என் மலர்
தூத்துக்குடி
- ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பத்திரமாக இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
- 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
வங்கக்கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் 55 கிலோமீட்டர் முதல் 60 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும்.
மேலும் அவ்வப்போது சுழல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பத்திரமாக இருக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
- கடந்த மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக கோவில் வசந்த மண்டபத்தில் நடைபெற்றது.
- தங்கம் 1100 கிராம், வெள்ளி 29,300 கிராம், பித்தளை 80 கிலோ, செம்பு 6 கிலோ 500 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 417-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருவாய் மாதந்தோறும் எண்ணப்படுகிறது.
இதன்படி கடந்த மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக கோவில் வசந்த மண்டபத்தில் நடைபெற்றது. கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது.
இந்த பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக் குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 70 லட்சத்து 70 ஆயிரத்து 541-ம், தங்கம் 1100 கிராம், வெள்ளி 29,300 கிராம், பித்தளை 80 கிலோ, செம்பு 6 கிலோ 500 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 417-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், ஆய்வர் செந்தில்நாயகி, அறங்காவலர் குழுத்தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன் ஆகியோரும், பொதுமக்கள் பிரதிநிதிகளாக சுப்பிரமணியன், கருப்பன், மோகன் ஆகியோர் பார்வையாளர்களாகவும் பங்கேற்றனர்.
- பெரும்பாலான பஸ்கள் தற்காலிக டிரைவர்களை கொண்டு இயக்கப்பட்டு வருகிறது.
- காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பாரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
விளாத்திகுளம்:
தமிழகம் முழுவதும் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 95 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பெரும்பாலான பஸ்கள் தற்காலிக டிரைவர்களை கொண்டு இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து பேரிலோவன்பட்டி, சிந்தலக்கரை வழியாக கோவில்பட்டி செல்லும் 78ஏ அரசு பஸ்சை தற்காலிக டிரைவர் சுப்ரமணியன் இன்று ஓட்டி சென்றார். வழக்கமாக இந்த பேரிலோன்பட்டி பள்ளி மாணவர்கள் அதிகளவில் பயணம் செய்து வழக்கம்.
அதன்படி இன்று 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர். பஸ் சிங்கிலிபட்டி கிராமம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையில் இறங்கி சேற்றில் சிக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. ஆனால் பஸ்சில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முன் இருக்கை கம்பி மீது மோதியதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பாரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று சென்றனர். பஸ் விபத்துக்குள்ளானதை அறிந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
இந்த பஸ் சாலையோரத்தில் சிக்கி சேற்றில் சிக்கி ஜே.சி.பி. வாகனம் மூலம் மீட்கப்பட்டு விளாத்திகுளம் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மீண்டும் மாற்று டிரைவர் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.
- நெல்லையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் சிறுமி ரேவதி அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு கடந்த 6-ந் தேதி அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
- தங்கள் மகளின் எதிர்காலம் குறித்த கவலையில் இருந்த ரேவதியின் பெற்றோர், சொன்னதை செய்த கனிமொழியால் நெகிழ்ந்துவிட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
அந்த வகையில் கடந்த 27-ந்தேதி திருச்செந்தூர் அருகே மேலாத்தூர் சொக்கப்பழங்கரை ஊராட்சியில் கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார். அப்போது கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியைக் கண்ட கனிமொழி எம்.பி, அந்த சிறுமியின் அருகே சென்று கண் பார்வை கோளாறு குறித்து அக்கறையோடு விசாரித்தார். அதற்கு அந்த சிறுமி, தனது பெயர் ரேவதி என்றும் 7-ம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறியவர், தனக்கு கண் பார்வை பிரச்சனை இருப்பதாகவும், அதற்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார்.
உடனே கனிமொழி எம்.பி., அவ்வளவு தானே சரி செய்துவிடலாம் என நம்பிக்கை பொங்க அந்தச் சிறுமியிடம் பேசி ஊக்கமும் உற்சாகமும் அளித்தார். அதைத் தொடர்ந்து நெல்லையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் சிறுமி ரேவதி அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு கடந்த 6-ந் தேதி அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறுமி ரேவதி 7-ந்தேதி வீடு திரும்பிய நிலையில், ஏரல் தாசில்தார் கோபாலகிருஷணன் சொக்கப்பழங்கரை கிராமத்திற்கு சென்று ரேவதியிடம் நலம் விசாரித்தார். மேலும், கனிமொழி எம்.பி.யும் சிறுமி ரேவதியிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார்.
இதற்கு பதில் அளித்த அந்த சிறுமி கண் அறுவை சிகிச்சைக்கு உதவியதற்கு நன்றி கூறியதுடன், தான் வளர்ந்த பிறகு மருத்துவராக பணியாற்றுவேன் எனக் கூறினார். இதனிடையே தங்கள் மகளின் எதிர்காலம் குறித்த கவலையில் இருந்த ரேவதியின் பெற்றோர், சொன்னதை செய்த கனிமொழியால் நெகிழ்ந்துவிட்டனர்.
இதற்கிடையே பரியேறும் பெருமாள் படத்தில் 'எங்கும் புகழ்' பாடலுக்கு பாடிய ஸ்ரீ வைகுண்டம் புதுக்குடியை சேர்ந்த உருமி மேள இசைக்கலைஞர்களான முருகேசன், அவரது மருமகன் காளிதாசன் ஆகியோரது வீடு கனமழையால் சேதமாகி அங்கிருந்த நாஸ்வரம், தவில் ஆகியவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதனால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதனையறிந்த கனிமொழி எம்.பி. அவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இழப்புகளை பற்றி கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு புதிதாக இசைக்கருவிகள் வழங்கப்படும் எனவும் அவர்களிடம் உறுதி அளித்தார்.
- ஏரலிலும் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.
- கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தூத்துக்குடி:
தென் மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் தண்ணீர் பாய்ந்து ஓடியது. இன்று காலை முதலே வானம் மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் காலை 8.30 மணி முதல் சாரலாக தொடங்கிய மழை பின்னர் பலத்த மழையாக பெய்தது. இதனால் பணிக்கும், அலுவலகங்களுக்கும் புறப்பட்டு சென்றவர்கள் அவதி அடைந்தனர். ஏரலிலும் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.
உடன்குடி மற்றும் சுற்றுப்புறபகுதியான பரமன்குறிச்சி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, மாதவன்குறிச்சி, கொட்டங்காடு, செட்டியாபத்து. லட்சுமிபுரம், மருதூர்கரை, பிச்சிவிளை, வட்டன்விளை, சீர்காட்சி ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் மழை விட்டு விட்டு தொடர்ந்து பெய்தது.
இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் ஆகியோர் பயணம் செய்ய கடும் சிரமப்பட்டனர். இதனால் முக்கியமான பஜார் சாலைகள், தெருக்களில் தண்ணீர் தேங்கியது.
இதேபோல் மெஞ்ஞானபுரம், செம்மறிகுளம், வள்ளியம்மாள்புரம், நங்கைமொழி, மாநாடு மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இன்று காலை 9 மணியளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் ½ மணி நேரம் பெய்த கன மழையால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

மெஞ்ஞானபுரம் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள விஜிகுமரன்நகர் பகுதியில் தேங்கிய தண்ணீரை 3 மின் மோட்டார் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதே போல் ஷாலோம் நகரில வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இந்த தண்ணீரை மின் மோட்டார் மூலம் அகற்றும் பணியை பஞ்சாயத்து தலைவர் கிருபா ராஜபிரபு செய்து வருகிறார். கடந்த மாதம் பெய்த கனமழையால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து 25 நாட்கள் ஆகியும் சில இடங்களில் இயல்பு நிலை திரும்பாமல் சுமார் 100-க்கு மேற்பட்டோர் நிவாரன முகாம்களிலும், சிலர் தங்கள் உறவினர்கள் வீடுகளிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திடீரென பெய்த கன மழையால் குடியிருப்பு பகுதிகளில் மேலும் கூடுதலாக தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த மழை, வெள்ளத்தால் பெரும் பாதிப்பு அடைந்த நிலையில் இன்று கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.
- மத்திய குழுவினரும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்கனவே ஆய்வு செய்து வெள்ள சேதங்கள் குறித்து கணக்கெடுத்து சென்றனர்.
தூத்துக்குடி:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த மாதம் 17, 18-ந் தேதிகளில் வரலாறு காணாத மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதாலும், வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு தேங்கிய தண்ணீரும் படிப்படியாக அகற்றப்பட்டு தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.
எனினும் பல்வேறு வீடுகள் இடிந்தும், சேதம் ஆகியும், வீட்டில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் உள்ளது. இதேபோல் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் பாதித்த நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து அதிக பாதிப்பு ஏற்பட்ட பகுதி மக்களுக்கு தலா ரூ.6 ஆயிரமும், மற்ற பகுதி மக்களுக்கு தலா ஆயிரம் என நிவாரண தொகை அறிவித்து வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களுக்கு தேவையான நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றார். மேலும் மத்திய குழுவினரும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்கனவே ஆய்வு செய்து வெள்ள சேதங்கள் குறித்து கணக்கெடுத்து சென்றனர்.
இந்நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய குழு மீண்டும் வருகிறது. அந்த வகையில் மத்தியஅரசின் பேரிடர் மேலாண்மை துறை நிர்வாகி மற்றும் ஆலோசகர் கீர்த்தி பிரதீப் சிங் தலைமையில் பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் பொன்னுசாமி, விஜயக்குமார், ரங்கநாத் ஆதம், ராஜேஸ் திவாரி, தங்கமணி, பாலாஜி ஆகிய7 பேர் கொண்ட குழுவினர் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இந்த மாவட்டங்களில் ஆய்வு செய்ய வருகின்றனர்.
தொடர்ந்து அவர்கள் 14-ந் தேதி வரை 4 நாட்கள் ஆய்வு செய்கிறார்கள். இதற்காக 11-ந் தேதி மதுரை வரும் மத்திய குழுவினர் அங்கிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார்கள். அங்கு வெள்ளத்தால் சேதமான பயிர்கள், சாலைகள், வீடுகள், உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்கிறார்கள். மேலும் வெள்ள பாதிப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடனும், உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
- சில ஆண்டுகளுக்கு முன்பே அரசு பஸ் நிறுத்தப்பட்ட நிலையில் மினி பஸ் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.
- கிளவிபட்டி கிராமத்திற்கு சென்று வந்த மினிபஸ்சும் நிறுத்தப்பட்டது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது கிளவிபட்டி கிராமம். இந்த கிராமத்திற்கு காலை, மாலை என 4 முறை கோவில்பட்டியில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டது.
மேலும் மினி பஸ் ஒன்றும் இயக்கப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பே அரசு பஸ் நிறுத்தப்பட்ட நிலையில் மினி பஸ் மட்டும் இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் 17-ந்தேதி முதல் கிளவிபட்டி கிராமத்திற்கு சென்று வந்த மினிபஸ்சும் நிறுத்தப்பட்டது.
இதனால் அந்த கிராம மக்கள், தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் இன்று காலை கோவில்பட்டி-பசுவந்தனை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த மறியல் போராட்டத்தால் கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது.
- பா.ஜ.க. தங்கள் இஷ்டத்துக்கு சட்டங்களை கொண்டு வந்துள்ளது.
- போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தமிழக அரசு தீர்வு காணும் என் நம்புகிறேன்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகத்திலே செல்வம் நிறைந்த நாடு நம் நாடு, அதுவும் தமிழ்நாடு மாநிலம் என்ற நிலையை உருவாக்க உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்து முதலமைச்சர், விவசாயிகளுக்கு உதவிகள் செய்து வருகிறார்.
பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ.1000 ரொக்கப் பணமும் வழங்குகிறார். தி.மு.க. தலைமையிலான அரசு எல்லோருடைய அன்பையும், செல்வாக்கையும் பெற்றுள்ளது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்டங்கள் நிறையகேடு விளைவிக்கும். இருந்த சட்டங்களை மாற்றி பா.ஜ.க. தங்கள் இஷ்டத்துக்கு சட்டங்களை கொண்டு வந்துள்ளது.
தமிழக அரசு கொடுத்த நிவாரண தொகை குறைவு. நாங்கள் கொடுத்தது அதிகம் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதற்கு தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு சரியாக பதில் அளித்துள்ளார். நாங்கள் கொடுத்தது ஒரு ரூபாய் என்றால் அவர்கள் கொடுத்தது 29 காசு என்று பதில் கூறியுள்ளார். போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தமிழக அரசு தீர்வு காண்பர்கள் என்று நான் நம்புகிறேன். தமிழக அரசு அதற்கான முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.
- பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழா காலங்களை தவிர்த்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசை யில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ரூ.100 கட்டணம் தரிசனத்திலும், பொது தரிசனத்திலும் பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் இன்று கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.
- தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.
- மின்சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மின்சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை உள்ள ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அம்மாவட் ஆட்சியர் அறிவறுத்தியுள்ளார்.
- மகள் விமலா தேவி திருமணமாகி சென்னையில் அரசு டாக்டராக பணியாற்றி வருகிறார்.
- கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய இன்னாசிமுத்துவை தேடிவந்தனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கீழபாண்டவர்மங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இன்னாசிமுத்து (வயது 56). பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வந்தார்.
இவரது மனைவி மருதம்மாள் (54). இவர்களது மகள் விமலா தேவி திருமணமாகி சென்னையில் அரசு டாக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இன்னாசிமுத்து மற்றும் அவரது மனைவி மருதம்மாள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இன்னாசிமுத்து மனைவியை வெட்டிக்கொலை செய்தார்.
நேற்று காலை இன்னாசி முத்து வீட்டுக்கு சென்ற மருதம்மாளின் தம்பி சின்னமருது, சகோதரி கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இன்னாசிமுத்துவிடம் தட்டிக் கேட்டார்.
அப்போது அவரையும் இன்னாசி முத்து அரிவாளால் வெட்டினார். இதில் காயம் அடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய இன்னாசிமுத்துவை தேடிவந்தனர்.
இந்நிலையில், பாண்டவர்மங்கலம் அருகே மயங்கி நிலையில் இன்னாசிமுத்து கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மனைவியை கொலை செய்து விட்டு இன்னாசிமுத்துவும் விஷம் குடித்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலையில் அவர் உயிரிழந்தார்.
- தற்போது ரெயில்வே தண்டவாளம் சீரமைப்பு பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
- நெல்லை இருந்து திருச்செந்தூர் செல்ல 2 மணி நேரத்திற்கு மேல் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழையால் ஏராளமான பகுதிகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக நெல்லை-திருச்செந்தூர் ரெயில் தண்டவாளத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லி கற்கள் அரித்து தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கியது.
அந்த சமயம் திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் 800-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சிக்கிக் கொண்டது. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதற்கிடையில் சேதமடைந்த ரெயில்வே தண்டவாளங்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் டீசல் என்ஜின் மூலம் மீட்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ரெயில்வே தண்டவாளம் சீரமைப்பு பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்று மாலை நெல்லையில் இருந்து ஒரு டீசல் என்ஜின் மட்டும் திருச்செந்தூர் நோக்கி சோதனை ஓட்டம் சென்றது.
இந்த சோதனை ஓட்டத்தில் 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாகவும், ரெயில்வே தண்டவாளம் சேதமடைந்து தற்போது சீரமைக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் 20 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது.
நெல்லை-திருச்செந்தூர் ரெயில் பாதையில் இன்று வரை ரயில் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சோதனை ஓட்டம் நடந்துள்ளது. நாளை (6-ந்தேதி) முதல் பயணிகள் ரெயிலை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது சோதனை ஓட்டத்தில் ரெயில் திருச்செந்தூரில் இருந்து நெல்லை வரை வருவதற்கு 2 மணி நேரத்திற்கு மேல் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது டீசல் என்ஜின் மூலம் தான் இந்த ரெயில் இயங்குகிறது. தற்போது வரை இந்த வழித்தடத்தில் மின்சார ரெயிலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே நாளை முதல் நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணிகள் ரெயில் மட்டும் இயங்க வாய்ப்புள்ளதாகவும், ஆனால் டீசல் என்ஜின் மூலமாகவா அல்லது மின்சாரம் மூலமாகவா என்பது தற்போது வரை தெரியவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் ரெயில் தண்டவாளம் சேதமடைந்த இடங்களில் ரெயில் செல்லும்போது 20 கிலோ மீட்டர் வேகத்தில் தான் இயக்கப்படும் என்றும் தெரிகிறது.
எனவே நெல்லை இருந்து திருச்செந்தூர் செல்ல 2 மணி நேரத்திற்கு மேல் ஆகலாம் என்று கூறப்படுகிறது. மின்சார ரெயில் மூலம் செல்லும்போது 1 மணி நேரம் 10 நிமிடங்களில் ரெயில் திருச்செந்தூரை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.






