தடைவிதிக்க வேண்டும். தமிழகத்தில் தொடர் என்கவுண்டர் சம்பவங்களால் குற்றங்கள் பெருகி வருகிறது என்பது தெரிகிறது.
வக்பு வாரிய திருத்த சட்டத்தை பா.ம.க. ஆதரிக்கவில்லை. அதனால்தான் தமிழக அரசின் தீர்மானத்தை பா.ம.க. உறுப்பினர்கள் ஆதரித்துள்ளனர். தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என உத்தரவிட்ட திருவண்ணாமலை கலெக்டரை பாராட்டுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேற்று 7 ஆயிரம் நெல் மூட்டைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன.
- ஒவ்வொரு மழையின் போதும் இவ்வாறு திறந்தவெளியில் வைக்கப்படும் நெல் மூட்டைகள் நனைகின்றன.
செஞ்சி:
செஞ்சியில் இன்று அதிகாலை பெய்த மழையால் செஞ்சி கமிட்டியில் விவசாயிகள் கொண்டு வந்த பத்தாயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்திற்கு நெல் அறுவடை சீசன் என்பதால் அதிகமாக நெல் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று 7 ஆயிரம் நெல் மூட்டைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்று விற்பனைக்காக சுமார் 6 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்து திறந்த வெளியில்இறக்கி இருந்தனர். மேலும் நேற்று கொள்முதல் செய்யப்பட்ட வியாபாரிகளின் ஒரு பகுதி நெல் மூட்டைகளும் கமிட்டியின் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இன்று காலை 6 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் கமிட்டியில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. இதனால் நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள் நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விலை குறைத்து போட படுமோ என்ற அச்சத்தில் வேதனை அடைந்தனர்.
ஒவ்வொரு மழையின் போதும் இவ்வாறு திறந்தவெளியில் வைக்கப்படும் நெல் மூட்டைகள் நனைகின்றன. ஆகையால் செஞ்சி கமிட்டியில் ரூ.2 கோடி மதிப்பில் மேற்கூரை அமைப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜை போடப்பட்டுள்ளது. இப்பணியை விரைந்து தொடங்கி மேற்கூரை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறவேண்டும்.
- நகைக்கடன் தொடர்பான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி திரும்பப்பெறவேண்டும்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேளாண் விளை நிலங்கள் மாற்றுப்பணிக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்கவேண்டும். கேரள அரசு நெல் விளையும் நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு அனுமதிக்கமாட்டோம் என கூறியுள்ளது. இந்த நிலைப்பாடு பாராட்டத்தக்கது. ஆனால் தமிழகத்தின் நிலை என்ன? முப்போகம் விளையும் நிலமாக இருந்தாலும் அதிகாரிகளின் துணையோடு வீட்டுமனை பட்டாவாக்க முடியும்.
மேலும் சிப்காட் போன்ற வளர்ச்சித்திட்டங்களுக்கு அரசே விளை நிலங்களை கையகப்படுத்துகிறது. விளைநிலங்களை வீட்டுமனைகளாக்க அனுமதிக்க கூடாது என்று நான் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தியுள்ளேன். இதனால் சாகுபடி பரப்பு 40 லட்சம் ஹெக்டர் பரப்பளவும், 15 ஆயிரம் ஏரிகள் காணாமல் போய் உள்ளது.
கேரளா போல தமிழகத்தில் இச்சட்டப்பேரவை கூட்டத்தில் சட்டம் கொண்டு வரவேண்டும். நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறவேண்டும். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 30-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. அரசில் அதிகநாள் நடைபெறும் கூட்டத்தொடர் இதுவாகும். கடந்த காலங்களில் எத்தனை நாட்கள் சட்டப்பேரவை நடைபெற்றது என்பதை புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டியதால் தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது போதுமானதல்ல. தமிழ்நாட்டில் திட்டமிட்டு நடைபெறும் கொடூரக்கொலைகள் அதிகரித்துவருகிறது. நெல்லை, ஈரோடு ஆகிய இடங்களில் கொடூரக்கொலை நடைபெற்றுள்ளது. எத்தகைய குற்றம் செய்தாலும் இந்த ஆட்சியில் தப்பிவிடலாம் என்ற மனநிலையே இதற்கு காரணமாகும்.
இந்நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு கொலைகார நாடாக மாறிவிடும். எனவே சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவேண்டும். தற்காலிக ஊழியர்களின் பணி நிலைப்பை உறுதிப்படுத்தவேண்டும். இவர்களை பணி நிலைப்பு செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் பணி நிலைப்பு செய்யப்படும் என அறிவித்தும் அதை செயல்படுத்தவில்லை.
நகைக்கடனுக்கான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்துள்ளது. வட்டியை மட்டும் புதுபித்துகொள்ளும் நிலை இருந்தது. தற்போது விதிமுறைப்படி நகையை மீட்டு, அடுத்த நாள் மீண்டும் அடகு வைக்க முடியும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். நகைக்கடன் தொடர்பான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி திரும்பப்பெறவேண்டும்.
புதுச்சேரியில் கடைகளின் பெயர் பலகை தமிழில் இருக்கவேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளது பாராட்டுக்குறியது. வரவேற்கத்தக்கது. சென்னையில் உள்ள கடைகளின் பெயர் பலகை ஒரு வாரத்தில் தமிழில் மாற்றாவிட்டால் கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்ற சென்னை மாநகராட்சியின் அறிவிப்பு வரவேற்கதக்கது.
தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் மொழிப்பற்று அதிகமாக உள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் அதிகமாக உள்ளது உண்மையிலும் உண்மை.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் தி.மு.க.வை போல பா.ம.க. கொடி கம்பங்களை அகற்ற ஆணையிடுவீர்களா என்று கேள்வி எழுப்பிய போது, பொது இடத்தில் கொடி கம்பங்கள் அமைக்க அனுமதிக்கவேண்டும். அதே நேரம் நீதிமன்றம் விதிக்கும் விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும். சுவற்றில் அரசியல் விளம்பரங்கள் எழுதுவதை தவிர்க்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இந்த நடைமுறை இல்லை. வெளிநாடுகளில் இது போன்ற நடைமுறை இல்லை. மாநாடு விளம்பரம் எழுதினால் மாநாடு முடிந்த பின் அக்கட்சியே இதை அழிக்கவேண்டும் என்ற விதிகள் உள்ளது. இதை தடை செய்ய வேண்டும் என்றார்.
- சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை
- தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் தனியார் கல்லூரிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் ஒன்று உள்ளது. இங்கு பழமையான மரங்கள் அதிகம் உள்ளன. இதில் நேற்று இரவு சுமார் 500 வருடம் பழமையான புளிய மரம் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்தது.
அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த புளிய மரத்தின் மேல் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இச்சம்வம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்திருப்பார்களா? என சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதுவும் செய்துவிட முடியாது.
- கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என்பது நம் கனவு.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் வெற்றி விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவடத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் நிறுவன தலைவர் திருமாவளவன், ஒரு தேர்தலிலும் போட்டியிடாத நடிகர் தான் அடுத்த முதல்வர் என்கிறார்கள் என்று பேசினார்.
கூட்டத்தில் பேசிய திருமாவளவன், "தமிழ்நாட்டில் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கும் போதெல்லாம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறி வந்தனர். விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் போதும் அப்படித் தான் சொன்னார்கள். ஆனால், அதனை கடந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி களத்தில் நீடித்து வருகிறது. யார் கட்சி தொடங்கினாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதுவும் செய்துவிட முடியாது.
கவர்ச்சியின் மூலம் இந்த இயக்கத்தை சேர்ந்த யாரையும் திசை திருப்ப முடியாது. 25 ஆண்டுகளாக ஒரு பட்டாளத்தை விடுதலை சிறுத்தைகள் அதே வேகத்தில் வைத்துக் கொண்டுள்ளது. எந்த சரிவும் ஏற்படவில்லை, வீழ்ச்சியும் இல்லை. ஒரு அரசியல் கட்சியை 25 ஆண்டுகள் கடந்து தாக்குப் பிடிப்பதே சாதனை, வெற்றி.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுடன் இணைந்து இருப்பதால் தான் வெற்றி கிடைப்பதாக சிலர் ஏளனம் பேசி வருகின்றனர். பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளும் தங்கள் செல்வாக்கை நிரூபித்து தான் கூட்டணியில் இணைந்துள்ளன. ஆண்ட கட்சிகள் தான் விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு வேண்டும் என விரும்பும் நிலைக்கு நாம் உறுதியாக இருக்கிறோம்.
தற்போது ஒரு நடிகர், எந்த தேர்தலிலும் நிற்கவில்லை, போட்டியிடவில்லை. ஆனால் அடுத்த முதல்வர் அவர் தான் என்று பேசுகின்றனர். நான் தொடக்கத்தில் அதிக வாக்குகள் பெற்றபோது என்னை பற்றி யாரும் பேசவில்லை. நாம் வாக்கு வங்கியை தனியாக நிரூபிக்காததால், பெரிய அரசியல் கட்சியினர் நம் செல்வாக்கை வைத்து 10 தொகுதிகளுக்குள் ஒதுக்குகின்றனர்.
கடந்த 2006-ம் ஆண்டு தான் விடுதலை சிறுத்தைகள் தேர்தல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது. எங்களுக்கு கொள்கை தான் பெரியது என்பதால் குறைந்த தொகுதிகளை வாங்குகிறோம். தமிழ்நாடு மக்கள் நலனுக்காக, வகுப்புவாத சக்திகள் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதற்காகவே தொடர்கிறோம். கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என்பது நம் கனவு. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது நம் இலக்கு,"
என்று கூறினார்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சிறப்பு படை அமைக்கப்பட்டு இருவரையும் தேடி வந்தனர்.
- கடந்த 4 மாதமாக தேடி வந்த பா.ஜ.க. நிர்வாகி விஜயராணியை தனிப்படை அவரது உறவினர் வீட்டில் வைத்து கைது செய்தனர்.
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் பெஞ்சல் புயல் மழை மலட்டாறு வெள்ளப்பெருக்கு காரணமாக மலட்டாறு கரையோரமாக உள்ள திருவெண்ணைநல்லூர், அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளானது.
கடந்த 3.12.2024-ந்தேதி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்க வனத்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்ட அப்போதைய கலெக்டர் பழனி, முன்னாள் எம்.பி. பொன். கவுதம சிகாமணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சென்றனர். அப்போது பெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அரசூர் கூட்ரோடு பகுதியில் சாலை மறியல் செய்தனர். அவர்களை சந்தித்து ஆறுதல் கூற சென்றனர். செல்லும் வழியில் இருவேல்பட்டு கிராமத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு நிவாரண உதவிகள் செய்ய சென்ற போது அமைச்சர் மற்றும் அதிகாரிகளை ஆபாசமாக திட்டி சேற்றை வாரி வீசி மிரட்டல் விடுத்ததாகவும் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தனி பாதுகாப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் சேற்றை அள்ளி வீசிய இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராமர் என்கிற ராமகிருஷ்ணன், பா.ஜ.க. நிர்வாகி விஜயராணி (வயது 37) ஆகிய இருவர் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சிறப்பு படை அமைக்கப்பட்டு இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 20-ந்தேதி ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 4 மாதமாக தேடி வந்த பா.ஜ.க. நிர்வாகி விஜயராணியை தனிப்படை அவரது உறவினர் வீட்டில் வைத்து கைது செய்தனர். பின்னர் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
- நலத்திட்ட உதவிகள் 1568 பேர்களுக்கு வழங்கினார்.
- சாதிக்க துடிக்கும் பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.
விழுப்புரம்:
உலக மகளிர் தின விழா உலகம் முழுவதும் மகளிர் அமைப்பு மற்றும் கட்சிகள் இயக்கங்கள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் தமிழகத்தில் பல்வேறு கட்சியின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் த.வெ.க . கட்சி சார்பில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குஷி மோகன்ராஜ் ஏற்பாட்டின் படி விழுப்புரம் நகராட்சிகாமராஜர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக த.வெ.க. கட்சி மாநில செயலாளரும் முன்னாள்ன எம்.எல்.ஏ.வுமான புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டு 8 மாற்றுத்திறனாளி களுக்கு மிதிவண்டிகள், 10 விவசாயிகளுக்கு பூச்சி மருந்து எந்திரம், 500 மகளிர்களுக்கு சேலைகள்,150 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தக பை, 250 பேர்களுக்கு டபுள்டிபன் பாக்ஸ்,250 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் தொகுப்பு பைகள்,100 பெண்களுக்கு சில்வர் குடம், 50 விவசாயக் கூலி தொழிலாளிகளுக்கு மண்வெட்டி, சலவை தொழிலாளி 5 பேர்களுக்கு இஸ்திரி பெட்டி, மோட்டார் சைக்கிள் ஓட்டும் மகளிர்களுக்கு தலைக்கவசம் 50 நபர்களுக்கும், துப்புரவு தொழிலாளர் 25 நபர்களுக்கு கோட்,15 செவிலியர்களுக்கு கோட், 50 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை மற்றும் சாலையோரம் நடை வியாபாரிகள் பேருக்கு 50 குடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் 1568 பேர்களுக்கு வழங்கினார்.
பெண்கள் நினைத்தால் எவ்வளவு பெரிய மாற்றத்தையும் நிகழ்த்திக் காட்ட முடியும். அதனால் தான் நம் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மாவட்ட செயலாளருடன் 14 பேர் நியமிக்கப்பட்டு இருக்கிறோம். அதில் 5 மகளிருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது .
பெண்கள் மிகவும் வலிமையானவர்கள். பெண்கள் எவ்வளவு பெரிய தடையையும் தகர்த்து சாதனை செய்யும் போர் குணம் கொண்டவர்கள். தாய்மார்களின் ஆதரவும் அன்பும் நம் தலைவர் தளபதிக்கு அதிகளவில் உள்ளது. உங்களைப் போன்ற தாய்மார்களை நம்பி தான் தலைவர் தளபதி அரசியலுக்கு வந்துள்ளார் தலைவரை வெற்றி பெற வைக்க நீங்கள் எல்லோரும் துணை நிற்க வேண்டும் .
சாதிக்க துடிக்கும் பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்களை தளபதி சார்பாகவும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாகவும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு யார் யாரோ மாற்றுக் கட்சியில் இருந்து வருகிறார்கள். அவருக்கு தான் பதவிகள் கொடுப்பார்கள் என்று நினைக்க வேண்டாம்.
ஆரம்பத்திலிருந்து யார் யார் தலைவரின் வளர்ச்சிக்கு பாடுபட்டு உழைத்தார்களோ அவர்களுக்கு தான் தலைவர் பதவி அளிப்பார். இதில் எந்த அச்சமும் தேவையில்லை. மாற்றுக் கட்சியில் இருந்து ஹெலிகாப்டரிலே வந்தாலும் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிகள் அளிக்க மாட்டார் நமது தலைவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மும்மொழி கொள்கைக்கு எதிராக திடமாக முடிவெடுத்த அரசு ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த முடியாது என திட்டவட்டமாக கூறவேண்டும்.
- மக்காசோளத்திற்கு விதிக்கப்பட்ட ஒரு விழுக்காடு சந்தை வரியை தமிழக அரசு நீக்கவேண்டும்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கரும்பு 9.5 விழுக்காடு பிழித்திறன் உள்ளவைக்கு கொள்முதல் விலை ரூ.3,151 போதாது. டன்னுக்கு கூடுதலாக ரூ.1000 சேர்த்து வழங்க வேண்டும். உற்பத்தி செலவே டன்னுக்கு ரூ.3200 ஆகிறது. இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். 2021-ம் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் டன்னுக்கு ரூ.4000 வழங்கி இருந்தால் தற்போது ரூ.5 ஆயிரம் ஆக உயர்ந்திருக்கும். முந்தைய ஆட்சியில் வழங்கிய ஊக்க தொகையை வழங்கி பின் அதுவும் நிறுத்தப்பட்டது. ஊக்கத்தொகை ரூ.1000 வழங்க வேண்டும்.
1200 வேளாண் மின் இணைப்புகளுக்கு சோதனை அடிப்படையில் ஸ்மார்ட் மின் இணைப்புகள் ஈரோடு, சேலம் மாவட்டங்களில் பொறுத்தப்பட உள்ளது. இதனால் இலவச மின்சாரம் நிறுத்தப்படாது என்பதை விவசாயிகள் ஏற்கவில்லை. விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கப்படுவதை கண்காணித்து, வரம்பு நிர்ணயித்து அதற்கு மேல் பயன்படுத்தும் மின் இணைப்புக்கு கட்டணம் வசூலிக்க திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை விவசாயிகள் ஏற்கவில்லை. 60 விவசாயிகளின் உயிர் தியாகத்திற்கு பின்பே இலவச மின்சாரம் கிடைத்தது.
மும்மொழி கொள்கைக்கு எதிராக திடமாக முடிவெடுத்த அரசு ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த முடியாது என திட்டவட்டமாக கூறவேண்டும்.
அதிகரித்து வரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க அரசு இதற்கு நிரந்தர தடை பெற வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் இந்த சூதாட்டத்தில் ஒரு மாதத்தில் மட்டும் 5 பேர் உட்பட இந்த ஆண்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு விதித்த தடையை உயர்நீதிமன்றம் நீக்கிய பின்பு 24 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் அரசு தடை பெற வேண்டும்.
கோடை வெப்பத்தில் மக்கள் தவித்து வரும் நிலையில் பகலில் 30 நிமிடம் மின்வெட்டு ஏற்படுகிறது. தற்போது 3000 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த மாதம் 4500 மெகாவாட்டாக அதிகரிக்க வாய்ப்புண்டு என கூறப்படுகிறது.
மக்காசோளத்திற்கு விதிக்கப்பட்ட ஒரு விழுக்காடு சந்தை வரியை தமிழக அரசு நீக்கவேண்டும். இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும். மதுராந்தகம் ஏரியை தூர்வாரி பலப்படுத்துவதன் மூலம் நீர் கொள்ளளவை உயர்த்த திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 3 ஆண்டுகள் கடந்தும் 60 சதவீதப்பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. எனவே ஏரி சீரமைக்கும் பணிகளை மே மாதத்திற்குள் முடிக்க அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கவுரவத்தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத்தலைவர் புதா.அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், உள்ளிட்ட பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- பூசாரிகள் அக்னி குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்தனர்.
- தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது.
மேல்மலையனூர்:
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப்பெருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-ம் நாள் மயானக்கொள்ளை விழா விமரிசையாக நடந்தது.
விழாவின் 5-வது நாளான நேற் று தீமிதி திருவிழா நடைபெற் றது. இதை யொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறை யில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பலவிதமான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
உற்சவர் அம்மனை பிற்பகல் 2 மணியளவில் பல்லக்கில் பூசாரிகள் அக்னி குளத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிம்ம வாகனத்தில் அமர்த்தினர். பின்பு பம்பை , மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று மாலை 4 மணியளவில் அக்னி குண்டம் முன்பு அம்மன் எழுந்தருளினார்.
தொடர்ந்து பூசாரிகள் அக்னி குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்தனர். பின்பு அம்மனுக்கும், அக்னி குண்டத்திற்கும் தீபாராதனை காட்டிய உடன் தீக்குழிக்குள் பூ உருண்டையை உருட்டிவிட்டு தலைமை பூசாரி மற்றும் பூசாரிகள் தீக்குழிக்குள் இறங்கினர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக நின்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சில பக்தர்கள் இரும்பு கொக்கிகளை முதுகில் அலகு குத்தி லாரி, வேன் ஆகியவற்றை இழுத்தும், அந்தரத்தில் தொங்கியவாறு பறவை க் காவடி எடுத்தும் அம்மனுக்கு மாலை அணிவித்து தீபாராதனை காட்டியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவில் அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத்தலைவர் மதியழகன் பூசாரி, அறங்காவலர்கள் சுரேஷ் பூசாரி, ஏழுமலை பூசாரி, பச்சையப்பன் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள், ஏழு வம்சாவழியை சேர்ந்த மீனவ முறை பூசாரிகள் குடும்பத்தினர் செய்திருந்தனர். மேல்மலையனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையில் ஏராளமான போலீசாரும், தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பரஞ்ஜோதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விழாவின் 6-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.






