என் மலர்
திருப்பூர்
- குழுவில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதால் கூடுதல் லாபம் பெறலாம் என கூறியிருந்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் முத்தனம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 32). இவரது செல்போன் எண் ஒரு வாட்ஸ்-அப் குழுவில் சேர்க்கப்பட்டது. அந்த குழுவில் உள்ளவர்கள் சமூகவலைதள சேனல்களுக்கு பணம் செலுத்தி அதனை குழுவில் பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிப்பது தொடர்பாக பேசிக்கொண்டனர்.
தொடர்ந்து மணியும் அந்த குழுவில் கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து சில தொகையை பெற்றார். பின்னர் மணியை டெலிகிராம் குழுவில் இணைத்தனர். அந்த குழுவில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதால் கூடுதல் லாபம் பெறலாம் என கூறியிருந்தனர்.
இதை நம்பிய மணி பல்வேறு வங்கி கணக்குகள் மற்றும் 14 பரிவர்த்தனைகள் மூலம் ரூ.18 லட்சத்து 90 ஆயிரம் அனுப்பினார். அதற்கான லாபத்தை எடுக்க முயன்ற போது மேலும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டுமென அறிவிப்பு வந்துள்ளது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மணி, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- திருநகர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- ஆர்.என்.புரம் ஒரு பகுதி, கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருநகர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வருகிற 2ந் தேதி (புதன் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரிநகர், எருக்காடு ஒரு பகுதி, கே.வி.ஆர்.நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கே.என்.எஸ்.கார்டன், ஆலங்காடு, வெங்கடாச்சலபுரம், காதி காலனி, கே.ஆர்.ஆர்.தோட்டம், பூசாரி தோட்டம், கருவம்பாளையம் எலிமெண்டெரி ஸ்கூல் முதல் மற்றும் இரண்டாம் வீதி, பொன்னுசாமி கவுண்டர் வீதி, முத்துசாமி கவுண்டர் வீதி, எஸ்.ஆர்.நகர் வடக்கு மற்றும் தெற்கு பாத்திமாநகர், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், திரு.வி.க.நகர், எல்.ஐ.சி.காலனி, ராயபுரம், தெற்கு தொட்டம்,
எஸ்.பி.ஐ.காலனி, குமரப்புரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, செல்லம் நகர், புவனேஸ்வரி நகர், பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், ஜே.ஜே.நகர், திருவள்ளுவர் நகர், கொங்கணகிரி கோவில், ஆர்.என்.புரம் ஒரு பகுதி, கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- வடமாநிலங்களில் இருந்து திருப்பூர் வரும் ரெயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதை ப்பொருட்களை தடுக்கும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வடமாநிலங்களில் இருந்து திருப்பூர் வரும் ரெயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் வீரபாண்டி குப்பாண்டாம்பாளையம் பகுதியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து பனியன் நிறுவனங்கள் மற்றும் கட்டிடப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வீட்டிற்குள் சென்று சோதனையிட்ட போது அங்கு 300 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த பையில் சோதனை செய்த போது அதில் 2 நாட்டு துப்பாக்கிகள் இருந்தது. அதனைப்பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே கஞ்சா, கைத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார் அதனை பதுக்கி வைத்திருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ரவிராஜ் (வயது 25), ஜாகீர் அன்வர்(30) ஆகிய 2பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் துப்பாக்கிகள் குறித்து விசாரணை நடத்திய போது, பீகாரில் இருந்து ஒரு துப்பாக்கியை ரூ.6 ஆயிரத்திற்கு வாங்கி வந்து திருப்பூரில் ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அவர்கள் இதற்கு முன்பு திருப்பூரில் துப்பாக்கிகளை விற்பனை செய்துள்ளனரா, யாருக்கு விற்பனை செய்வதற்காக துப்பாக்கிகளை கொண்டு வந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிகளுடன் வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ரிதன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு சில ஆடியோக்களை அனுப்பி உள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்த ரிதன்யா (வயது 27) என்ற பெண்ணுக்கும் அப்பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது
இந்நிலையில், மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காருக்குள் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரைகளை தின்ற நிலையில், ரிதன்யா பிணமாக கிடந்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் சேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ரிதன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் சில ஆடியோக்களை அனுப்பி உள்ளார். அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அந்த ஆடியோவில், தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய 3 பேரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு கடுமையாக சித்ரவதை செய்வதாகவும், இந்த வாழ்க்கையை இனி தன்னால் வாழ முடியாது, மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை என கூறியிருந்தார்.
இதனையடுத்து, ரிதன்யா தற்கொலை செய்த விவகாரத்தில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- ரிதன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- ரிதன்யாவுக்கு திருமணமாகி 3 மாதங்கள் மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.
அவிநாசி:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை, பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரிதன்யா (வயது 27). இவருக்கும் கைகாட்டிப்புதூர் ஜெயம்கார்டன் பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணமானது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்து காரை எடுத்துச்சென்ற ரிதன்யா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காருக்குள் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரைகளை தின்ற நிலையில், ரிதன்யா பிணமாக கிடந்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் சேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ரிதன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப பிரச்சனையில் ரிதன்யா விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் சில ஆடியோக்களை அனுப்பி உள்ளார். அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அந்த ஆடியோவில், தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய 3 பேரும் சேர்ந்து கடுமையாக சித்ரவதை செய்வதாகவும், இந்த வாழ்க்கையை இனி தன்னால் வாழ முடியாது, மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை என கூறியிருந்தார்.
எனவே கணவர், மாமனார், மாமியார் சித்ரவதை காரணமாக ரிதன்யா தற்கொலை செய்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரிதன்யாவுக்கு திருமணமாகி 3 மாதங்கள் மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது. தந்தைக்கு ஆடியோ அனுப்பி விட்டு இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- புதிய மின் கட்டண உயர்வு என்ற தகவலால் அதிர்ச்சி.
- மின்கட்டண சலுகை போன்ற சிறப்பு திட்டங்களை வழங்குவதன்மூலம் இந்த பின்னலாடை தொழிலை மேலும் வளர்ச்சி பெற செய்ய முடியும்.
நல்லூர்:
புதிய மின்கட்டண உயர்வை தவிர்க்க வேண்டும் என திருப்பூர் தொழில் துறையினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் சங்கமான டீமா அமைப்பின் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறியதாவது:-
திருப்பூரில் உள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் மூலம் 75சதவீத பின்னலாடை உற்பத்தி பணிகள் நடைபெறுகின்றன. மீதமுள்ள பெரிய நிறுவனங்கள் மூலம் ஏற்றுமதி, உள்நாட்டு வர்த்தகம் வளர்ந்து வருகிறது. மூலப்பொருட்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை, மழை, நூல் விலை உயர்வு, பஞ்சு கிடைக்காமல் தவிப்பு, தொழிலில் உள்ள கடன், வராக்கடன் போன்ற பல்வேறு பிரச்சினைகளை சிறு,குறு, நடுத்தர தொழில் துறையினர் சந்தித்து வருகின்றனர்.
தற்போது மின்சார கட்டணம் உயரப்போகிறது என்ற தகவல் வெளி வந்துள்ளது. ஏற்கனவே 'பீக் ஹவர்ஸ்' பிரச்சினை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள், தற்போது புதிய மின் கட்டண உயர்வு என்ற தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ளன.
தற்போது இந்திய ஜவுளித்தொழில் துறையினருக்கு சர்வதேச அளவில் நல்ல பிரகாசமான வர்த்தக வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. போட்டி நாடுகளில் உள்ள பிரச்சினைகள், தரம், விலை போன்ற பிரச்சினைகளாலும், அமெரிக்க நாடு விதித்துள்ள வரி விகிதத்தாலும் இந்தியாவுக்கு பல சாதகமான விஷயங்கள் கிடைத்துள்ளன.
இந்த சமயத்தில் எளிமையான வங்கிக்கடன், மின்கட்டண சலுகை போன்ற சிறப்பு திட்டங்களை வழங்குவதன்மூலம் இந்த பின்னலாடை தொழிலை மேலும் வளர்ச்சி பெற செய்ய முடியும்.
ஆனால் புதிய மின்கட்டண உயர்வு அறிவிக்கப்படும் போது தொழில் துறையினர் சோர்வு அடைவது உறுதி. மகாராஷ்டிரா அரசு அங்கு மின்கட்டணத்தில் 10சதவீதத்தை குறைத்து அறிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.
குறைந்தபட்சம் மின்கட்டணத்தை உயர்த்தாமல் இருந்தாலாவது திருப்பூர் பின்னலாடைத்தொழில் துறையினர் நிம்மதியாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்களான சஞ்சித், சுகேஷ், வீரராஜ், சரவணன் ஆகிய 4 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
- மாணவர்கள் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொழிஞ்சி வாடி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 215 மணவர்கள் படித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். பின்னர் காலை உணவுத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. 42 மாணவர்கள் உணவு சாப்பிட்டனர்.
சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்களான சஞ்சித், சுகேஷ், வீரராஜ், சரவணன் ஆகிய 4 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்களை ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த தகவல் அறிந்ததும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் ஆகியோர் சென்று மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.
மாணவர்கள் சாப்பிட்ட உணவில் பல்லி விழுந்துள்ளதாகவும், அதனை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் கேட்ட கேள்விகளுக்கு தமிழரசன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
- சுமன் மற்றும் தமிழரசன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியில் கடந்த 25-ந் தேதி அதிகாலை இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பாலமுருகன் கொலை செய்யப்பட்டதும், சம்பவ இடத்திற்கு வந்த அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவர், தனது அண்ணனை கொன்று விட்டார்களே என அழுது புலம்பினார். அவர் மீது எழுந்த சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
போலீசார் கேட்ட கேள்விகளுக்கு தமிழரசன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலமுருகனை தனது நண்பர்களான சுமன், நரசிம்ம பிரவீன், அஸ்வின் ஆகியோருடன் சேர்ந்து வெட்டி கொலை செய்ததை தமிழரசன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கேரளாவில் பதுங்கி இருந்த முன்னாள் இந்து முன்னணி நிர்வாகியும், இந்திய ஜனநாயக கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவருமான சுமனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சுமன் மற்றும் தமிழரசன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கைதான 2 பேரையும் போலீசார் திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய அஸ்வின், நரசிம்ம பிரவீன் ஆகிய 2பேரையும் தேடி கேரளா மற்றும் வால்பாறை பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். பணம்-கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இந்த கொலை நடந்துள்ளது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள 2 பேரையும் பிடித்து விசாரிக்கும்போது கொலைக்கான முழு காரணமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- பெண்கள், ஆண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு , வாக்குவாதம் ஏற்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் எஸ்.ஆர் நகர் வடக்கு பகுதியில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் தொல்லை அதிகரிப்பதுடன் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் இன்று ஏராளமான பெண்கள், ஆண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடை அமைந்துள்ள வளாகத்தின் உள்ளே செல்ல முயன்றதால் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு , வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து நொய்யல் புது சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரிடம் கையெடுத்து கும்பிட்டு தங்களுக்கு இந்த கடை வேண்டாம் என மன்றாடி கேட்டுக்கொண்டனர்.
பொதுமக்கள் கூறுகையில், தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் பகுதியில் டாஸ்மாக் கடை வைக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் திருப்பூர் எஸ்.ஆர். நகர் பகுதியில் சிலர் கடையை வைத்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பொது மக்களின் எதிர்ப்பை மீறி செயல்பட்டு வருகிறார்கள். புதிதாக வரும் மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- திருப்பூர் மாநகராட்சிக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் ஆணையாளரை நியமிக்க வேண்டும்.
- தென்னை நார் தொழில் மின்கட்டண உயர்வு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூரில் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மின்கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. திருப்பூரில் தொழில்கள் நலிவடைந்து பிற மாநிலங்களுக்கு பனியன் தொழில்கள் இடம்பெயர்ந்துள்ளன. இருக்கும் தொழிலை காப்பாற்றாமல் முதலமைச்சர் வெளிநாட்டுக்கு சென்று, தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க வாருங்கள் என்று அழைப்பு விடுகிறார்.
ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி அன்னிய செலாவணியை ஈட்டி கொடுக்கும் திருப்பூர் பனியன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகை உயர்வால் தொழிலாளர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தென்னை நார் தொழில் மின்கட்டண உயர்வு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் ஆணையாளரை நியமிக்க வேண்டும். ரூ.160 கோடி கடன் பெற்று சாலை அமைப்பதாக கூறினார்கள். ஆனால் சாலைகள் முறையாக அமைக்காமல் பணம் சூறையாடப்பட்டுள்ளது. தண்ணீர் வரி, பாதாள சாக்கடை கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதற்காக அவசர கூட்டம் மாநகராட்சியில் நடத்துவதாக தகவல் வருகிறது. இதை எதிர்த்து அ.தி.மு.க. கடுமையாக போராடும். தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தி.மு.க.வின் அதிகாரபூர்வமான வலைதளத்தில் கேவலமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர். இதுவரை முதலமைச்சர் அதை கண்டிக்கவில்லை. அந்த பதிவை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும். அதுதான் நாகரீக அரசியலுக்கு வழிவகுக்கும். ஒருநாள் பொறுத்திருப்போம். மாற்றம் இல்லை என்றால் நாங்களும் இதே முறையை கையாளுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், பகுதி செயலாளர் அரிகரசுதன் ஆகியோர் உடனிருந்தனர்.
- புதுமண தம்பதியினர் கடந்த 7-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்துக்காக திருப்பூர் வந்தனர்.
- முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் காங்கயம் ரோடு, விஜயாபுரத்தைச் சேர்ந்தவர் அக்பர் அலி, ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மனைவி அலிமா பிபி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மூத்த மகள் அனீஸ் (வயது 25). இவருக்கும் மதுரையை சேர்ந்த முகமது இம்ரான் (29) என்பவருக்கும் கடந்த மாதம் 28-ந்தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.
புதுமண தம்பதியினர் கடந்த 7-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்துக்காக திருப்பூர் வந்தனர். இங்கு குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாடினர். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோரில் பொருட்கள் வாங்குவதற்காக புதுமண தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது பள்ளக்காட்டுப்புதூர் அருகே சென்றபோது அனீசின் சேலை மோட்டார் சைக்கிளின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிக்கொண்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் நடுரோட்டில் கீழே விழுந்தார்.
அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை அங்கிருந்து மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து திருப்பூர் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகரன், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணமாகி 20 நாட்களில் புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூரின் பங்களிப்பு 68 சதவீதமாக உயர்ந்துள்ளது.
- சமீபத்தில் கையெழுத்தான இங்கிலாந்துடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வெகு விரைவில் கையெழுத்தாகவுள்ளது.
நல்லூர்:
இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூரின் பங்களிப்பு 68 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் தொழில் துறையினர் உற்சாகமடைந்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைசாமி கூறியதாவது:-
கடந்த 2024-25ம் நிதியாண்டு கணக்கின் அடிப்படையில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ரூ.40000 கோடி இலக்கினை எட்டியுள்ளது. இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 68 சதவீதம் திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகிறது. கடந்த ஆண்டில் இது 54 சதவீதமாக இருந்தது.
ஏற்றுமதிக்கான பல்வேறு சலுகைகள் குறைக்கப்பட்ட சூழ்நிலை, பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி, அபரிதமான வரி மற்றும் மின்கட்டண உயர்வு , ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக வளர்ந்த பொருளாதார நாடுகளின் மந்த நிலை , செங்கடல் பிரச்சனை, தாறுமாறாக உயர்ந்த கப்பல் போக்குவரத்து கட்டணம், கன்டெய்னர் பற்றாக்குறை போன்ற பல்வேறு சவால்களை சந்தித்த சூழ்நிலையிலும் இந்த வளர்ச்சியை நாம் கண்டுள்ளோம் என்றால் அது உண்மையிலேயே வரலாற்று சாதனைதான்.
சமீபத்தில் கையெழுத்தான இங்கிலாந்துடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வெகு விரைவில் கையெழுத்தாகவுள்ளது. அமெரிக்காவுடனான இருதரப்பு ஒப்பந்தம், இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடம் கையெழுத்தாகவுள்ளது.
ஐரோப்பாவுடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் போன்ற சாதகமான வாய்ப்புகளால் வரும் காலங்களில் பின்னலாடை ஏற்றுமதி வளர்ச்சி மிக பிரமாண்டமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
போர்க்கால அடிப்படையில் தொழில்துறை தொடர்ந்து வைக்கும் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும், அவ்வாறு உதவும்பட்சத்தில் இன்றைய வளர்ச்சி அடுத்த 5 வருடங்களில் இரட்டிப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.






