என் மலர்
திருநெல்வேலி
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
- மாணவி ஆளுநரிடம் பட்டம் பெறாமல் நேரடியாக துணைவேந்தரிடம் பட்டம் பெற்று கொண்டார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து முனைவர் பட்டம் பெற மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவி ஜீன் ஜோசப் என்ற மாணவி ஆளுநரிடம் பட்டம் பெறாமல் நேரடியாக துணைவேந்தரிடம் பட்டம் பெற்று கொண்டார்.
- 5 பேர் கொண்ட வக்கீல்கள் குழு இந்த விவகாரத்தில் உண்மை தன்மை கண்டறிவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
- பாதிக்கப்பட்ட கவின் இல்லத்திற்கு சென்ற அந்த குழுவினர், சம்பவம் தொடர்பாக கவின் பெற்றோர் மற்றும் சகோதரரிடம் கேட்டறிந்தனர்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த ஐ.டி. ஊழியரான கவின் (வயது 27) என்ற வாலிபர் கடந்த மாதம் 27-ந்தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் காதல் விவகாரத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், அவரது மகன் சுர்ஜித் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவி வரும் சூழலில் சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்களான சுரேஷ், தமிழ்வாணன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட வக்கீல்கள் குழு இந்த விவகாரத்தில் உண்மை தன்மை கண்டறிவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி நேற்று அந்த குழு நெல்லைக்கு வந்தது. தொடர்ந்து கவின் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டதுடன் இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாநகர போலீசார், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு உதவிய வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரிடம் நேரில் தகவல்களை திரட்டினர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட கவின் இல்லத்திற்கு சென்ற அந்த குழுவினர், சம்பவம் தொடர்பாக கவின் பெற்றோர் மற்றும் சகோதரரிடம் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து இன்று 2-வது நாளாக நெல்லை மாவட்ட கலெக்டர், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டி. போலீசார் உள்ளிட்டவர்களிடமும் தகவல் திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்கள், சமூக அக்கறையுடன் செயல்பட்டவர்கள் போன்ற பலரிடமும் தகவல்களை திரட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், தொடர்ந்து சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு பொதுவெளியில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் எனவும் அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை அரசுக்கும் சமர்ப்பித்து ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டம் இயற்றுவதற்கு வலியுறுத்தப்படும் என அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.
- ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதல் கட்ட விசாரணையில் பெண் விவகாரத்தில் தான் இந்த கொலை நடந்துள்ளது என்று தெரியவந்திருக்கிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சங்கநேரி பகுதியை சேர்ந்தவர் பீட்டர். இவரது மகன் பிரபுதாஸ்(வயது 27). இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று பிரபுதாஸ் தனது சக நண்பரான தமிழரசன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோலியாங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் அந்த பகுதியில் பிரபுதாஸ் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். தமிழரசன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். தகவல் அறிந்து ராதாபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்று தமிழரசனை மீட்டு நாகர்கோவில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதனிடையே நடந்தது விபத்தா? அல்லது திட்டமிட்ட கொலையா? என்பது குறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இதையடுத்து அவரை கொலை செய்த மர்ம கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று ராதாபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பெண் விவகாரத்தில் பிரபுதாஸ் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கூடங்குளம் பகுதியை சேர்ந்த லிங்சாமி (வயது22) என்பவரும், அவரது கூட்டாளிகளான அதேபகுதியை சேர்ந்த மகாராஜன்(23), வினோத்(42), திசையன்விளையை சேர்ந்த அருண்குமார் (21) ஆகிய 4 பேரும் சேர்ந்து பிரபு தாசை கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று இரவு வினோத் மற்றும் அருண்குமாரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த முக்கிய கொலையாளியான லிங்கசாமி, அவரது நண்பர் மகாராஜன் ஆகியோரை இன்று காலையில் தனிப்படையினர் மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.
முதல் கட்ட விசாரணையில் பெண் விவகாரத்தில் தான் இந்த கொலை நடந்துள்ளது என்று தெரியவந்திருக்கிறது. எனினும் 4 பேரிடமும் முழுமையான விசாரணை மேற்கொண்ட பின்னரே இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தெரியவரும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே போலீசாரின் அலட்சியத்தால் தான் இந்த கொலை நடந்துவிட்டதாகவும், அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியும் பிரபுதாஸ் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்போது பிரபுதாஸ் கொலை செய்யப்பட்டு கிடந்த அதே இடத்தில் அவர் மீது காரை மோதவிட்டு கொலை முயற்சி நடந்தது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். ஆனால் அது விபத்து அல்ல. கொலை முயற்சி என்று பிரபுவின் தரப்பினர் கூறிவந்த நிலையில் தற்போது அதே இடத்தில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
போலீசார் அப்போதே கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலை நடந்திருக்காது என்று கூறினர்.
- தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
- கூட்டணி, பிரச்சாரம் என அனைத்து அரசியல் கட்சிகளும் வேலை செய்து வருகின்றன.
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையடுத்து, கூட்டணிகள், பிரச்சாரங்கள் என அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன.
ஏற்கனவே, அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ், தே.மு.தி.க சார்பில் பிரேமலதா ஆகியோர் தங்களது சுற்றுப்பயணங்களை செய்து வருகின்றனர்.
தமிழக பா.ஜ.க. தலைவரான நயினார் நாகேந்திரன் ஆகஸ்ட் 17-ம் தேதி நெல்லையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். நேரடியாக மக்களை களத்தில் சந்தித்து பா.ஜ.க. சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை எடுத்துரைக்க உள்ளார்.
இதற்கிடையே, சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக 4777 என்ற எண் கொண்ட பிரசார வாகனத்தை நயினார் நாகேந்திரனுக்காக தயார் செய்துள்ளார்
இந்நிலையில், பிரசார வாகனத்தின் எண் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய காரின் எண் என்பதை அறிந்த நயினார் நாகேந்திரன் ஆர்வமாக அதில் பா.ஜ.க. கொடியை பொருத்தி வாகனத்தை இயக்கிப் பார்த்தார்.
- கவின் மற்றும் சுபாசினி என்ற பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
- சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). ஐ.டி. ஊழியர்.
கவின் வேறு சமூகத்தை சேர்ந்த சுபாசினி என்ற பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுபாசினியின் தம்பி சுர்ஜித், கவினை பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்தார்.
இந்த ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் கொலை நடந்த இடத்தில் இருந்து விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோரை நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது சுர்ஜித் முகத்தை மறைத்தபடி அழுதுகொண்டே சென்றார்.
கேமராக்களை பார்த்ததும் அழுத சுர்ஜித், நீதிமன்ற வளாகத்திற்குள் சென்ற பின்னர் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடந்து சென்றார்.
- கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்க கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.
- நெல்லை மாவட்டத்தில் சிறுவன் சாதி ரீதியாக தாக்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவில்:
தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய வெளியுறவு கொள்கை பலவீனம் ஆகிவிட்டது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை உலகளவில் ஒரு நாடு கூட கண்டிக்கவில்லை. அதுவே நம்முடைய பலகீனம் தானே. சபாநாயகர் தொகுதியிலேயே சட்ட ஒழுங்கு சரியில்லை என்று இன்பதுரை கூறியுள்ளார். ஆனால் அவர் கூறியதை வைத்து முடிவு எடுக்க முடியாது. சட்ட ஒழுங்கு பிரச்சனை ஒரு இடத்திலும் இல்லை.
அதே சமயம் திருப்பூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தோட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதை வைத்து சட்ட ஒழுங்கை சீர்குலைப்பது யார்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்க கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஒரு மாநில அரசுக்கு பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் அமைக்க முழு உரிமை உள்ளது. அங்கு பணியாளர்களை நியமிக்கும் உரிமையும் மாநில அரசுக்கு தான் இருக்கிறது. அப்படி இருக்க கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க அனுமதிக்காக கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அதை இவ்வளவு நாட்கள் கழித்து ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.
பல்கலைக்கழக பணியாளர் நியமனம் மத்திய அரசின் விதிப்படி இல்லை என்று கூறுகிறார்கள். இதுவரை இருந்தது. ஆனால் கலைஞர் பெயரில் அமைக்கும்போது தான் குறை இருப்பதை கண்டுபிடித்தார்களா? என்று தெரியவில்லை. கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் கொண்டு வர தனிப்பட்ட முறையில் என்ன வெறுப்பு இருக்கிறது? என்றும் தெரியவில்லை. மற்ற பல்கலைக்கழகம் அமைக்க அனுமதியை கவர்னரே தந்துள்ளார். கலைஞர் பெயரில் அமைக்க மட்டும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். அது திட்டமிட்டு என்ன நோக்கத்துக்காக செய்கிறார்கள்? என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
நெல்லை மாவட்டத்தில் சிறுவன் சாதி ரீதியாக தாக்கப்பட்டுள்ளார். சட்டப்படி யார் தவறு செய்தாலும் அரசு நடவடிக்கை எடுக்கும். எந்த குற்றத்தையும் மூடி மறைப்பது கிடையாது. துணை போவதும் கிடையாது. பள்ளியில் படிக்கும்போதோ சமூகத்தில் வரும்போதோ தனிப்பட்ட சில பேரின் விருப்பு வெறுப்போடு நடக்கும் சம்பவம். இதுதொடர்பாக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். ஆணவக் கொலை தொடர்பாக சட்டம் கொண்டு வருவதில் நல்ல முடிவு வரும்.
தமிழக அரசு தென்மாவட்டங்களுக்கு அதிக வளர்ச்சி பணிகள் செய்யவில்லை என்றும், மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியதாகவும் எல்.முருகன் கூறியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையம், துறைமுக விரிவாக்கம், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பணிகளை மத்திய அரசு தான் மேற்கொண்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அவர் எந்த காரணத்துக்காக குற்றம் சொல்கிறார் என்று தெரியவில்லை.
தமிழகம் தான் இந்தியாவிலேயே கடந்த 4 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதம் ஆகும். இந்த புள்ளி விவரத்தை மத்திய அரசு தான் தந்துள்ளது. எனவே அதை எல்.முருகன் படிக்க வேண்டும். படித்தால் நல்லது. தொழில் தொடங்க வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு நிதி வந்துள்ளது என்று மாநில அரசு கூறும்படி மத்திய அரசு கேட்டுள்ளது. ஆனால் வெளிநாட்டில் இருந்து எந்த நிதி வந்தாலும் மத்திய அரசு மூலமாக தான் வரும். அப்படி இருக்க மாநில அரசிடம் ஏன் கேட்க வேண்டும். புள்ளி விவரத்தை எடுத்து மத்திய அரசே பேசலாம். தமிழக அரசு வளர்ச்சிக்கு மத்திய அரசு எவ்வளவு இடையூறு செய்ய முடியுமோ செய்து வருகிறார்கள்.
தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் இருப்பதை தாங்க முடியாமல் இதுபோன்று சொல்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவரின் சுற்று பயணத்தால் தமிழகத்தில் எதாவது மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா? என்று அவரிடம் தான் கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பணிகள் முடிவடையாத பூத்களில் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.
- மாநாட்டில் மத்திய உள்துறை மத்திய மந்திரி அமித்ஷாவை பங்கேற்க செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளேன்.
நெல்லை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க பா.ஜ.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க. தனது கூட்டணியை வலுப்படுத்த தீவிரம் காட்டி வரும் நிலையில், அதே கருத்துடைய பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வுடன் கை கோர்த்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் பா.ஜ.க.வின் அரசியல் அடித்தளத்தை பலப்படுத்தி சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் அக்கட்சியின் பூத் கமிட்டியை வலுப்படுத்திடும் பணிகளில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. முழுவீச்சில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
இதற்காக அவர் மாவட்டம் தோறும் சென்று பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து தமிழகத்தை 7 மண்டலங்களாக பிரித்து மண்டல வாரியாக பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும் என்று நயினார் நாகேந்திரன் அறிவித்திருந்த நிலையில் முதல் மாநாடு நெல்லையில் வருகிற 17-ந்தேதி நடக்கும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி மாநாட்டுக்கான பணிகள் ஒருபுறம் சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட 5 பாராளுமன்ற தொகுதிகளிலும் சட்டமன்ற தொகுதி வாரியாக நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் செய்து பூத் கமிட்டி பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
அதன்படி நேற்று விருதுநகர் மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளில் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பணிகள் முடிவடையாத பூத்களில் விரைந்து முடிக்க அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-
எந்தவொரு கட்சியின் வெற்றிக்கும் அதன் அடித்தளமாக விளங்கும் பூத் கமிட்டிகள் வலுவாக இருப்பது அவசியம். 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் பா.ஜ.க. சார்பில் அடுத்தடுத்து மண்டல மாநாடுகள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இதில் பா.ஜ.க. முதல் மண்டல மாநாடு நெல்லையில் 17-ந்தேதி நடத்தப்படுகிறது.
இதில் நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, குமரி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதற்காக தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பூத் கமிட்டியை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். அந்த வகையில் நேற்று அருப்புக்கோட்டை, விருதுநகர், கோவில்பட்டி தொகுதிகளில் ஆய்வு செய்தேன். தொடர்ந்து நாளை முதல் மற்ற தொகுதிகளில் ஆய்வு பணியை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளேன்.
பா.ஜ.க.வில் 1 பூத்துக்கு 12 கமிட்டி பொறுப்பாளர்கள் வீதம் நெல்லை மண்டலத்தில் 9 ஆயிரம் பூத்களில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த பணிகள் 70 சதவீதம் முடிவடைந்து விட்டது. வருகிற 17-ந்தேதிக்குள் பணிகள் முழுமையாக முடிந்து எப்படியும் 1 லட்சம் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் இந்த மண்டல மாநாட்டில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் மத்திய உள்துறை மத்திய மந்திரி அமித்ஷாவை பங்கேற்க செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளேன். அது தொடர்பாக முழுமையான முடிவுகள் எடுக்கப்படவில்லை. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு குறித்தும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணத்தை நடத்தி வருகிறார்.
- அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் உடன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளார்.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணத்தை நடத்தி வருகிறார்.
நெல்லை வாகை அடி முனை பகுதியில் கொட்டும் மழையிலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவருடன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளார்.
அப்போது பேசிய இபிஎஸ்," மழையிலும் இங்கு வந்துள்ள மக்களை பார்க்கும்போது அதிமுக வெற்றி உறுதியாகிவிட்டது" என்றார்.
- பிரதமர் மோடியிடம் தான் முறையிட்ட பிறகே சிபில் ஸ்கோர் முறை ரத்துசெய்யப்பட்டது.
- அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நெல் கொள்முதல் தொகை விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
நெல்லையில் விவசாயிகள், கட்டடத் தொழிலாளர்கள், வியாபாரிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
* பிரதமர் மோடியிடம் தான் முறையிட்ட பிறகே சிபில் ஸ்கோர் முறை ரத்துசெய்யப்பட்டது.
* தற்போது ஷிப்ட் முறைப்படி விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.
* சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு, அதிக மானியம் பெற்றுக் கொடுத்தோம்.
* அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
* அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நெல் கொள்முதல் தொகை விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தல் யுக்திகள், பரப்புரை வியூகம் குறித்து பாஜக-அதிமுக கூட்டணி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
- ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரமாண்ட விருந்திற்கு நயினார் நாகேந்திரன் ஏற்பாடு.
திருநெல்வேலியில் உள்ள நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த, ஆலோசனைக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
இந்த கூட்டத்தில், தேர்தல் யுக்திகள், பரப்புரை வியூகம் குறித்து பாஜக-அதிமுக கூட்டணி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரமாண்ட விருந்திற்கு நயினார் நாகேந்திரன் ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த விருந்தில் 109 வகையான சைவ உணவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- கூட்டணியை மேம்படுத்தும் வகையில் தாமரை மற்றும் இரட்டை இலை சின்னத்தை போல் உணவு வகைகளை வடிவமைத்து பரிமாறப்படுகிறது.
நெல்லை:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் தற்போது இருந்தே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது.
இதில் பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முடிவான நிலையில் இருகட்சியினரும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
அதன்படி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற புரட்சி பயணத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். இதற்காக மாவட்டம் தோறும் அவர் சென்று பிரசாரம் செய்யும் இடங்களில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்களும் திரளாக கலந்து கொள்கின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு இரவில் எடப்பாடி பழனிசாமி நெல்லைக்கு வந்து சந்திப்பில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி உள்ளார்.
இன்று பிரசாரம் எதுவும் இல்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட விருந்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார்.
இந்த இரவு விருந்தில் மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க.வின் முன்னாள் மாநில தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, நிர்வாகிகள் சுதாகர் ரெட்டி, ஏ.பி.முருகானந்தம், மாவட்ட தலைவர்கள் முத்துபலவேசம், தமிழ்செல்வன், சித்ராங்கதன், விஸ்வை ஆனந்தன் உள்பட தென்மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எம்.ஆர். விஜயபாஸ்கர், சண்முகநாதன், இசக்கி சுப்பையா, ராஜலெட்சுமி, நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த விருந்துக்காக நயினார் நாகேந்திரன் வீட்டில் சுமார் 10 ஆயிரம் சதுரடியில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. கண்களை கவரும் வகையில் பல வண்ண விளக்குகள், இருக்கைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விருந்தில் 109 வகையான சைவ உணவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வெஜ் சூப், முருங்கைக்காய் சூப் உள்ளிட்ட 4 வகை சூப், சாலட், குழிப்பனியாரம் உள்பட 9 வகை ஸ்டாட்டர்ஸ், 3 வகை பர்பிக்யூ, 5 வகை சாட் உணவுகள், திருநெல்வேலி அல்வா, காசி அல்வா, பலாப்பழ மைசூர்பாக், பால் கொழுக்கட்டை உள்ளிட்ட 11 இனிப்பு வகைகள், 3 வகை போளி, வேக வைத்த 8 வகை உணவுகள், 4 ரொட்டி வகைகள், 8 வகை அமரிசி மற்றும் சிறுதானிய உணவுகள், 8 வகையான சைடு டிஷ், 6 வகை பபே வகைகள், 15 வகை தோசைகள், 17 வகையான ஐஸ்கிரீம், 7 வகையான இயற்கை பழவகை ஜூஸ்கள் உள்பட 109 வகையான உணவுகள் பரிமாறப்படுகின்றன.
கூட்டணியை மேம்படுத்தும் வகையில் தாமரை மற்றும் இரட்டை இலை சின்னத்தை போல் உணவு வகைகளை வடிவமைத்து பரிமாறப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க., அ.தி.மு.க. இடையே ஒற்றுமை பலமாக இருப்பதை நிரூபிக்கும் வகையிலும், 2 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே ஒரு நெருக்கத்தையும், இணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையிலும் இந்த விருந்துக்கு நயினார் ஏற்பாடு செய்துள்ளார்.
தொடர்ந்து ஒற்றுமையுடன் செயல்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு வியூகங்களை வகுப்பது குறித்து ஆலோசனையும் நடத்தப்படுகிறது.
- ராமஜெயம் கொலை வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் அதில் இதுவரை துப்பு துலக்கப்படவில்லை.
- சுமார் 3 மணி நேரமாக விசாரணை நடைபெற்ற நிலையில் அந்த குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.
நெல்லை:
தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் உடன் பிறந்த சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி தனது வீட்டிலிருந்து அதிகாலையில் நடைபயிற்சி செல்வதற்காக வெளியே சென்றார்.
அப்போது மர்மநபர்களால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறினர். இதனால் சி.பி.ஐ. வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தமிழக போலீஸ் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரியாக இருந்த ஜெயக்குமார் மாற்றப்பட்டார். இதனால் திருச்சி டி.ஐ.ஜி. வருண் குமார் மற்றும் தஞ்சாவூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோரை விசாரணை அதிகாரியாக ஐகோர்ட்டு நியமித்தது. தொடர்ந்து விசாரணை பல்வேறு கோணங்களில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் டி.ஐ.ஜி. வருண்குமார் தலைமையில் 2 டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு வந்து திடீர் விசாரணை மேற்கொண்டனர். அங்கு கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் கொலை வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் சுடலைமுத்து என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
தண்டனை கைதியான சுடலை முத்து திருச்சி ராமஜெயத்தின் கொலை நடந்த காலகட்டத்தில் தொழிற் பயிற்சிக்காக திருச்சி சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் தன்னுடன் இருந்த மற்றொரு கைதியுடன் ராமஜெயம் வழக்கு தொடர்பாக செல்போனில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் அந்த செல்போனை அப்போதே ஜெயிலராகவும் தற்போது பாளையங்கோட்டை சிறைச்சாலையின் கண்காணிப்பாளராக இருப்பவருமான செந்தாமரை கண்ணன் பறிமுதல் செய்து உடைத்து விட்ட நிலையில் இன்று டி.ஐ.ஜி. தலைமையில் போலீசார் வந்து அவரிடம் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமஜெயம் கொலை வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் அதில் இதுவரை துப்பு துலக்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள சிறை கைதிக்கு தொடர்பு இருப்பதாக விசாரணை நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 3 மணி நேரமாக விசாரணை நடைபெற்ற நிலையில் அந்த குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.
இன்று நாங்குநேரியில் அவர்கள் தங்கி உள்ள நிலையில் 2-வது நாளாக மீண்டும் விசாரணை நடத்தப்படலாம் எனவும், தேவைப்பட்டால் கைதி சுடலைமுத்து திருச்சிக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படலாம் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






