என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பா.ஜ.க. மூத்த நிர்வாகிகளுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை
    X

    பா.ஜ.க. மூத்த நிர்வாகிகளுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை

    • பா.ஜ.க.வும் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது.
    • வருகிற 11-ந்தேதி முதல் மக்கள் சந்திப்பு யாத்திரையை தொடங்குகிறார்.

    நெல்லை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தனது வீட்டில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இன்று சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை மேற்கொண்டார்.

    நயினார் நாகேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று வந்ததை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் இன்று தனது இல்லத்தில் பா.ஜ.க. அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. குறிப்பாக தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பா.ஜ.க.வும் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் நயினார் நாகேந்திரன், தமிழகம் முழுவதும் வருகிற 11-ந்தேதி முதல் மக்கள் சந்திப்பு யாத்திரையை தொடங்குகிறார். தொடக்க விழாவானது மதுரை கிழக்கு தொகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் அதனை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த யாத்திரையை தொடங்குவது குறித்தும், அதில் கூட்டணி கட்சித் தலைவர்களை பங்கேற்க செய்வது குறித்தும், சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்துதல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கில் இந்த யாத்திரையில் என்னவெல்லாம் திட்டங்களை கொண்டு வரலாம், கூட்டணியில் புதிய கட்சிகளை இழுப்பது எப்படி என்பது குறித்தும் மூத்த தலைவர்களுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே டி.டி.வி தினகரன், ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டமானது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    Next Story
    ×