என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் பணிகளை முடிக்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்
- தேர்தல் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார்.
- பிப்ரவரி மாதத்தில் தேர்தல் அறிவிப்புகள் வந்துவிடும் என்பதால் பணிகளை விரைந்து செயல்படுத்தி முடிக்க வேண்டும்.
அனுப்பர்பாளையம்:
2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பாக திருப்பூர் வடக்கு மற்றும் அவிநாசி சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க. சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. மாநகர பொறுப்பாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார்.
இதில் மேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது திருப்பூர் வடக்கு தொகுதி மற்றும் அவிநாசி சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு என்னென்ன பணிகள் செய்ய வேண்டும். பொதுமக்களிடம் பூத் கமிட்டி ஏஜெண்டுகள் எவ்வாறு அணுக வேண்டும். அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்களை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளுடன் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார்.
மேலும் தேர்தல் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார். குறிப்பாக வரும் டிசம்பர் மாதத்திற்குள் 2 தொகுதிகளிலும் முழுமையாக ஆய்வு செய்து, எந்தெந்த வாக்கு சாவடிகளில் நாம் பலவீனமாக இருக்கிறோம் என்பதை கண்டறிந்து அங்கு வாக்கு வங்கியை உயர்த்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை செய்ய வேண்டும்.
அ.தி.மு.க.,-பா.ஜ.க. எந்தெந்த வாக்கு சாவடிகளில் வாக்கு அதிகம் வைத்துள்ளது, அங்கு நம்முடைய வாக்குகளை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பாக இந்த பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். பிப்ரவரி மாதத்தில் தேர்தல் அறிவிப்புகள் வந்துவிடும் என்பதால் பணிகளை விரைந்து செயல்படுத்தி முடிக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.