என் மலர்
திருநெல்வேலி
- முதலமைச்சர் குறித்து பேசும்போது கண்ணியமாக பேச வேண்டும்.
- எல்லாருக்குமே தாய் மாமா என்றால் கடந்த 50 வருடமாக அந்த தாய் மாமா எங்கே சென்றார்.
நெல்லை தச்சநல்லூர் பகுதியில் நடைபெறும் மண்டல பூத் கமிட்டிக் கூட்டத்தில் பாஜக மாநில, தேசிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் விஜய் குறித்து முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சில கருத்துக்களை கூறியுள்ளார்.
விஜய் குறித்து அண்ணாமலை கூறியதாவது:-
விஜய்யும், நாங்களும் சித்தாந்தத்தில் நேர் எதிராக உள்ளோம். விஜய் பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறார். மற்றவர்களின் பலவீனம் குறித்து பேசிய விஜய் தன்னுடைய பலத்தை பற்றி பேசவில்லை. விஜய் தனது ரசிகர்களின் பட்டாளத்தை வாக்குகளால் மாற்ற வேண்டும் என்றால் பலமான சித்தாந்தம் வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும்.
எல்லாருக்குமே தாய் மாமா என்றால் கடந்த 50 வருடமாக அந்த தாய் மாமா எங்கே சென்றார். எத்தனை பேருக்கு சீர் செய்தார்? எத்தனை சகோதரிகளுக்கு காசு வாங்காம டிக்கெட் கொடுத்தாரு?
முதலமைச்சர் குறித்து பேசும்போது கண்ணியமாக பேச வேண்டும். 51 வயதில் பூமர் மாதிரி பேசுகிறீர்கள் என கூறினால் விஜய் மனது வருத்தப்படாதா?
என அவர் கூறினார்.
- பாஜக பூத் கமிட்டி மாநாடு அமித் ஷா தலைமையில் நெல்லையில் நடைபெற்றது.
- திமுக-வின் ஊழல் பட்டியலை அமித் ஷா சுட்டிக்காட்டினார்.
அமித் ஷா தலைமையில் பாஜக பூத் கமிட்டி மாநாடு நெல்லையில் நடைபெற்றது. மாநாட்டு மேடையில் அமித் ஷா முன்னிலையில் திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தன்னை பாஜக-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்த மாநாட்டில் பேசிய அமித் ஷா "தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல், எல்காட் ஊழல், மணல் கொள்ளை ஊழல், இலவச வேட்டி சேலை திட்டத்தில் ஊழல். 100 நாள் வேலைத் திட்டத்தில் கூட திமுக-வின் ஊழல் செய்கிறார்கள். தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமையும்" என்றார்.
- பெட்ரோல் டீசல் விலைகளை குறைப்போம் என்றீர்களே முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி, கொடுத்த வாக்குறுதி என்னாச்சி.
- மீனவ பெண்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுப்போம் என்றீர்களே முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி. அந்த வாக்குறுதி என்னாச்சி.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருக்கிறது. மக்களுக்கு விரோதமாக தி.மு.க. அரசு செயல்படுகிறது என்று கூறி அவர்களை வீழ்த்தி ஆட்சி பீடத்தில் அமர அ.தி.மு.க. முழுவீச்சில் களமிறங்கியுள்ளது. அதேபோல் அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க.வும் கடந்த முறையை விட, இந்த முறை அதிக இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.க. அதிக இடங்களில் போட்டியிடவும், அ.தி.மு.க. கூட்டணியை அதிக இடங்களில் வெற்றி அடைய செய்ய வேண்டும் என்பதற்காகவும் உள்துறை மந்திரி அமித் ஷா புதிய வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் இன்று முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் அமித் ஷா கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி, வாக்குறுதி என்னாச்சி? என திமுக கொடுத்து நிறைவேற்றாத வாக்குறுதிகளை குறித்து கேள்வி எழுப்பினார்.
நயினார் நாகேந்திரன் இது தொடர்பாக பேசியதாவது:-
தமிழுக்காக நாங்கள்தான் எல்லாம் செய்தோம் என்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். நான் கேட்கிறேன். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் என்னாச்சி. சிலிண்டருக்கு மானியமாக 100 ரூபாய் கொடுப்போம் என்றீர்களே முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி, அந்த வாக்குறுதி என்னாச்சி.
பெட்ரோல் டீசல் விலைகளை குறைப்போம் என்றீர்களே முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி, கொடுத்த வாக்குறுதி என்னாச்சி.
மீனவ பெண்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுப்போம் என்றீர்களே முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி. அந்த வாக்குறுதி என்னாச்சி.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்விக்கடன் வழங்குவோம் என்று சொன்னீர்களே முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணாச்சி, வாக்குறுதி என்னாச்சி.
தூய்மைப் பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக ஆக்குவோம் என்றீர்களே ஸ்டாலின் முதல்வர் அண்ணாச்சி, வாக்குறு என்னாச்சி.
அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை நிரப்புவோம் என்றீர்களே, ஸ்டாலின் முதல்வர் அண்ணாச்சி வாக்குறுதி என்னாச்சி.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
- தெருவில் 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி விளையாடி கொண்டிருந்தாள்.
- சிறுமியை திடீரென துரத்தி வந்த நாய், அவரது முகத்தில் கடுமையாக கடித்து குதறியது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே அயன் சிங்கம்பட்டி கிராமம் உள்ளது.
இந்த பகுதியில் உள்ள தெருவில் இன்று காலை 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு சிறுமியை திடீரென துரத்தி வந்த நாய், அவரது முகத்தில் கடுமையாக கடித்து குதறியது. இதில் சிறுமியின் நெற்றி, உதடு மற்றும் மூக்கு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், நாயை விரட்டி விட்டு, படுகாயமடைந்த சிறுமியை உடனடியாக மீட்டனர்.
சிறுமிக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
- ஆசிரியர் ஒருவர் கண்டுபிடித்து தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார்.
- தலைமை ஆசிரியர் திசையன்விளை போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் நேற்று காலை வழக்கம் போல மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். இங்கு 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தனது புத்தகப்பையில் புத்தகங்களுக்கு இடையே கத்தியை மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார். இதை ஆசிரியர் ஒருவர் கண்டுபிடித்து தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார். உடனே இதுகுறித்து தலைமை ஆசிரியர் திசையன்விளை போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.
போலீசார் அந்த பள்ளிக்கு விரைந்து வந்து 9-ம் வகுப்பு மாணவனிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும் அவனிடம் விசாரணை நடத்தினார்கள். அதில், அந்த மாணவரை அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவர் இதற்கு முன்பு கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவன் தன்னை ஏதாவது செய்துவிடுவானோ என்ற பயத்தில் இந்த மாணவர் முன்னெச்சரிக்கையாக புத்தகப் பையில் கத்தியை மறைத்து வைத்து வகுப்புக்கு கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதைக்கேட்டு ஆசிரியர்களும், சக மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மாணவரை போலீசார் எச்சரித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பள்ளிக்கு வந்த மாணவன் புத்தகப் பையில் கத்தியை மறைத்து வைத்திருந்த சம்பவம் திசையன்விளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பா.ஜ.க. தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
- பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானம் முதல் விழாமேடை வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை:
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருக்கிறது. மீண்டும் ஆட்சி அமைக்க தி.மு.க. அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
அதே நேரத்தில் மக்களுக்கு விரோதமாக தி.மு.க. அரசு செயல்படுகிறது என்று கூறி அவர்களை வீழ்த்தி ஆட்சி பீடத்தில் அமர அ.தி.மு.க. முழுவீச்சில் களமிறங்கியுள்ளது.
அதேபோல் அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க.வும் கடந்த முறையை விட, இந்த முறை அதிக இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.க. அதிக இடங்களில் போட்டியிடவும், அ.தி.மு.க. கூட்டணியை அதிக இடங்களில் வெற்றி அடைய செய்ய வேண்டும் என்பதற்காகவும் உள்துறை மந்திரி அமித்ஷா புதிய வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் இன்று நடைபெறும் முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக அமித்ஷா வருகிறார்.
அவர், கேரள மாநிலம் கொச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மதியம் 2.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து இறங்குகிறார்.
அங்கிருந்து பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு காரில் புறப்பட்டு செல்கிறார்.
அங்கு தேநீர் விருந்தில் பங்கேற்றுவிட்டு மீண்டும் கார் மூலம் சாலை மார்க்கமாக வண்ணார்பேட்டை, வடக்கு புறவழிசாலை வழியாக விழா மேடைக்கு 3.20 மணிக்கு வருகிறார். இந்த மாநாட்டில் அமித்ஷா சுமார் ஒருமணி நேரம் பேசுகிறார்.
அங்கு பா.ஜ.க. தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். பா.ஜ.க. ஆட்சியில் தமிழக மக்களுக்கு எவ்வளவு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதனால் மக்கள் அடைந்துள்ள பயன்கள் பற்றியும் விரிவாக பேச உள்ளார். மேலும், கூட்டணி கட்சியுடன் இணைந்து தேர்தலில் வெற்றி அடைவதற்கு மேற்கொள்ளப்பட உள்ள பணிகள், அதிக இடங்களில், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது எப்படி?, சட்டசபை தேர்தல் வியூகம் ஆகியவை குறித்து நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த மாநாட்டில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
மாநாடு நடைபெறும் பகுதியில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று காலை ஆய்வு செய்தார். அங்கு அமைக்கப்பட்டு வரும் பிரமாண்ட பந்தல் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
அமித்ஷா வருகையையொட்டி பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானம் முதல் விழாமேடை வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்பநாய் பிரிவு, சிறப்பு பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் படை போலீசார் என பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். ஆங்காங்கே பா.ஜ.க. கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு உள்ளன.
- மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
- உள்துறை மந்திரி அமித்ஷா வருகையால் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நெல்லை:
தமிழக சட்டசபைக்கு இன்னும் 8 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்க தி.மு.க.வும், தி.மு.க. கூட்டணியை வீழ்த்தி அரியணை ஏற அ.தி.மு.க.வும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. கட்சி இம்முறை அதிக தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற திட்டமிட்டு உள்ளது.
குறிப்பாக உள்துறை மந்திரி அமித்ஷா தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறவும், அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி 200 தொகுதி களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் வியூகம் வகுத்து வருகிறார்.
இதற்காக அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பதற்கு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே கட்சியை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்ஒரு பகுதியாகவும், சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையிலும் பா.ஜ.க. கட்சியின் பூத் கமிட்டி மண்டல மாநாடு தமிழ்நாடு முழுவதும் 7 இடங்களில் நடைபெற உள்ளது.
இதன் முதல் மாநாடு நெல்லையில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இதையொட்டி நெல்லை வண்ணார்பேட்டை சத்திரம் புதுக்குளம் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அருகே பிரமாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 5 பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய 28 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 8,595 பூத் கமிட்டிகளை சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
மாநாட்டில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன் முன்னாள் மாநில தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
மாநாட்டில் பங்கேற்பதற்காக அமித்ஷா கேரள மாநிலம் கொச்சியில் இருந்து விமானம் மூலம் நாளை மதியம் 2.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கி ருந்து ஹெலிகாப்டர் மூலம் 3.10 மணிக்கு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து 3.25 மணிக்கு மாநாட்டு மேடைக்கு காரில் செல்கிறார்.
மாநாட்டில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரையாற்றுகிறார். அப்போது, மத்திய பா.ஜ.க. அரசு தமிழக மக்களுக்கு அளித்த எண்ணற்ற மக்கள நலத்திட்டங்களையும், பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் திட்டங்களின் மூலம் தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து பணி செய்ததை ஒவ்வொருவரும் தங்களுடைய பூத்தில் உள்ள பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது குறித்து விரிவாக பேச உள்ளார்.
மேலும், ஒவ்வொரு பூத்திலும் 50 சதவீத வாக்குகளை பெறுவதற்காக தீவிரமாக பணியாற்றுவது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கியும், வருகிற சட்டமன்ற தேர்தலை பா.ஜ.க. தொண்டர்கள் எதிர்கொள்வதற்கான தெளிவான பாதையை காட்டி பேசுவார் என நிர்வாகிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதோடு, சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.
உள்துறை மந்திரி அமித்ஷா வருகையால் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அமித்ஷாவை வரவேற்று நெல்லை மாநகரில் அதிக அளவில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
- மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
- தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி நகர் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 1 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு வரும் நீரின் அளவு உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 118 கனஅடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று அணையில் 118.55 அடி நீர் இருந்த நிலையில், இன்று நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 119.75 அடியாக உள்ளது.
மற்றொரு பிரதான அணையான சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் சுமார் 15 அடி வரை உயர்ந்துள்ளது. நேற்று அந்த அணையில் நீர் இருப்பு 118.11 அடியாக இருந்தது.
தொடர் மழையால் நீர் வரத்து அதிகரித்து 123.52 அடியாக உயர்ந்தது அந்த அணையில் ஒரே நாளில் 5 அடி நீர் இருப்பு அதிகரித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நாலுமுக்கு மற்றும் ஊத்து எஸ்டேட்டுகளில் தொடர்ச்சியாக 3 நாட்கள் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி நாலுமுக்கில் 7 சென்டிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 6½ சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
மேலும் காக்காச்சியில் 5½ சென்டிமீட்டரும், மாஞ்சோலையில் 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கடந்த 3 நாட்கள் தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி நகர் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டமாக காட்சியளிப்பதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அணைகளை பொறுத்த வரை 85 அடி கொண்ட கடனா அணைக்கு வினாடிக்கு 132 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் நேற்று இன்று ½ அடி உயர்ந்து 67½ அடியை எட்டியுள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 2½ அடி உயர்ந்து 72½ அடியை எட்டியது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 61 அடியை நெருங்கி உள்ளது.
- நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
- அனைத்து பஸ்களும் நிரம்பிய நிலையிலேயே சென்றன.
நெல்லை:
நாடு முழுவதும் சுதந்திர தினம் கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து மறுநாள் (சனிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை என மொத்தம் 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது.
இதனால் சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர் திரும்பினர். தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை முடிந்த நிலையில், நேற்று பிற்பகலில் இருந்து அவர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கினார்.
இதனால் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக மாலையில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு செல்லும் அந்தியோதயா ரெயிலில் ஏறுவதற்காக பயணிகள் சுமார் 2 மணி நேரத்திற்கும் முன்பாகவே ரெயில் நிலையத்துக்கு வரத்தொடங்கினர்.
இதன் காரணமாக ரெயில்நிலையம் பரபரப்பாக காணப்பட்டதோடு முகப்பு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது. சுமார் 1 கிலோமீட்டர் தூரம் கொண்ட முதல் நடைமேடை முற்றிலுமாக பயணிகளால் நிரம்பி இருந்தது. ஆனால் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்தே அந்த ரெயிலில் இருக்கைகள் நிரம்பிவிட்ட நிலையில் நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் முற்றிலும் முன்பதிவு இல்லாத அந்த ரெயில் பெட்டிகளில் முண்டியடித்துக் கொண்டு ஏறினர்.
பச்சிளம் குழந்தைகளை வைத்திருந்த தாய்மார்களும் வேறு வழியில்லாமல் கடும் நெரிசல்களுக்கு இடையே ரெயிலில் ஏறினர். பெட்டிகளில் பயணிகள் கால் வைக்க கூட இடம் இல்லாமல் இருந்த நிலையிலும் பயணிகள் ஏறிக்கொண்டே இருந்ததால் வாக்குவாதங்களும் நிகழ்ந்தன.
இதேபோல் நெல்லை புதிய பஸ் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சென்னை திரும்ப வசதியாக கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்ட நிலையிலும், அனைத்து பஸ்களும் நிரம்பிய நிலையிலேயே சென்றன. இதனால் பஸ் நிலையம் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
- பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
- பக்தர்கள் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
திசையன்விளை:
திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் வளாகத்தில் ஆனந்த விநாயகர் கோவில் உள்ளது.
நேற்று இரவு இங்கு வழக்கம் போல் பூஜை நடந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அப்போது ஓடி வந்த எலி ஒன்று ஆனந்த விநாயகர் முன்பு உள்ள எலி வாகனத்தில் அமர்ந்தபடி சுவாமி தரிசனம் செய்தது. நீண்ட நேரமாக அமர்ந்தபடி சுவாமி தரிசனம் செய்த காட்சியை அங்கு வந்த பக்தர்கள் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
- சேர்வலாறு அணை நீர்மட்டம் 10 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
- அடவிநயினார் அணை தனது முழு கொள்ளளவை 3-வது முறையாக எட்டி நிரம்பி வழிந்து வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் மலைப்பகுதியில் தொடர்மழையால் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 116.10 அடியாக இருந்த நிலையில், இன்று 2 அடி உயர்ந்து 118.30 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 108.20 அடியாக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 115.68 அடியை எட்டியுள்ளது.
இந்த அணைகளுக்கு நேற்று வினாடிக்கு 1176 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்து இன்று காலை நிலவரப்படி 3936 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை பகுதியில் 14 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 10 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
மாநகர பகுதியில் பாளையில் 4.40 மில்லிமீட்டரும், நெல்லையில் 3.40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. சேரன்மகா தேவி சுற்றுவட்டார பகுதிகளில் 1 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள செங்கோட்டை சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அங்கு 12 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று இரவு வெளுத்து வாங்கிய கன மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. மேக்கரை பகுதியில் உள்ள அடவிநயினார் கோவில் அணை தனது முழு கொள்ளளவை 3-வது முறையாக எட்டி நிரம்பி வழிந்து வருகிறது.
தற்போது 60 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், அணை நிரம்பி வழிந்து வருவதால் 60 கனஅடி நீர் அப்படியே வெளியேறி வருவதால் அனுமன் நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றுபடுகை ஓரம் யாரும் செல்ல வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குண்டாறு அணை பல மாதங்களாக நிரம்பி வழிகிறது. இந்த 2 அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தலா 32 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 1½ அடி உயர்ந்து 68.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 61 அடியாகவும் உள்ளது.
- 15 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியிலான சில்மிஷத்தில் சசிகுமார் ஈடுபட்டுள்ளார்.
- மாணவி படிக்கும் பள்ளியில் தவறான தொடுதல் தொடர்பான வகுப்பு சமீபத்தில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 45). இவர் கடந்த 2002-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.
தற்போது பாளையங்கோட்டை ஆயுதப்படையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ள நிலையில் குடும்பத்துடன் பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாக குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சசிகுமார் பாளையங்கோட்டையில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அவர்களது குடும்பத்தினருடன் அவர் நெருங்கி பழகி வந்த நிலையில் உறவினரின் மகளான 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியிலான சில்மிஷத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவரது உறவினர் குடும்பத்தினருக்கு தகவல் எதுவும் தெரியாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் அந்த மாணவி படிக்கும் பள்ளியில் தவறான தொடுதல் தொடர்பான வகுப்பு சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அப்போதுதான் அந்த மாணவிக்கு சசிகுமார் பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்த விபரம் தெரியவந்துள்ளது. இதையடுத்து மாணவி தனது தாயாரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். ஆனாலும் அவரது தாய் போலீசில் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே அவர் படிக்கும் பள்ளியில் சக மாணவிகளிடம் தனக்கு சோர்வாக இருப்பதாக தெரிவித்த அந்த மாணவி அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். உடனடியாக சக மாணவிகளின் அறிவுறுத்தலின் பேரில் 'ஒன் ஸ்டாப்' சென்டரை தொடர்பு கொண்ட அந்த மாணவி நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். இதையடுத்து குழந்தைகள் நலன் சார்ந்த அதிகாரிகள் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து ள்ளனர்.
இதையடுத்து சிறுமியிடம் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு ஏட்டு சசி குமாரை கைது செய்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மாணவியின் தாயாருக்கும், தலைமை காவலர் சசி குமாருக்கும் நெருக்கமான பழக்கம் இருப்பதாகவும், அதன் காரணமாகவே மாணவியின் புகாரை போலீசில் தெரிவிக்க அவரது தாயார் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






