என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சிறப்பு படை அமைக்கப்பட்டு இருவரையும் தேடி வந்தனர்.
    • கடந்த 4 மாதமாக தேடி வந்த பா.ஜ.க. நிர்வாகி விஜயராணியை தனிப்படை அவரது உறவினர் வீட்டில் வைத்து கைது செய்தனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் பெஞ்சல் புயல் மழை மலட்டாறு வெள்ளப்பெருக்கு காரணமாக மலட்டாறு கரையோரமாக உள்ள திருவெண்ணைநல்லூர், அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளானது.

    கடந்த 3.12.2024-ந்தேதி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்க வனத்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்ட அப்போதைய கலெக்டர் பழனி, முன்னாள் எம்.பி. பொன். கவுதம சிகாமணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சென்றனர். அப்போது பெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அரசூர் கூட்ரோடு பகுதியில் சாலை மறியல் செய்தனர். அவர்களை சந்தித்து ஆறுதல் கூற சென்றனர். செல்லும் வழியில் இருவேல்பட்டு கிராமத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு நிவாரண உதவிகள் செய்ய சென்ற போது அமைச்சர் மற்றும் அதிகாரிகளை ஆபாசமாக திட்டி சேற்றை வாரி வீசி மிரட்டல் விடுத்ததாகவும் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தனி பாதுகாப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    இந்த புகாரின் பேரில் சேற்றை அள்ளி வீசிய இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராமர் என்கிற ராமகிருஷ்ணன், பா.ஜ.க. நிர்வாகி விஜயராணி (வயது 37) ஆகிய இருவர் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சிறப்பு படை அமைக்கப்பட்டு இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 20-ந்தேதி ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் கடந்த 4 மாதமாக தேடி வந்த பா.ஜ.க. நிர்வாகி விஜயராணியை தனிப்படை அவரது உறவினர் வீட்டில் வைத்து கைது செய்தனர். பின்னர் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். 

    • நலத்திட்ட உதவிகள் 1568 பேர்களுக்கு வழங்கினார்.
    • சாதிக்க துடிக்கும் பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

    விழுப்புரம்:

    உலக மகளிர் தின விழா உலகம் முழுவதும் மகளிர் அமைப்பு மற்றும் கட்சிகள் இயக்கங்கள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் தமிழகத்தில் பல்வேறு கட்சியின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

    விழுப்புரம் மாவட்டத்தில் த.வெ.க . கட்சி சார்பில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குஷி மோகன்ராஜ் ஏற்பாட்டின் படி விழுப்புரம் நகராட்சிகாமராஜர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கு விழா நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக த.வெ.க. கட்சி மாநில செயலாளரும் முன்னாள்ன எம்.எல்.ஏ.வுமான புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டு 8 மாற்றுத்திறனாளி களுக்கு மிதிவண்டிகள், 10 விவசாயிகளுக்கு பூச்சி மருந்து எந்திரம், 500 மகளிர்களுக்கு சேலைகள்,150 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தக பை, 250 பேர்களுக்கு டபுள்டிபன் பாக்ஸ்,250 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் தொகுப்பு பைகள்,100 பெண்களுக்கு சில்வர் குடம், 50 விவசாயக் கூலி தொழிலாளிகளுக்கு மண்வெட்டி, சலவை தொழிலாளி 5 பேர்களுக்கு இஸ்திரி பெட்டி, மோட்டார் சைக்கிள் ஓட்டும் மகளிர்களுக்கு தலைக்கவசம் 50 நபர்களுக்கும், துப்புரவு தொழிலாளர் 25 நபர்களுக்கு கோட்,15 செவிலியர்களுக்கு கோட், 50 ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை மற்றும் சாலையோரம் நடை வியாபாரிகள் பேருக்கு 50 குடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் 1568 பேர்களுக்கு வழங்கினார்.

    பெண்கள் நினைத்தால் எவ்வளவு பெரிய மாற்றத்தையும் நிகழ்த்திக் காட்ட முடியும். அதனால் தான் நம் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மாவட்ட செயலாளருடன் 14 பேர் நியமிக்கப்பட்டு இருக்கிறோம். அதில் 5 மகளிருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது .

    பெண்கள் மிகவும் வலிமையானவர்கள். பெண்கள் எவ்வளவு பெரிய தடையையும் தகர்த்து சாதனை செய்யும் போர் குணம் கொண்டவர்கள். தாய்மார்களின் ஆதரவும் அன்பும் நம் தலைவர் தளபதிக்கு அதிகளவில் உள்ளது. உங்களைப் போன்ற தாய்மார்களை நம்பி தான் தலைவர் தளபதி அரசியலுக்கு வந்துள்ளார் தலைவரை வெற்றி பெற வைக்க நீங்கள் எல்லோரும் துணை நிற்க வேண்டும் .

    சாதிக்க துடிக்கும் பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்களை தளபதி சார்பாகவும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாகவும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழக வெற்றிக் கழகத்திற்கு யார் யாரோ மாற்றுக் கட்சியில் இருந்து வருகிறார்கள். அவருக்கு தான் பதவிகள் கொடுப்பார்கள் என்று நினைக்க வேண்டாம்.

    ஆரம்பத்திலிருந்து யார் யார் தலைவரின் வளர்ச்சிக்கு பாடுபட்டு உழைத்தார்களோ அவர்களுக்கு தான் தலைவர் பதவி அளிப்பார். இதில் எந்த அச்சமும் தேவையில்லை. மாற்றுக் கட்சியில் இருந்து ஹெலிகாப்டரிலே வந்தாலும் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிகள் அளிக்க மாட்டார் நமது தலைவர்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • மும்மொழி கொள்கைக்கு எதிராக திடமாக முடிவெடுத்த அரசு ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த முடியாது என திட்டவட்டமாக கூறவேண்டும்.
    • மக்காசோளத்திற்கு விதிக்கப்பட்ட ஒரு விழுக்காடு சந்தை வரியை தமிழக அரசு நீக்கவேண்டும்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரும்பு 9.5 விழுக்காடு பிழித்திறன் உள்ளவைக்கு கொள்முதல் விலை ரூ.3,151 போதாது. டன்னுக்கு கூடுதலாக ரூ.1000 சேர்த்து வழங்க வேண்டும். உற்பத்தி செலவே டன்னுக்கு ரூ.3200 ஆகிறது. இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். 2021-ம் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் டன்னுக்கு ரூ.4000 வழங்கி இருந்தால் தற்போது ரூ.5 ஆயிரம் ஆக உயர்ந்திருக்கும். முந்தைய ஆட்சியில் வழங்கிய ஊக்க தொகையை வழங்கி பின் அதுவும் நிறுத்தப்பட்டது. ஊக்கத்தொகை ரூ.1000 வழங்க வேண்டும்.

    1200 வேளாண் மின் இணைப்புகளுக்கு சோதனை அடிப்படையில் ஸ்மார்ட் மின் இணைப்புகள் ஈரோடு, சேலம் மாவட்டங்களில் பொறுத்தப்பட உள்ளது. இதனால் இலவச மின்சாரம் நிறுத்தப்படாது என்பதை விவசாயிகள் ஏற்கவில்லை. விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கப்படுவதை கண்காணித்து, வரம்பு நிர்ணயித்து அதற்கு மேல் பயன்படுத்தும் மின் இணைப்புக்கு கட்டணம் வசூலிக்க திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை விவசாயிகள் ஏற்கவில்லை. 60 விவசாயிகளின் உயிர் தியாகத்திற்கு பின்பே இலவச மின்சாரம் கிடைத்தது.

    மும்மொழி கொள்கைக்கு எதிராக திடமாக முடிவெடுத்த அரசு ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த முடியாது என திட்டவட்டமாக கூறவேண்டும்.

    அதிகரித்து வரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க அரசு இதற்கு நிரந்தர தடை பெற வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் இந்த சூதாட்டத்தில் ஒரு மாதத்தில் மட்டும் 5 பேர் உட்பட இந்த ஆண்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு விதித்த தடையை உயர்நீதிமன்றம் நீக்கிய பின்பு 24 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் அரசு தடை பெற வேண்டும்.

    கோடை வெப்பத்தில் மக்கள் தவித்து வரும் நிலையில் பகலில் 30 நிமிடம் மின்வெட்டு ஏற்படுகிறது. தற்போது 3000 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த மாதம் 4500 மெகாவாட்டாக அதிகரிக்க வாய்ப்புண்டு என கூறப்படுகிறது.

    மக்காசோளத்திற்கு விதிக்கப்பட்ட ஒரு விழுக்காடு சந்தை வரியை தமிழக அரசு நீக்கவேண்டும். இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும். மதுராந்தகம் ஏரியை தூர்வாரி பலப்படுத்துவதன் மூலம் நீர் கொள்ளளவை உயர்த்த திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 3 ஆண்டுகள் கடந்தும் 60 சதவீதப்பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. எனவே ஏரி சீரமைக்கும் பணிகளை மே மாதத்திற்குள் முடிக்க அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கவுரவத்தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத்தலைவர் புதா.அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், உள்ளிட்ட பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • பூசாரிகள் அக்னி குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்தனர்.
    • தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது.

    மேல்மலையனூர்:

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப்பெருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-ம் நாள் மயானக்கொள்ளை விழா விமரிசையாக நடந்தது.

    விழாவின் 5-வது நாளான நேற் று தீமிதி திருவிழா நடைபெற் றது. இதை யொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறை யில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பலவிதமான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

    உற்சவர் அம்மனை பிற்பகல் 2 மணியளவில் பல்லக்கில் பூசாரிகள் அக்னி குளத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிம்ம வாகனத்தில் அமர்த்தினர். பின்பு பம்பை , மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று மாலை 4 மணியளவில் அக்னி குண்டம் முன்பு அம்மன் எழுந்தருளினார்.

    தொடர்ந்து பூசாரிகள் அக்னி குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்தனர். பின்பு அம்மனுக்கும், அக்னி குண்டத்திற்கும் தீபாராதனை காட்டிய உடன் தீக்குழிக்குள் பூ உருண்டையை உருட்டிவிட்டு தலைமை பூசாரி மற்றும் பூசாரிகள் தீக்குழிக்குள் இறங்கினர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக நின்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சில பக்தர்கள் இரும்பு கொக்கிகளை முதுகில் அலகு குத்தி லாரி, வேன் ஆகியவற்றை இழுத்தும், அந்தரத்தில் தொங்கியவாறு பறவை க் காவடி எடுத்தும் அம்மனுக்கு மாலை அணிவித்து தீபாராதனை காட்டியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவில் அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத்தலைவர் மதியழகன் பூசாரி, அறங்காவலர்கள் சுரேஷ் பூசாரி, ஏழுமலை பூசாரி, பச்சையப்பன் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள், ஏழு வம்சாவழியை சேர்ந்த மீனவ முறை பூசாரிகள் குடும்பத்தினர் செய்திருந்தனர். மேல்மலையனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையில் ஏராளமான போலீசாரும், தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பரஞ்ஜோதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவின் 6-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.

    • இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.
    • வாலிபர் காதலியுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

    திருவெண்ணெய்நல்லூர்:

    விழுப்புரம் அருகே திருமணத்துக்கு மறுத்த காதலனுக்கு டீயில் எலி மருந்து கலந்து கொடுத்த என்ஜினீயரிங் மாணவி குடும்பத்துடன் தலை மறைவாகிவிட்டார்.

    விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 23 வயதுடைய வாலிபர் பிளஸ்-2 வரை படித்து விட்டு, தனது வீட்டில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த 20 வயதுடைய மாணவி தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டுபடித்து வருகிறார்.

    இருவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனிலும் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. காதலுக்கு வாலிபர் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே கடந்த சில நாட்களாக வாலிபர், தனது காதலியுடன் பேசுவதை தவிர்த்தார். இருப்பினும் அந்த மாணவி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.

    ஆனால் வாலிபரோ, இனிமேல் பேசவும் மாட்டேன், உன்னை திருமணமும் செய்து கொள்ள மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

    இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் மாணவி, தனது தோழிகள் மற்றும் உறவினர்களிடம் கூறி புலம்பியுள்ளார். அப்போது, இருவரில் (காதலன்-காதலி) யாரேனும் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வது போல் நடித்தால் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று யோசனை கூறியுள்ளனர்.

    அதன்படி காதலனை தனது வீட்டிற்கு மாணவி அழைத்தார். அவரும் அங்கு சென்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது மாணவி, தனது காதலனுக்கு டீ போட்டுக்கொடுத்தார். அதை குடித்த சில நிமிடங்களில் அவர் மயங்கி விழுந்தார்.

    அவரது வாயில் இருந்து நுரை வெளியேறியது. அப்போதுதான் அந்த மாணவி, டீயில் எலி மருந்து (விஷம்) கலந்து கொடுத்ததாக கூறினார்.

    உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபருக்கு டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதனிடையே காதலனின் செல்போனுக்கு வாட்ஸ்-அப்மூலம் மாணவி தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள் என்று கூறியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

    இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மாணவி குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். அவர்கள் எங்கு சென்றார்கள் என தெரியவில்லை.

    இதனால் யாரிடம் விசாரணை நடத்துவது என போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.

    • ஜெயசூர்யா என்ற இளைஞரும் ரம்யா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
    • ஜெயசூர்யா ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே திருமணம் செய்ய மறுத்த காதலனை தேநீரில் எலி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெயசூர்யா என்ற இளைஞரும் ரம்யா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் உடனடியாக திருமணம் செய்து கொள்ள ஜெயசூர்யா மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ரம்யா, ஜெயசூர்யாவுக்கு தேநீரில் எலி மருந்து கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறி, ஜெயசூர்யா ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

    இந்நிலையில், முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள் என வாட்ஸ் அப்பில் காதலி அனுப்பிய மெசேஜை பார்த்து பதறிய ஜெயசூர்யாவின் பெற்றோர் இது தொடர்பாக போலீசிடம் புகார் அளித்துள்ளனர்.

    இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் காதலி ரம்யா, அவரது பெற்றோர் தலைமறைவு ஆகியுள்ளனர். 

    • லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.
    • தொடர்ந்து சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியிலிருந்து 13-நாட்கள் மாசிப் பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிப் பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று காலை கோபால விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இரவு ஊரின் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் கொடி மரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது.

    இன்று காலை மூலஸ்தானத்தில் உள்ளஅம்மனுக்கும், சிவபெருமாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவ அம்மனுக்கு ஆங்கார அங்காளி அலங்காரம் செய்யப்பட்டு சிம்ம வாகனத்தில் அமர்த்தினர். பின்பு மயானத்தை நோக்கி அம்மன் புறப்பட்டு மயானத்தில் எழுந்தருளினார்.

    தொடர்ந்து அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த சுண்டல், கொழுக்கட்டை , காய்கறி, பழங்கள் ஆகியவற்றை வாரி இறைத்தனர். இதுவே மயானக் கொள்ளை விழா ஆகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலக்குழு தலைவர் மதியழகன் பூசாரி, அறங்காவலர்கள் சுரேஷ் பூசாரி, ஏழுமலை பூசாரி, பச்சையப்பன் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். இரவு ஆண் பூத வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது. இன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
    • நாளை இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியில் இருந்து 13 நாட்கள் மாசி பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மாசி பெருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி இன்று காலையில் கோபால விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. மேலும் காப்பு கட்டுதல், சக்தி கரக ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 2-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) மயானக்கொள்ளை விழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

    அதாவது சிவனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷத்தை போக்க மகாவிஷ்ணுவின் ஆலோசனைப்படி பார்வதிதேவி ஆங்கார உருவம் கொண்டு பிரம்மனின் தலையை மயானத்தில் மிதித்து சிவனுக்கு சாப விமோசனம் அளித்ததாக கூறப்படுகிறது.

    இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மயானக் கொள்ளை விழா நடை பெறுகிறது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் கோவில் சார்பில் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊர்வலமாக மயானத்துக்கு சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அதன் பின்னர் அங்கு மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

    நாளை இரவு வழக்கமாக அமாவாசை அன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேல்மலையனூர்அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மாசி பெரு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 4-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் அன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஷே க் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமி பள்ளி சிறுமியை 18 வயது இளைஞர் திருமணம் செய்தார்.
    • 16 வயது சிறுமி இன்ஸ்டாகிராமில் இளைஞரிடம் பேசியது தெரியவந்துள்ளது

    இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 16 வயது பள்ளி சிறுமியை திருமணம் செய்த கார்த்திக்குமார் (18) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 16 வயது பள்ளி சிறுமியை காணவில்லை என்று பெற்றோர்கள் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சிறுமியின் செல்போன் எண்னை ஆய்வு செய்தனர்.

    அதில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்தபோது ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த 18 வயதான கார்த்திக் குமார் என்பவரை காதலித்து வந்துள்ளதை கண்டறிந்தனர்.

    இதனையடுத்து கார்த்திக் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். அப்போது தான் அந்த சிறுமியை இளைஞர் திருமணம் செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. பின்னர் பள்ளி மாணவியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    • மார்ச் 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.
    • கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும் மார்ச் 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் மார்ச் 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும்.
    • மத்திய அரசு எவ்வளவு நிதியை நிறுத்தினாலும் இரு மொழிக்கொள்கை தான் செயல்படுத்தப்படும் என முதலமைச்சரே தெரிவித்து உள்ளார்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து விழுப்புரத்தில் 23 மருந்தகங்களை திறக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் புதுவை சாலை, சாலை அகரத்தில் கூட்டுறவு முதல்வர் மருந்தகத்தினை வனத்துறை அமைச்சரும் மாநில தி.மு.க. துணை பொது செயலாளருமான பொன்முடி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வும், வன்னியர் அறக்கட்டளை உறுப்பினருமான அன்னியூர் சிவா, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், கோலியனூர் சேர்மன் சச்சிதானந்தம், மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    மருந்தக விற்பனையை தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் பின்பற்றப்படும். அதை யாராலும் அசைக்க முடியாது. மும்மொழி கொள்கையை தமிழகத்தில் யாராலும் புகுத்த முடியாது. மத்திய அரசு எவ்வளவு நிதியை நிறுத்தினாலும் இரு மொழிக்கொள்கை தான் செயல்படுத்தப்படும் என முதலமைச்சரே தெரிவித்து உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆளும் கட்சியாக இருக்கும்போது வெல்கம் மோடி என்பார்கள்.
    • இந்தி படித்தால் தான் தேசப்பற்று என்றால் அது தேச துரோகம்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலானது கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றபோது கஞ்சனூர் அருகேயுள்ள நேமூர் கிராமத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது காங்கிரஸ் கட்சி நிர்வாகி ரமேஷ் கஞ்சனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    அந்த புகாரின் பேரில் இவ்வழக்கு விசாரணை விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் கடந்த முறை சீமான் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்வழக்கில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் தொடுத்த மனு தள்ளுபடி செய்யபட்டதால் இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    மும்மொழிக்கொள்கை கடைபிடித்தால் தான் நிதி ஒதுக்குவோம் என்பது எப்படி ஜனநாயகமாக இருக்கும்.

    மாநிலங்கள் கொடுக்கும் வரி வருவாயின் பெருக்கம் தான் மத்திய அரசின் நிதி. இது நாட்டின் பொதுவுடைமையாக இருக்கும் இறையாண்மைக்கு நேர் எதிர்மறையானது. இந்தியா ஒருமைப்பாடு மிக்க நாடாக இருக்க வேண்டும் என்றால் எல்லா மொழிகளுக்கும் இடமளிக்க வேண்டும்.

    என்னுடைய பணத்தை எடுத்து வைத்துகொண்டு பணம் கொடுப்போம் என்பது திமிறு. இந்தி கட்டாயம் படிக்க வேண்டும் என்ற தேவை என்ன இருக்கிறது. இந்தி படித்தால் பசி, பட்டினி தீர்ந்துவிடுமா. மொழி வாரியாக தான் இந்தியா பிணைந்து இருப்பதாகவும், தாய் மொழி தமிழ் பயன்பாட்டு மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. எதனை வேண்டுமானாலும் படிப்பேன் என்பது எனது விருப்பம்.

    வேறொரு மொழியை கற்க நாடோடி கூட்டமாக வாழ வைக்க நினைக்கிறீர்களா. நடிகர் சரத்குமார் அனைத்து மொழிகளும் பேசுகிறார். விரும்பினால் எந்த மொழி வேண்டுமானாலும் கற்போம்.

    மரத்தின் வேர் வலுவாக இருக்க வேண்டும். இந்தியா ஒரு தேசம் என்பதும் ஒரு மொழி என்பதும் கொடுமையானது. அது தேவை என்றால் இந்தி கற்றுக் கொள்கிறோம். கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்றால் அதை செய்ய முடியாது. மும்மொழிக்கொள்கை மோசடி கொள்கை. கொள்கை மொழி அவரவர் தாய்மொழியில் தான் இருக்க வேண்டும். 3-ம் வகுப்பில் பொதுத்தேர்வு வைக்க கூடாது. அப்படி அந்த தேர்வில் தோல்வி பெற்றால் பிஞ்சு மனதில் நஞ்சு வளராதா.

    ஆட்சிக்கு வந்து 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்றார்கள். அதை செய்யவில்லை. தமிழக அரசு கோழை கூடார கூட்டமாக உள்ளது. ஆளும் கட்சியாக இருக்கும்போது வெல்கம் மோடி என்பார்கள். எதிர்கட்சியாக இருந்தால் கோ பேக் மோடி என்பார்கள்.

    கல்வி மாநிலத்தின் உரிமை. மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி எத்தனை அமைக்க வேண்டும் என்ற உரிமையை மாநில அரசுக்கு கொடுக்க வேண்டும். இந்தி எதற்காக தேவை என்பதற்கு அண்ணாமலை காரணம் கூற வேண்டும்.

    இந்தி படித்தால் தான் தேசப்பற்று என்றால் அது தேச துரோகம். தமிழ் தான் பூர்வகுடி மக்கள். இந்தி தேவை என்றால் மட்டுமே கற்று கொள்வோம். அண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் குழந்தைகள் அரசு பள்ளியில் கல்வி பயிலவில்லை என கூறுகிறார்.

    தமிழகத்தில் மக்கள் பல்வேறு பிரச்சனைக்களாக போராடி வருகின்றனர். நல்லாட்சி கொடுக்கிறேன் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு மனசாட்சி இருக்கிறதா. ஈரோடு இடைத்தேர்தலில் ஏன் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வந்து வாக்கு சேகரிக்கவில்லை. பாலியல் வன்கொடுமை, மயிலாடுதுறையில் கள்ளச்சாராயத்தை தடுத்த வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். அப்பா என்னப்பா இப்படி பண்றீங்களே என்று கேட்டு இருக்கிறார்கள்.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    ×