என் மலர்
நீங்கள் தேடியது "ஆடை உற்பத்தியாளர்கள்"
- இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூரின் பங்களிப்பு 68 சதவீதமாக உயர்ந்துள்ளது.
- சமீபத்தில் கையெழுத்தான இங்கிலாந்துடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வெகு விரைவில் கையெழுத்தாகவுள்ளது.
நல்லூர்:
இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூரின் பங்களிப்பு 68 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் தொழில் துறையினர் உற்சாகமடைந்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைசாமி கூறியதாவது:-
கடந்த 2024-25ம் நிதியாண்டு கணக்கின் அடிப்படையில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ரூ.40000 கோடி இலக்கினை எட்டியுள்ளது. இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 68 சதவீதம் திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகிறது. கடந்த ஆண்டில் இது 54 சதவீதமாக இருந்தது.
ஏற்றுமதிக்கான பல்வேறு சலுகைகள் குறைக்கப்பட்ட சூழ்நிலை, பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி, அபரிதமான வரி மற்றும் மின்கட்டண உயர்வு , ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக வளர்ந்த பொருளாதார நாடுகளின் மந்த நிலை , செங்கடல் பிரச்சனை, தாறுமாறாக உயர்ந்த கப்பல் போக்குவரத்து கட்டணம், கன்டெய்னர் பற்றாக்குறை போன்ற பல்வேறு சவால்களை சந்தித்த சூழ்நிலையிலும் இந்த வளர்ச்சியை நாம் கண்டுள்ளோம் என்றால் அது உண்மையிலேயே வரலாற்று சாதனைதான்.
சமீபத்தில் கையெழுத்தான இங்கிலாந்துடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வெகு விரைவில் கையெழுத்தாகவுள்ளது. அமெரிக்காவுடனான இருதரப்பு ஒப்பந்தம், இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடம் கையெழுத்தாகவுள்ளது.
ஐரோப்பாவுடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் போன்ற சாதகமான வாய்ப்புகளால் வரும் காலங்களில் பின்னலாடை ஏற்றுமதி வளர்ச்சி மிக பிரமாண்டமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
போர்க்கால அடிப்படையில் தொழில்துறை தொடர்ந்து வைக்கும் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும், அவ்வாறு உதவும்பட்சத்தில் இன்றைய வளர்ச்சி அடுத்த 5 வருடங்களில் இரட்டிப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
- கடந்த நான்கு மாதங்களாக நூல் விலை அதிகரிக்காமல், ஒரே நிலையில் இருந்து வருவது திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
திருப்பூர்:
திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ற படி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடை ளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வருகிறது. எனவே நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர்.
கடந்த ஜனவரி மாதம் 20 ரூபாய் நூல் விலை குறைந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் நூல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஜனவரி மாத விலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக மார்ச், ஏப்ரல் மாதத்திலும் நூல் விலையில் மாற்றம் இல்லாமல் நீடித்தது.
இந்நிலையில் நடப்பு (மே) மாதத்திற்கான நூல் விலை இன்று அறிவிக்கப்பட்டது. அதில் 10ம் நம்பர் மற்றும் 16ம் நம்பர் கோம்டு நூல் விலை மட்டும் 5 ரூபாய் உயர்ந்துள்ளது. (திருப்பூரில் இந்த வகை நூல்கள் அதிக அளவில் பயன்படுத்துவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது) மற்ற நூல் வகைகள் அனைத்தும் கடந்த மாதத்தை போலவே அதே நிலை தொடரும் என நூற்பாலைகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி கடந்த நான்கு மாதங்களாக நூல் விலை அதிகரிக்காமல், ஒரே நிலையில் இருந்து வருவது திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
நூல் விலையானது ஒரு கிலோ 10-வது நம்பர் கோம்டு நூல் ரூ.185-க்கும், 16-ம் நம்பர் ரூ.195-க்கும், 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.253-க்கும், 24-ம் நம்பர் ரூ.265-க்கும், 30-ம் நம்பர் ரூ.275-க்கும், 34-ம் நம்பர் ரூ.295-க்கும், 40-ம் நம்பர் ரூ.315-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.245-க்கும், 24-ம் நம்பர் ரூ. 255-க்கும், 30-ம் நம்பர் ரூ.265-க்கும், 34-ம் நம்பர் ரூ. 285-க்கும், 40-ம் நம்பர் ரூ.305-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.