என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்வதை காணலாம்.
பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
- கடந்த 24-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
- கடந்த 10 நாட்களாக அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமணலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து 750 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது.
அருவிக்கு வனப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகள், ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் கடந்த 24-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து வனப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்பு அவ்வப்போது மழை பெய்து வந்ததால் அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது.
கடந்த 10 நாட்களாக அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தண்ணீரின் சீற்றம் குறைந்து அருவி இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்தோடு அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.






