என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இந்து முன்னணி பிரமுகர் கொலை - 2 பேர் கைது
    X

    கொலை செய்யப்பட்ட பாலமுருகன்

    இந்து முன்னணி பிரமுகர் கொலை - 2 பேர் கைது

    • போலீசார் கேட்ட கேள்விகளுக்கு தமிழரசன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
    • சுமன் மற்றும் தமிழரசன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியில் கடந்த 25-ந் தேதி அதிகாலை இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் பாலமுருகன் கொலை செய்யப்பட்டதும், சம்பவ இடத்திற்கு வந்த அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவர், தனது அண்ணனை கொன்று விட்டார்களே என அழுது புலம்பினார். அவர் மீது எழுந்த சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் கேட்ட கேள்விகளுக்கு தமிழரசன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலமுருகனை தனது நண்பர்களான சுமன், நரசிம்ம பிரவீன், அஸ்வின் ஆகியோருடன் சேர்ந்து வெட்டி கொலை செய்ததை தமிழரசன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கேரளாவில் பதுங்கி இருந்த முன்னாள் இந்து முன்னணி நிர்வாகியும், இந்திய ஜனநாயக கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவருமான சுமனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    சுமன் மற்றும் தமிழரசன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கைதான 2 பேரையும் போலீசார் திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய அஸ்வின், நரசிம்ம பிரவீன் ஆகிய 2பேரையும் தேடி கேரளா மற்றும் வால்பாறை பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். பணம்-கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இந்த கொலை நடந்துள்ளது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள 2 பேரையும் பிடித்து விசாரிக்கும்போது கொலைக்கான முழு காரணமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×