என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புதிய மின்கட்டண உயர்வை தவிர்க்க வேண்டும்- திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
    X

    புதிய மின்கட்டண உயர்வை தவிர்க்க வேண்டும்- திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

    • புதிய மின் கட்டண உயர்வு என்ற தகவலால் அதிர்ச்சி.
    • மின்கட்டண சலுகை போன்ற சிறப்பு திட்டங்களை வழங்குவதன்மூலம் இந்த பின்னலாடை தொழிலை மேலும் வளர்ச்சி பெற செய்ய முடியும்.

    நல்லூர்:

    புதிய மின்கட்டண உயர்வை தவிர்க்க வேண்டும் என திருப்பூர் தொழில் துறையினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் சங்கமான டீமா அமைப்பின் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறியதாவது:-

    திருப்பூரில் உள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் மூலம் 75சதவீத பின்னலாடை உற்பத்தி பணிகள் நடைபெறுகின்றன. மீதமுள்ள பெரிய நிறுவனங்கள் மூலம் ஏற்றுமதி, உள்நாட்டு வர்த்தகம் வளர்ந்து வருகிறது. மூலப்பொருட்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை, மழை, நூல் விலை உயர்வு, பஞ்சு கிடைக்காமல் தவிப்பு, தொழிலில் உள்ள கடன், வராக்கடன் போன்ற பல்வேறு பிரச்சினைகளை சிறு,குறு, நடுத்தர தொழில் துறையினர் சந்தித்து வருகின்றனர்.

    தற்போது மின்சார கட்டணம் உயரப்போகிறது என்ற தகவல் வெளி வந்துள்ளது. ஏற்கனவே 'பீக் ஹவர்ஸ்' பிரச்சினை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள், தற்போது புதிய மின் கட்டண உயர்வு என்ற தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ளன.

    தற்போது இந்திய ஜவுளித்தொழில் துறையினருக்கு சர்வதேச அளவில் நல்ல பிரகாசமான வர்த்தக வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. போட்டி நாடுகளில் உள்ள பிரச்சினைகள், தரம், விலை போன்ற பிரச்சினைகளாலும், அமெரிக்க நாடு விதித்துள்ள வரி விகிதத்தாலும் இந்தியாவுக்கு பல சாதகமான விஷயங்கள் கிடைத்துள்ளன.

    இந்த சமயத்தில் எளிமையான வங்கிக்கடன், மின்கட்டண சலுகை போன்ற சிறப்பு திட்டங்களை வழங்குவதன்மூலம் இந்த பின்னலாடை தொழிலை மேலும் வளர்ச்சி பெற செய்ய முடியும்.

    ஆனால் புதிய மின்கட்டண உயர்வு அறிவிக்கப்படும் போது தொழில் துறையினர் சோர்வு அடைவது உறுதி. மகாராஷ்டிரா அரசு அங்கு மின்கட்டணத்தில் 10சதவீதத்தை குறைத்து அறிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

    குறைந்தபட்சம் மின்கட்டணத்தை உயர்த்தாமல் இருந்தாலாவது திருப்பூர் பின்னலாடைத்தொழில் துறையினர் நிம்மதியாக இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×