என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchalinga Waterfalls"

    • கடந்த 24-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
    • கடந்த 10 நாட்களாக அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமணலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து 750 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது.

    அருவிக்கு வனப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகள், ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர்.

    இந்தநிலையில் கடந்த 24-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து வனப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்பு அவ்வப்போது மழை பெய்து வந்ததால் அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது.

    கடந்த 10 நாட்களாக அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தண்ணீரின் சீற்றம் குறைந்து அருவி இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்தோடு அருவியில் குளித்து மகிழ்கின்றனர். 

    • தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • அமாவாசை தினத்தையொட்டி நேற்று கோவிலுக்கு திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது .இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும் புதிய ஆயகட்டுப்பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு 1590 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒரே நாளில் நீர்மட்டம் 6 அடி உயர்ந்து தற்போது 51.25 அடியாக உள்ளது. 18 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    உடுமலை திருமூர்த்தி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்புகளை தாண்டி விழுந்த வெள்ளமானது அடிவாரப்பகுதியில் உள்ள கன்னிமார் கோவில், மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தபடி செல்கிறது.

    அமாவாசை தினத்தையொட்டி நேற்று கோவிலுக்கு திரளான பக்தர்கள் வந்திருந்தனர். ஆனால் அவர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இன்று காலை தண்ணீர் சற்று குறைந்ததால் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • வடமேற்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி கடந்த வாரம் பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் பலத்த மழை பெய்தது.
    • வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இந்த அருவிக்கு மேல்குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகள் நீராதாரமாக உள்ளது.

    நீர்வழித்தடங்களில் உள்ள மூலிகைகள் மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது அதில் தானாகவே கரைந்து விடுகிறது. இதனால் தண்ணீர் உடலின் மேல் விழும்போது உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதுடன் மன அழுத்தம் குறைந்து விடுகிறது. இதனால் அதில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

    இந்தநிலையில் வடமேற்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி கடந்த வாரம் பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. பாதுகாப்பற்ற சூழல் நிலவியதால் அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது.

    தற்போது சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சபரிமலை சீசன் என்பதால் ஐய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது.

    • அருவியின் நீராதாரங்களில் நீர்வரத்து குறைந்ததால் பஞ்சலிங்க அருவியிலும் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்தது.
    • அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் திடீரென மழை பெய்தது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலை ஆறு, கிழவிப்பட்டிஆறு, உப்புமண்ணபட்டிஆறு, பாலாறு, உழுவியாறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது. வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகள் நீர்வரத்தை பெறுகிறது.

    வனப்பகுதியில் பல்வேறு பகுதியில் ஓடிவருகின்ற ஆறுகள் பஞ்சலிங்கங்களுக்கு அருகில் ஒன்று சேர்ந்து அருவியாக கொட்டுகிறது. அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர். இந்த சூழலில் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்பட்டது.

    இதன் காரணமாக அருவியின் நீராதாரங்களில் நீர்வரத்து குறைந்ததால் பஞ்சலிங்க அருவியிலும் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்தது. இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இந்த நிலையில் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் திடீரென மழை பெய்தது. இதன் காரணமாக அருவிக்கு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    ×