என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

உடுமலை அமராவதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்வு- பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை நீடிப்பு
- தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- அமாவாசை தினத்தையொட்டி நேற்று கோவிலுக்கு திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது .இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும் புதிய ஆயகட்டுப்பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு 1590 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒரே நாளில் நீர்மட்டம் 6 அடி உயர்ந்து தற்போது 51.25 அடியாக உள்ளது. 18 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
உடுமலை திருமூர்த்தி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்புகளை தாண்டி விழுந்த வெள்ளமானது அடிவாரப்பகுதியில் உள்ள கன்னிமார் கோவில், மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தபடி செல்கிறது.
அமாவாசை தினத்தையொட்டி நேற்று கோவிலுக்கு திரளான பக்தர்கள் வந்திருந்தனர். ஆனால் அவர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இன்று காலை தண்ணீர் சற்று குறைந்ததால் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.