சித்ரவதை செய்த கணவர் குடும்பம் - தந்தைக்கு ஆடியோ அனுப்பிவிட்டு தற்கொலை செய்த புதுப்பெண்

ரிதன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ரிதன்யாவுக்கு திருமணமாகி 3 மாதங்கள் மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.
சித்ரவதை செய்த கணவர் குடும்பம் - தந்தைக்கு ஆடியோ அனுப்பிவிட்டு  தற்கொலை செய்த புதுப்பெண்
Published on

அவிநாசி:

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை, பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரிதன்யா (வயது 27). இவருக்கும் கைகாட்டிப்புதூர் ஜெயம்கார்டன் பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணமானது.

சம்பவத்தன்று வீட்டில் இருந்து காரை எடுத்துச்சென்ற ரிதன்யா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காருக்குள் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரைகளை தின்ற நிலையில், ரிதன்யா பிணமாக கிடந்தார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் சேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ரிதன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்ப பிரச்சனையில் ரிதன்யா விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் சில ஆடியோக்களை அனுப்பி உள்ளார். அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அந்த ஆடியோவில், தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய 3 பேரும் சேர்ந்து கடுமையாக சித்ரவதை செய்வதாகவும், இந்த வாழ்க்கையை இனி தன்னால் வாழ முடியாது, மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை என கூறியிருந்தார்.

எனவே கணவர், மாமனார், மாமியார் சித்ரவதை காரணமாக ரிதன்யா தற்கொலை செய்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரிதன்யாவுக்கு திருமணமாகி 3 மாதங்கள் மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது. தந்தைக்கு ஆடியோ அனுப்பி விட்டு இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com