search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அரசு மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமா?
    X

    பல்லடம் அரசு மருத்துவமனையில் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த போது எடுத்தப்படம்.

    பல்லடம் அரசு மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமா?

    • பல்லடம் அரசு மருத்துவமனையில் எம்.எஸ்.எம் ஆனந்தன் எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • எம்.எஸ்.எம் ஆனந்தன் எம்.எல்.ஏ. நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அரசு மருத்துவமனையில் எம்.எஸ்.எம் ஆனந்தன் எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று,அங்குள்ள நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.அப்போது உள்நோயாளி சிகிச்சை பிரிவில் ஒரே ஒரு கழிவறை உள்ளது.எனவும், கூடுதலாக கழிவறை கட்டி தர வேண்டும் என்றனர். மேலும் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடைபெறுவதால் அதில் காயம் அடைந்து வருவோருக்கு இங்கு முதலுதவி அளித்து கோவை,திருப்பூருக்கு அனுப்பி வைக்கின்றனர்.அங்கு சென்றடைவதற்குள் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.அவற்றை தவிர்க்க விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் அரசு மருத்துவமனை டாக்டர்களுடன் எம்.எஸ்.எம் ஆனந்தன் எம்.எல்.ஏ.,கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். அப்போது அவரிடம் தலைமை டாக்டர் ராமசாமி கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் மருத்துவமனை திருப்பூர் மாவட்டத்தில் தேசிய தர உறுதி தரநிலைகள் சான்றிதழுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தரம் மேம்படும் வகையில், மேற்கண்ட சான்றிதழ் செயல்முறைக்கு நாங்கள் தயாராகி வருகிறோம்.இது சம்பந்தமாக, பல பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்றும் மதிப்பிடப்பட்ட செலவுகள் பின் வருமாறு:- 5000 சதுர அடிக்கு ரூ.5லட்சம் மதிப்பில் பேவர்ஸ் பிளாக்குகள் அமைத்தல் பணி,ரூ.1 லட்சம் மதிப்பில் எல்.இ.டி. விளக்கு உள்ளிட்ட மின் சாதனப் பணிகள், மற்றும் நோயாளிகள் பரிசோதனை விளக்குகள் மற்றும் மின்விசிறிகள் அமைத்தல், ரூ. 1லட்சம் மதிப்பில் அலமாரிகள் மற்றும் ஸ்டீல் ரேக்குகளை வாங்குதல், ரூ.50 ஆயிரம் மதிப்பில் பிளம்பிங், கார்பென்ட்ரி மற்றும் மேசன் பணி,ரூ. 40 ஆயிரம் மதிப்பில் சமையலறை மற்றும் இரத்த வங்கிக்கான குளிர்சாதன பெட்டி, ரூ.1லட்சம் மதிப்பில் நோயாளிகளுக்கான கைத்தறி படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் மருத்துவமனை வளாகத்தின் ஓவியம் வரைதல், கம்ப்யூட்டர் ,சிபியு வாங்குதல் உள்ளிட்டவை வாங்கி தர உதவ வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    பின்னர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ.,கூறுகையில், பல்லடம் நகரம் வளர்ந்து வரும் தொழில் நகரமாகும் இதனை சுற்றியுள்ள பகுதிகளும் வெகுவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையின் மத்தியில் பல்லடம் நகரம் அமைந்துள்ளது. இந்த சாலையில் விபத்துகள் நிகழ்ந்தால் அருகாமையில் உள்ள பல்லடம் அரசு மருத்துமனைக்கு தான் கொண்டு வருகின்றனர். இங்கு காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து கோவை, திருப்பூருக்கு பரிந்துரை செய்யும் மையமாக தான் தற்போது இருந்து வருகிறது. இங்கு சி.டி. ஸ்கேன் வசதி, எலும்புமுறிவு மருத்துவர், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி இந்த மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தகுதி உயர்வு அளிக்க வேண்டும்.

    91 படுக்கை வசதி மட்டுமே உள்ளது. அதனை 100க்கு மேல் உயர்த்த வேண்டும். தற்போது உள்ள கட்டடங்கள் பழையவையாக உள்ளன. அவற்றுக்கு பதிலாக புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும். தேவையான இடங்களில் கழிப்பறை போதிய அளவில் கட்டப்பட வேண்டும். இது குறித்து தமிழக முதல்வர், மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளேன்.

    பல்லடம் நகரில் அதிகபடியான போக்குவரத்து பிரச்சனையால் வாகன ஒட்டிகள் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பல்லடம் நகரில் மேம்பாலம் அமைக்க வேண்டும். அதே போல் அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.45 கோடி மதிப்பில் போடப்பட்ட புறவழிச்சாலை திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளேன். இது குறித்து சட்டமன்ற கூட்டத்திலும் பல முறை பேசியுள்ளேன். தொடர்ந்து இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்றார். இந்த ஆய்வின் போது பல்லடம் அரசு தலைமை டாக்டர் ராமசாமி, டாக்டர் சுபா, ரமேஷ், மற்றும் மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி லோகநாதன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் சித்துராஜ், பானு பழனிசாமி, துரைக்கண்ணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் ப.நடராஜன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் கந்தசாமி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ரமேஷ், ராமு, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×