என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் தொடரும் மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் 110 அடியை எட்டியது
    X

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் தொடரும் மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் 110 அடியை எட்டியது

    • சங்கரன்கோவில், சிவகிரி சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகர பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், நேற்று தீபாவளி அன்று பகலில் மழை இல்லை. இரவில் பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்த நிலையில், இன்றும் காலை முதல் அனைத்து இடங்களிலும் சாரல்மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை புறகர் பகுதிகளான ராதாபுரம், நாங்குநேரி, களக்காடு, சேரன்மகாதேவி சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக ராதாபுரத்தில் 36 மில்லிமீட்டரும், நாங்குநேரி, சேரன்மகாதேவியில் 17 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    களக்காடு தலையணை, மணிமுத்தாறு அருவிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அங்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் தீபாவளியையொட்டி சொந்த ஊருக்கு வந்திருந்தவர்கள் அருவியை தூரத்தில் இருந்து ரசித்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    அணைகளை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழையால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 93.25 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 109.38 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 1/2 அடி உயர்ந்து 96 அடியாகவும் உள்ளது.

    52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 43 அடியை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்கள் மழை பெய்யும் நிலையில் அந்த அணை நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணை பகுதியில் இன்று காலை நிலவரப்படி 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மாநகர பகுதியில் நேற்று பெரிய அளவில் மழை இல்லை. அதேநேரம் மாலை நேரத்தில் மழை பெய்தது. ஏற்கனவே தொடர்மழையால் மாநகரின் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் சாலையில் மேடு பள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் சகதிக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் குடியிருப்புவாசிகளும் , வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, ஆய்க்குடி சுற்றுவட்டாரத்தில் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக தென்காசி சுற்றுவட்டாரத்தில் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர் மழையால் தீபாவளி பட்டாசு வெடிக்க முடியாமல் இளைஞர்களும், சிறுவர்களும் வீடுகளில் முடங்கினர்.

    இதேபோல் நகரின் மற்ற பகுதிகளான சங்கரன்கோவில், சிவகிரி சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. அதிபட்சமாக தென்காசியில் 6 மில்லிமீட்டரும், சிவகிரியில் 8 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை கடனா நதி அணை பகுதியில் சுமார் 5 சென்டிமீட்டர் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 56½ அடியை எட்டியுள்ளது. இதேபோல் ராமநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 ½ அடி உயர்ந்து 66 அடியாக உயர்ந்துள்ளது. அடவிநயினார் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 120 ½ அடியாக உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகர பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. கயத்தாறு, கடம்பூர், கழுகு மலை ஆகிய பகுதிகளில் தலா 9 மில்லிமீட்டரும், எட்டயபுரத்தில் 8½மில்லி மீட்டரும், சூரன்குடியில் 15 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    Next Story
    ×