என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் கைத்துப்பாக்கிகளுடன் பதுங்கி இருந்த வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது
- வடமாநிலங்களில் இருந்து திருப்பூர் வரும் ரெயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதை ப்பொருட்களை தடுக்கும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வடமாநிலங்களில் இருந்து திருப்பூர் வரும் ரெயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் வீரபாண்டி குப்பாண்டாம்பாளையம் பகுதியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து பனியன் நிறுவனங்கள் மற்றும் கட்டிடப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வீட்டிற்குள் சென்று சோதனையிட்ட போது அங்கு 300 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த பையில் சோதனை செய்த போது அதில் 2 நாட்டு துப்பாக்கிகள் இருந்தது. அதனைப்பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே கஞ்சா, கைத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார் அதனை பதுக்கி வைத்திருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ரவிராஜ் (வயது 25), ஜாகீர் அன்வர்(30) ஆகிய 2பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் துப்பாக்கிகள் குறித்து விசாரணை நடத்திய போது, பீகாரில் இருந்து ஒரு துப்பாக்கியை ரூ.6 ஆயிரத்திற்கு வாங்கி வந்து திருப்பூரில் ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அவர்கள் இதற்கு முன்பு திருப்பூரில் துப்பாக்கிகளை விற்பனை செய்துள்ளனரா, யாருக்கு விற்பனை செய்வதற்காக துப்பாக்கிகளை கொண்டு வந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிகளுடன் வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






