என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை
- தென்காசி மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- தூத்துக்குடி மாவட்டத்திலும் 1 வாரத்துக்கும் மேலாக பிற்பகலில் மழை பரவலாக பெய்து வருகிறது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, சந்திப்பு, டவுன், தச்சநல்லூர், பேட்டை, பெருமாள்புரம், கே.டி.சி. நகர் பகுதிகளில் பரவலாக பெய்யும் மழையால் முக்கிய குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. பாளையில் அதிகபட்சமாக 7 மில்லிமீட்டர் மழை பெய்தது. நெல்லையில் 3.4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணை பகுதிகளை பொறுத்தவரை சேர்வலாறு அணை பகுதியில் 15 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.
புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், நேற்றும் மழை நீடித்தது. குறிப்பாக களக்காடு, சேரன்மகாதேவி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. சேரன்மகாதேவி சுற்றுவட்டாரத்தில் அதிகபட்சமாக 23 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.
அம்பையில் 9 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 5 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. புறநகர் பகுதிகளில் மழை பரவலாக பெய்தபோதிலும், மேற்கு தொடர்ச்சி மழையில் குறிப்பிடத்தக்க அளவு மழை இல்லை. இதனால் அணைகள் நீர்மட்டம் உயரவில்லை. அதேநேரம் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக 50 அடி கொண்ட வடக்கு பச்சையாறு அணைக்கு நீர் வரத்து இல்லை. இதனால் அந்த அணை நீர் இருப்பு 11 அடியாகவே இருக்கிறது. 23 அடி கொண்ட நம்பியாறு அணையில் 13.12 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இந்த அணை பகுதியில் 13 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை பகுதியில் கனமழையால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சுற்றுலா பயணிகள் அருவியை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இன்று காலை முதலே வானம் மேகமூட்ட மாக காட்சியளிக்கிறது. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி கடனா அணையில் 20 மில்லிமீட்டரும், ராமநதியில் 25 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. கருப்பாநதி மற்றும் குண்டாறு அணையில் தலா 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
85 அடி கொண்ட கடனா அணையில் 32 அடியும், 84 அடி கொண்ட ராமநதி அணையில் 46 அடியும் நீர் இருப்பு உள்ளது. மிகச்சிறிய அணையான குண்டாறு அணை மாதக்கணக்கில் நிரம்பி வழிகிறது. 132 அடி கொண்ட அடவிநயினார் அணையில் 114 அடி நீர் இருப்பு உள்ளது.
நேற்று மாலையில் தென்காசி, ஆய்க்குடி, செங்கோட்டை,சிவகிரி சுற்றுவட்டர கிராமங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 40 மில்லிமீட்டரும், ஆய்குடியில் 39 மில்லி மீட்டரும், செங்கோட்டையில் 14 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலும் 1 வாரத்துக்கும் மேலாக பிற்பகலில் மழை பரவலாக பெய்து வருகிறது. வைப்பாறு சுற்று வட்டாரத்தில் கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு 56 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. கோவில்பட்டி, மணியாச்சி, சூரன்குடி, விளாத்திகுளத்தில் கனமழையால் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது.
தூத்துக்குடி உப்பளங்களில் கனமழையால் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குஜராத் உப்புக்கு மவுசு அதிகரித்துள்ளதால், இந்த ஆண்டு தூத்துக்குடியில் இருந்து உப்பு ஏற்றுமதி குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வருத்தத்தில் இருக்கும் நிலையில், மழையால் கூடுதல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை அடைந்துள்ளனர்.






