என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க.-வில் மீண்டும் வெடித்த தந்தை - மகன் மோதல்!
- மே 11-ந்தேதி நடைபெற உள்ள வன்னியர் மாநாடு மாபெரும் வெற்றி மாநாடாக அமையும்.
- புதிய அறிவுப்புக்கு பல காரணங்கள் உண்டு, எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியாது.
1989-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு நிறுவனராக ராமதாஸ் உள்ளார். கட்சியின் தலைவராக ஜி.கே. மணியை, ராமதாஸ் நியமித்தார். இதனிடையே, சென்னை வானகரத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாசை நியமித்தார் ராமதாஸ். அவரது தலைமையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து பா.ம.க. போட்டியிட்டது.
இதனை தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் ராமதாஸ், அன்புமணி இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. இதன் பின்னணியில் பாமக இளைஞரணி தலைவராக ராமதாஸின் மகள் வழி பேரன் முகுந்தனை நியமனம் செய்து ராமதாஸ் அறிவித்ததற்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது அமைந்துள்ளது.
அன்புமணியின் பேச்சால் ஆத்திரமடைந்த ராமதாஸ், "கட்சியை உருவாக்கியவன் நான், வன்னியர் சங்கத்தை உருவாக்கியவன் நான். எனவே முடிவை நான்தான் எடுப்பேன்" என மேடையிலேயே அன்புமணியிடம் காட்டமாக கூறினார். அன்புமணி உடனே எழுந்து, "என்னை சந்திக்க நினைப்போர், இனி பனையூரில் உள்ள புதிய அலுவலகத்தில் என்னை சந்திக்கலாம்" என சொல்லி எழுந்துச் சென்றார். இதனை தொடர்ந்து, நிர்வாகிகள் இருவரையும் சந்தித்து சமாதானம் செய்ததாக தகவல் வெளியானது. இருப்பினும் இருவருக்கும் இடையே கருத்து மோதல் தொடர்வதாக கூறப்பட்டு வந்தது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், இது நான் ஆரம்பித்த கட்சி. எனவே பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பை தானே எடுத்துக்கொள்கிறேன். பா.ம.க. தலைவராக இருந்த அன்புமணியை செயல் தலைவராக நியமனம் செய்கிறேன். கௌரவத் தலைவராக ஜி.கே.மணியை நியமிக்கிறேன்.
மே 11-ந்தேதி நடைபெற உள்ள வன்னியர் மாநாடு மாபெரும் வெற்றி மாநாடாக அமையும். இதற்கான பொறுப்பை அன்புமணி கவனித்துக்கொள்வார்.
புதிய அறிவுப்புக்கு பல காரணங்கள் உண்டு, எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியாது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்தவே முடிவு எடுத்துள்ளேன். கூட்டணி உள்ளிட்ட விஷயங்கள் கட்சி நிர்வாகிகளை அழைத்துப்பேசி முடிவெடுக்கப்படும் என்றுகூறி பனையூர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் என்னை சந்திக்கலாம் என்று தெரிவித்தார்.
இதனிடையே, மாநிலங்களவையில் நீட் குறித்து கேள்வி எழுப்பாதது குறித்து அன்புமணியே பதிலளிப்பார் என்று கூறினார். மேலும், பா.ஜ.க.வுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு இப்போதுதான் தலைவராகி இருக்கிறேன் என்றார்.
2026 சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் பணியாற்றி வரும் நிலையில், பட்டாளி மக்கள் கட்சியில் தந்தை- மகன் மோதல் மீண்டும் பொதுவெளியில் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தந்தை ஒரு பாதையிலும், மகன் ஒரு பாதையில் பயணிக்க விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு சென்னை வரும் நிலையில், ராமதாஸ் - அன்புமணிக்கு இடையே கூட்டணி தொடர்பாக மீண்டும் சலசலப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
பா.ம.க.வை நிறுவிய போது கட்சியில் பதவிக்கு வரமாட்டேன் என கூறியிருந்த ராமதாஸ் இதுநாள் வரை நிறுவனராக மட்டுமே இருந்து வந்தார். தற்போது தலைவர் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.






