என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
    • சயன் வீடு மற்றும் அவர் வாடகைக்கு விட்டிருந்த 6 வீடுகள் என 7 வீடுகளுக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர்.

    பல்லடம்:

    திருப்பூர் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஏ நகரில் சயன் (வயது 40) என்பவர் தனது மனைவி கீதாவுடன் (36) வசித்து வருகிறார்.

    இவர் கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தனது வீட்டை விரிவுபடுத்துவதற்காக பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.43 லட்சம் கடன் பெற்று கூடுதலாக 6 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக முறையாக கடனை செலுத்தி வந்துள்ளார்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சயன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் அவரால் கடனை செலுத்த முடியவில்லை. சென்னையில் இருந்து திரும்பிய சயன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 4 மாத கடன் தொகையை செலுத்தியுள்ளார்.

    அந்தத் தொகை செயலாக்க கட்டணத்திற்கு சரியாகிவிட்டது என கூறி தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மற்றும் வக்கீல்கள் எனக்கூறி 30 பேர் சயன் வீட்டிற்கு வந்துள்ளனர்.

    கடன் தொகையை கட்டாததால் வீட்டை ஜப்தி செய்கிறோம் எனக் கூறி சயன் வீடு மற்றும் அவர் வாடகைக்கு விட்டிருந்த 6 வீடுகள் என 7 வீடுகளுக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர். மின் இணைப்பையும் துண்டித்தனர். இச்சம்பவத்தால் மனமுடைந்த சயனின் மனைவி கீதா வீட்டிலிருந்த எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.

    அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாடகைக்கு தங்கி இருக்கும் 6 குடும்பத்தினர் பணி முடிந்து வீடு திரும்பியபோது வீடு சீல் வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இரவு தங்க இடமில்லாமல் குழந்தைகளோடு தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    • பலமுறை பணம் கேட்டும் அப்துல் முனாப் கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
    • தலைமறைவான முபாரக், குமார் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாஸ்கோ நகரை சோ்ந்தவர் அப்துல் முனாப்(வயது 45). தொழிலதிபரான இவர் பனியன் துணிகள் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் மங்கலத்தை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் சலாவுதீன், குமார் ஆகியோரிடமிருந்து அப்துல் முனாப் பனியன் துணிகள் வாங்கியுள்ளார்.

    பனியன் துணிகள் வாங்கியதற்காக தொகை ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். பலமுறை பணம் கேட்டும் அப்துல் முனாப் கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

    இந்த நிைலயில் அப்துல் முனாப்பை மாஸ்கோ நகரில் இருந்து காரில் சலாவுதீன்(40), முபாரக்(40), குமார்(38) ஆகிய 3 பேரும் கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் போில் வடக்கு போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து அப்துல் முனாப்பை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் சலாவுதீனை கைது செய்தனர். தலைமறைவான முபாரக், குமார் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பருவ மழைக்குப் பின்பு அணையின் நீராதாரங்களில் போதிய மழை பெய்யவில்லை.
    • கோடை காலத்தை பயன்படுத்தி அணையை முழுமையாக தூர் வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை உள்ளது. அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் மழைக்காலங்களில் நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியும், சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த சூழலில் கடந்த ஆண்டில் பருவமழை அணைக்கு முழுமையாக கைகொடுத்து உதவியது. இதனால் அணையும் அதன் முழு கொள்ளளவை எட்டியது. ஆனால் பருவ மழைக்குப் பின்பு அணையின் நீராதாரங்களில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளில் நீர்வரத்து குறைந்துள்ளது.

    இதன் காரணமாக அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்தும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர் இருப்பும் 50 அடிக்கு கீழாக சரிந்துள்ளது. கடந்த சில நாட்களாக வாட்டி வதைக்கும் வெப்பத்தின் தாக்குதலே இதற்கு காரணமாகும். ஆனால் இதே நிலை நீடித்தால் அணையின் நீர் இருப்பு அதல பாதாளத்திற்கு செல்வதுடன் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    மேலும் கோடை காலத்தை பயன்படுத்தி அணையை முழுமையாக தூர் வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இன்று காலை 8 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 48.17 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 21 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 38 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மழையும் இல்லாமல் உள்ளதோடு அணையில் இருந்து தண்ணீர் திறப்பால் அதன் நீர்மட்டம் சரிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

    • கடன் சுமை அதிகமாகி விட்டதால் தினமும் மனைவியிடம் புலம்பி வந்துள்ளா
    • மன அழுத்தத்தில் இருந்து வந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா ஆட்டையம்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 42). இவர் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியில் செயல்படும் ஒரு பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை செய்து வந்தார். இவர் ஆன்லைன் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக நிறைய கடன்கள் வாங்கினார்.

    கடன் சுமை அதிகமாகி விட்டதால் தினமும் மனைவியிடம் புலம்பி வந்துள்ளார். மன அழுத்தத்தில் இருந்து வந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து வந்த அவிநாசி போலீசார் உடலை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆன்லைனில் வாங்கிய கடனை அடைக்க முடியாததால் டெய்லர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மோகன தீபிகா இந்திய அளவில் 617-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
    • தமிழ்நாடு அரசு தேர்வு பயிற்சி மையம் மூலமாக தீவிரமாக படித்து இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், நந்தவனம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெறுவேடம்பாளையத்தை சேர்ந்த விவசாய தம்பதிகளான சந்திரசேகர்-ராஜேஸ்வரி தம்பதிகளின் மகள் மோகன தீபிகா (வயது 23). இவர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பதவிகளுக்காக அகில இந்திய அளவில் நடைபெற்ற யு.பி.எஸ்.சி தேர்வில் 617-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற யு.பி.எஸ்.சி., முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற மோகன தீபிகா செப்டம்பர் மாதம் நடைபெற்ற முதன்மை தேர்விலும் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களின் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. இதில் மோகன தீபிகா இந்திய அளவில் 617-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா வெறு வேடம்பாளையத்தை சேர்ந்த ஏழை விவசாயி மகளான நான் எனது ஊரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்தேன்.

    மேல்நிலை மற்றும் கல்லூரி படிப்பை கோவையில் படித்தேன். எனது குடும்ப சூழ்நிலை காரணமாக அரசு தேர்வில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத தயாரானேன். அதற்கு எனது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் உறுதுணையாக இருந்தனர்.

    மேலும் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் எனக்கு மிகவும் பயனளித்தது. தமிழ்நாடு அரசு தேர்வு பயிற்சி மையம் மூலமாக தீவிரமாக படித்து இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். தமிழக அரசு சார்பில் சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான பாராட்டு விழாவிற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    என்னை போன்று கிராமத்தில் உள்ள மாணவ- மாணவிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு அரசு தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பதே எனது ஆசை.

    இவ்வாறு அவர் கூறினார்

    • மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்களும் வந்தது.
    • ஒரு சிலர் தானாக முன்வந்து கடைகளை அப்புறப்படுத்தினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் மத்திய பஸ் நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்தநிலையில் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். இது தொடர்பாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்களும் வந்தது.

    இதையடுத்து இன்று திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாவலர்கள் மூலம் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தையும் அகற்றினர். ஒரு சிலர் தானாக முன்வந்து கடைகளை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. 

    • ஜெனரேட்டர் இருந்தும் போதிய பராமரிப்பு இல்லாததால் இயங்கவில்லை.
    • சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள்நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெறுகின்றனர்.

    இந்த நிலையில் பல்லடம் செஞ்சேரிமலை பகுதியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் முதியவர் ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.

    இந்தநிலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. ஜெனரேட்டர் இருந்தும் போதிய பராமரிப்பு இல்லாததால் இயங்கவில்லை. இதனால் செல்போன் டார்ச்லைட் உதவியுடன் மருத்துவம் பார்க்கும் நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • லாரிகளில் பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
    • பெரிய வெங்காயங்கள் டன் கணக்கில் அழுக தொடங்கியது.

    திருப்பூர்:

    திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் பழங்கள், வெங்காயம், காய்கறிகளை மொத்தமாக விற்பனை செய்யும் வியாபாரிகள் உள்ளனர். இவர்கள் மொத்தமாக வாங்கி குடோன்களில் இருப்பு வைத்து உள்ளார்கள்.

    வியாபாரிகளிடம் இருந்து பொதுமக்கள், சிறு வியாபாரிகள், தள்ளுவண்டி கடை வைத்துள்ளவர்கள், மளிகை கடை வியாபாரிகள் மூட்டை மூட்டையாக வாங்கி திருப்பூரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    தற்போது திருப்பூருக்கு கர்நாடகா, மராட்டியம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து டன் கணக்கில் லாரிகளில் பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. வரத்து அதிகரிப்பால் விற்பனை சூடு பிடிக்கும் என நினைத்த வியாபாரிகள் விற்பனை மந்தமாக காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர்.

    மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக வெங்காயம் 5 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2-ம் தரம் வெங்காயம் விலை குறைந்தாலும் அதிகளவில் விற்பனை நடைபெறவில்லை. வடமாநிலங்களில் இருந்து பல லாரிகளில் வரத்தும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் சேமித்து வைக்கும் குடோன்களில் வெங்காயங்கள் நிரம்பி வழிந்து மேலும் சேமிக்க இடமில்லாததால் தேக்கம் அடைந்துள்ளது.

    மேலும் பெரிய வெங்காயங்கள் டன் கணக்கில் அழுக தொடங்கியது. இதன் காரணமாக அழுகும் நிலையில் இருந்த பெரிய வெங்காயங்களை தென்னம்பாளையம் மார்க்கெட் அருகில் ஓடும் நொய்யல் ஆற்றின் கரையோரம் மூட்டை மூட்டையாக வியாபாரிகள் வேதனையுடன் வீசிச்சென்றனர்.

    மேலும் இருப்பு வைக்க இடமில்லாததால் வடமாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் ஏற்றி வந்த 10-க்கும் மேற்பட்ட லாரிகள் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே உள்ள சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரத்து அதிகரிப்பால் மேலும் பெரிய வெங்காய மூட்டைகள் அழுகுமோ என்ற அச்சத்திலும், கலக்கத்திலும் மொத்த வியாபாரிகள் உள்ளனர்.

    • போலியான சேர்க்கை ஆணையை அந்த கும்பல் மணியிடம் கொடுத்துள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றுபவர் மணி (வயது 44). இவரின் குழந்தைகளையும், தனது சகோதரரின் குழந்தைகளையும் சூலூரில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்க்க விரும்பினார். அதற்காக கார்த்திகேயன் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார்.

    அவர் தனது நண்பர்களான சின்னச்சாமி, மேகநாதன், கந்தவர் சிங், பெருமாள் ஆகியோருடன் சேர்ந்து அந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை ஆணை பெற்று தருவதாக கூறி போலீசார் மணியை நம்ப வைத்துள்ளனர்.

    இதனை நம்பிய மணி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு அவர்களிடம் ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் போலியான சேர்க்கை ஆணையை அந்த கும்பல் மணியிடம் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த சேர்க்கை ஆணையை வைத்து குழந்தைகளை மணி பள்ளியில் சேர்த்துள்ளார்.

    பின்னர் அந்த ஆணை போலியானது என்பதை பள்ளி நிர்வாகம் கண்டுபிடித்து குழந்தைகளை பள்ளியில் இருந்து திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து மணி அளித்த புகாரின் பேரில் கார்த்திகேயன், சின்னச்சாமி, மேகநாதன், கந்தவர் சிங், பெருமாள் ஆகியோா் மீது திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 19-ந் தேதி முதல் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் கிலோ நூல்கள் பயன்படுத்தப்படுகிறது.

    பல்லடம்:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    இந்தநிலையில், மின் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை உயர்வு, வாடகை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி தொழில் நலி வடைந்துள்ளது. கடந்த 2022 நெசவு கூலி உயர்வு ஒப்பந்தத்தின்படி கூலி உயர்வு வழங்க வலியுறுத்தியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடந்த 19-ந் தேதி முதல் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    விசைத்தறிகள் வேலை நிறுத்தப்போராட்டத்தால் மறு சுழற்சி நூல் மில்களில் ரூ.300 கோடி மதிப்பிலான நூல்கள் தேக்கமடைந்துள்ளது.

    இது குறித்து மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு மாநில தலைவர் ஜெயபால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறிகள் வேலை நிறுத்த போராட்டத்தால் ரூ.300 கோடி மதிப்பிலான நூல்கள் தேக்கமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் 1,700 ஸ்பின்னிங் நூற்பாலைகளும், 650 ஓ.இ.மில் என்கின்ற மறுசுழற்சி நூற்பாலைகளும், 5.5 லட்சம் விசைத்தறிகளும் உள்ளன. இதில் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.10 கோடி மதிப்பில் 5.50 லட்சம் கிலோ நூல்கள் உற்பத்தியாகின்றது.

    இதில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் கிலோ நூல்கள் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே விசைத்தறிகள் வேலை நிறுத்தத்தால் நூற்பாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான நூல்கள் தேங்கியுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு இதனை விசைத்தறியாளர்கள்-ஜவுளி உற்பத்தியாளர்கள் பிரச்சனை என்று பாராமல், ஒட்டு மொத்த ஜவுளி தொழிலுக்கு ஏற்பட்ட பிரச்சனை என்பதனை கருத்தில் கொண்டு உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அவருக்கு மதுரையைச்சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
    • அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார்.

    மதுரை அலங்காநல்லூரை சேர்ந்தவர் பிரான்சிஸ்(வயது 48). இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். அவருக்கு மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார்.

    இந்த நிலையில் பிரான்சிஸ் தனது கள்ளக்காதலி மற்றும் கள்ளக்காதலியின் மகள் ஆகியோருடன் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருப்பூர் மாஸ்கோ நகரில் வாடகைக்கு தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.

    அப்போது கள்ளக்காதலியின் 16 வயது மகளை பிரான்சிஸ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தநிலையில் அந்த சிறுமிக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவரிடம் சென்று பரிசோதித்த போது சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சிறுமியின் தாய் திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரான்சிசை கைது செய்தனர்.

    • போலீசார் தேடுவதை அறிந்த தம்பதியினர் தலைமறைவானார்கள்.
    • ஐதராபாத்தில் தங்கியிருந்த தம்பதியை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் ராமசாமி. இவர் அதே பகுதியில் பனியன் துணிகள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் இருந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சோ்ந்த பிரவீன் குமார், கல்பனா தம்பதியினர் ரூ.1 கோடியே 45 லட்சத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பனியன் துணிகள் கொள்முதல் செய்துள்ளனர். ஆனால் அந்த பணத்தை தராமல் ஏமாற்றி வந்தனர்.

    இதனால் ஏமாற்றம் அடைந்த மகேஷ் ராமசாமி ஐதராபாத் தம்பதி மீது திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    போலீசார் தேடுவதை அறிந்த தம்பதியினர் தலைமறைவானார்கள். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தம்பதியை மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர் தெலுங்கானா சென்று தேடிவந்தனர். அப்போது ஐதராபாத்தில் தங்கியிருந்த தம்பதியை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×