என் மலர்
தஞ்சாவூர்
- தேமுதிக சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- கூட்டம் இல்லாத ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதலும், கடைசியுமாக இருக்கட்டும்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் தேமுதிக சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் போதிய அளவில் கூட்டம் இல்லாததால் அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுகடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டம் இல்லாத ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதலும், கடைசியுமாக இருக்கட்டும் என பிரேமலதா விஜயகாந்த் ஆத்திரமடைந்து கூறியதாக கூறப்படுகிறது.
- விஜய் யாரை மனதில் வைத்து பேசுகிறார் என்பது தெரியவில்லை.
- எங்களுடைய கட்சி வளர்ச்சியில் தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி அருகே உள்ள அண்ணா சிலைக்கு தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க. 3 கட்சிகளுக்கு தான் பூத் கமிட்டி உள்ளது. உச்ச நட்சத்திரங்களுக்கு மக்கள் கூட்டம் கூடுவது இயல்புதான். இதை நாங்கள் 1990-களில் இருந்து பார்த்து வருகிறோம். விஜயகாந்துக்கும் அதிக அளவிற்கு கூட்டம் கூடியது.
விஜய்க்கும் மக்கள் கூட்டம் கூடியது. விஜய் அந்த கூட்டத்தை முறையாக ஒழுங்குப்படுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். தி.மு.க மற்றும் பா.ஜ.க.வை விஜய் எதிர்த்து வருகிறார். அவரை அக்கட்சியினர் விமர்சனம் செய்து தான் பேசுவார்கள். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே அதிக வாக்கு சதவீதம் பெற்றவர். அவருடன் வேறு யாரையும் ஒப்பிடவே கூடாது. அவ்வாறு ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம்.
விஜய் யாரை மனதில் வைத்து பேசுகிறார் என்பது தெரியவில்லை. விஜய் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் விஜய் தான் பதில் அளிக்க வேண்டும். விஜய் குறித்து அவரிடம் கேட்காமல் மற்றவர்களிடம் கேள்வி கேட்பது தவறு. இனிமேல் கூட்டணி குறித்தும், விஜய் குறித்தும் என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் என ஏற்கனவே கூறியுள்ளேன்.
எல்லா கட்சியும் எங்களுடைய நண்பர்கள் தான் கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் எங்களுக்கு நேரம் வேண்டும். விஜயகாந்த் இல்லாமல் நாங்கள் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் எங்களுடைய கட்சி வளர்ச்சியில் தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜனவரி மாதத்துக்கு முன்பாக அனைத்து கட்சிகளும் தெளிவான முடிவை எடுக்கும்.
- முறைகேட்டை தடுக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது.
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடலூரில் ஜனவரி 9-ந் தேதி நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து மிகத்தெளிவான அறிவிப்பு வரும். அதுவரை யாருடைய ஊகங்களுக்கும், கேள்விகளுக்கும் இது தான் பதில்.
ஒரு பக்கம் கூட்டணி வலுவாக இருப்பதாகவும், இன்னொரு பக்கம் வலுவில்லை என சிலர் கூறினாலும், அது போன்ற நிலைமை கிடையாது. தேர்தலுக்கு இன்னும் 7, 8 மாதங்கள் உள்ள நிலையில், அதற்குள் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பிரிந்தவர்கள் கூடுவதும், கூடியவர்கள் பிரிவதும் நிகழலாம்.
தமிழகத்தில் இதுபோல எத்தனை ஆண்டுகள் பார்த்து வருகிறோம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை. ஜனவரி மாதத்துக்கு முன்பாக அனைத்து கட்சிகளும் தெளிவான முடிவை எடுக்கும்.
வாக்கு திருட்டு பீகாரில் மட்டும் நடைபெறவில்லை. தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடைபெறுகிறது. எனவே, இந்த முறைகேட்டை தடுக்க வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. இதற்கு நீதிபதிகள் துணையாக இருக்க வேண்டும்.
ஜனநாயக ரீதியாக நடைபெறும் தேர்தல் நியாயமானதாக, மக்களுக்கான உண்மையான தேர்தலாக இருப்பது அவசியம். வரும் தேர்தலாவது நியாயமான தேர்தலாக நடைபெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும்.
- 2022-ம் ஆண்டுக்கு பிறகு மிக நீண்ட நேரம் நிகழும் முழு சந்திர கிரக ணம் இதுவாகும்.
சூரியனுக்கும் சந்திரனுக் கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழுகிறது. இதனால் சந்திரன் மறைக் கப்படுகிறது.
இந்தியாவில் இன்று இரவு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இரவு 8.58 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும். டெலஸ்கோப் மற்றும் அல்லது பைனாகுலர்கள் ஆகியவற்றாலும் பார்த்து ரசிக்கலாம்.
பகுதி கிரகணம் இன்று இரவு 9.57 மணிக்கு ஆரம்பிக்கும். முழு கிரகணம் இரவு 11.01 மணிக்கு தொடங் கும் என்று வானியல் நிபு ணர்கள் தெரிவித்து உள்ள னர். இன்று கிரகணத்தின் போது இரவு 11.01 மணி முதல் நள்ளிரவு 12.23 மணி வரை மொத்தம் 82 நிமிடங் கள், அதாவது 1.22 மணி நேரம் நிலா முழுமையாக மறைக்கப்படும்.
பகுதி கிரகணம் இரவு 1.26 மணிக்கு முடிவடையும். சந்திர கிரகணம் இரவு 2.25 மணிக்கு நிறைவடையும். இன்று சந்திர கிரகணத்தின் போது நிலா ரத்த சிவப்பு நிறத்தில் காணப்படும்.
2022-ம் ஆண்டுக்கு பிறகு மிக நீண்ட நேரம் நிகழும் முழு சந்திர கிரக ணம் இதுவாகும். இந்நிலையில், சந்திர கிரகணத்தை ஒட்டி தஞ்சாவூர் பெரிய கோவில் நடை மாலை 4 மணியளவில் சாத்தப்பட்டது.
- சில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறுகின்றன.
- சாலையில் தடுப்பு கட்டைகள் இருப்பது போன்று ‘3 டி’ வடிவில் இந்த எச்சரிக்கை குறியீடு வரையப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் உள்ள பல்வேறு சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதிலும், குறிப்பாக பாதசாரிகள் சாலைகளை கடந்து செல்லும் போது வாகனங்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன. இதனால் சில நேரங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறுகின்றன.
இதனை தவிர்க்கும் வகையில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில், தஞ்சாவூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் செந்தில்குமார் மேற்பார்வையில் உதவி கோட்ட பொறியாளர் கீதா, உதவி பொறியாளர்கள் லட்சுமிபிரியா, வீரமுத்து ஆகியோர் தஞ்சாவூர் உட்கோட்ட பகுதிகளில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தவிர்க்க பல்வேறு குறியீடுகளை வரைந்து வருகின்றனர்.
அதன்படி, தஞ்சாவூர் மேம்பாலத்தில் மண்டைஓடு சின்னம் வரையப்பட்டது. இந்நிலையில், மாநில நெடுஞ்சாலையான நம்பர் 1 வல்லம் சாலை எலிசா நகர் பகுதியில் பாதசாரிகள் சாலையை கடக்கும் இடத்தில் விபத்தை தவிர்க்கும் வகையில் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் '3 டி' வடிவ (முப்பரிமாண) எச்சரிக்கை குறியீடு வரையப்பட்டு உள்ளது.
சாலையில் தடுப்பு கட்டைகள் இருப்பது போன்று '3 டி' வடிவில் இந்த எச்சரிக்கை குறியீடு வரையப்பட்டு உள்ளது. இந்த சாலையில் 2 இடங்களில் பரீட் சார்த்த முறையில் இக்குறியீடு வரையப்பட்டு உள்ளது. மேலும், 2 இடங்களில் மண்டை ஓடு சின்னமும் வரையப்பட்டு உள்ளது.
இந்த குறியீடு பலன்தரும் பட்சத்தில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மாநில நெடுஞ்சாலைகளில் விபத்து நடைபெறும் இடங்களில் இக்குறியீடுகளை வரைய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி பங்கேற்க இருந்தார்.
- ராமதாஸ் ஆதரவாளர் ம.க.ஸ்டாலினை கொல்ல முயற்சி நடந்துள்ளது.
பா.ம.க. ராமதாஸ் அணியின் நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீகாந்தி கும்பகோணத்தில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
கும்பகோணத்தில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி பங்கேற்க இருந்தார்.
ராமதாஸ் ஆதரவாளர் ம.க.ஸ்டாலினை கொல்ல முயற்சி நடந்ததை அடுத்து ஸ்ரீகாந்தியின் கும்பகோணம் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- ம.க.ஸ்டாலினுடன் சென்ற இருவருக்கு அரிவாள் வெட்டு என தகவல்.
- ம.க.ஸ்டாலின் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.
பாமக முக்கிய பிரமுகரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலினை கொல்ல முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றபோது வழிமறித்து ம.க.ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
மேலும், ம.க.ஸ்டாலினுடன் சென்ற இருவருக்கு அரிவாள் வெட்டு என தகவல் வெளியாகியுள்ளது.
ம.க.ஸ்டாலின் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, ராமதாஸ் அணியைச் சேர்ந்த ம.க.ஸ்டாலின் மீது சணல் குண்டுவீசி கொலை முயற்சி செய்த சம்பவத்தை தொடர்ந்து பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர்.
சாலையில் டயர்களை கொளுத்தி ராமதாஸ் ஆதரவு பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தீயை தண்ணீர் ஊற்றி அணைத்து போராட்டக்காரர்களை தடுத்தனர்.
- கட்சி சார்பு இல்லாத பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நினைக்கிறார்கள்.
- அ.தி.மு.க மீது தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் இன்று ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் நன்மதிப்பைப் பெற்றவர் செங்கோட்டையன். அவர் இன்று அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தனது எண்ணத்தை தெரிவித்துள்ளார். அனைத்து தொண்டர்களின் எண்ணத்தையே வெளிப்படுத்தி உள்ளார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் கருத்தை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.
எல்லோரும் ஒன்றிணைந்தால் மட்டுமே எம்ஜிஆர் , ஜெயலலிதா ஆட்சியை கொண்டுவர முடியும்.
ஒன்றிணைப்பு குழு என்பது குறித்து எனக்கு இன்றைக்கு தான் தெரிய வந்துள்ளது.
எங்களிடம் செங்கோட்டையன் தொடர்பில் இல்லை. அவர் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ளார்.
அவருக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது என்பது தெரிய வருகிறது. அவருடைய எண்ணம் போல் எல்லா தொண்டர்களும் விரும்புகிறார்கள். நிச்சயமாக எல்லோரும் அதை வரவேற்பார்கள்.
10 நாள் கெடு கொடுத்திருக்கார். இல்லை என்றால் இணைப்பதற்கான முயற்சியை அவர் மேற்கொள்ளவார் என்பது அர்த்தம். 10 நாள் கெடு முடிந்தவுடன் எனது கருத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்சி சார்பு இல்லாத பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நினைக்கிறார்கள். அ.தி.மு.க மீது தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள். அதை இணைப்பதற்கு தடையாக இருப்பவர்கள் மீது கோபமாகவும் இருக்கிறார்கள்.
சசிகலாவை சந்தித்து செங்கோட்டையன் பேசினாரா என்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் .
இவ்வாறு அவர் கூறினார்.
- வீரமரசன்பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெறுகிறது.
- ஆற்காடு, சித்திரக்குடி ஆகிய கிராமங்களில் நாளை மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் தஞ்சை உதவி செயற் பொறியாளர் பாலகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தஞ்சையை அடுத்த வீரமரசன்பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
எனவே பூதலூர், செல்லப்பன்பேட்டை, மருதக்குடி, புதுப்பட்டி, ஆவாரம்பட்டி, முத்துவீர கண்டியம்பட்டி, வெண்டையம்பட்டி, நந்தவனம்பட்டி, அய்யனாபுரம், இந்தளூர், சோளகம்பட்டி, ஒரத்தூர், பூதராயநல்லூர், சாமிநாதபுரம், சிவசாமிபுரம், மோசஸ்புரம், விண்ணமங்கலம், அடஞ்சூர், மாதூரான் புதுக்கோட்டை, முல்லைக்குடி, தீட்சமுத்திரம், தொண்டராயன்பட்டி, ஆற்காடு, சித்திரக்குடி ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அ.ம.மு.க. தொடங்கி 8 ஆண்டுகள் முடிந்து 9-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம்.
- பல இடங்களில் எடுக்கப்பட்ட சர்வேக்களின் அடிப்படையில் இதனை கூறுகிறேன்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் இன்று அ.ம.மு.க நிர்வாகி இல்லத் திருமணத்தை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நடத்தி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
2006 சட்டமன்றத் தேர்தலில் எப்படி தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தினாரோ அதுபோல் வரும் 2026- சட்டமன்றத் தேர்தலிலும் த.வெ.க தலைவர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என நினைக்கிறேன்.
ஏனென்றால் பல இடங்களில் எடுக்கப்பட்ட சர்வேக்களின் அடிப்படையில் நான் இதனை கூறுகிறேன். அந்த அறிக்கையின் படி விஜயின் அரசியல் பிரவேசம் பல்வேறு கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எதார்த்தமான உண்மை. இதற்காக நான் அவருடன் கூட்டணிக்கு செல்வேன் என்று எண்ணி விட வேண்டாம்.
அ.ம.மு.க. தொடங்கி 8 ஆண்டுகள் முடிந்து 9-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். பல்வேறு தேர்தல்களை சந்தித்துள்ளோம். 2024 பாராளுமன்றத் தேர்தலில் 3-வது முறையாக மீண்டும் பிரதமராக மோடி வந்தால் இந்தியா வளர்ச்சி பெறும் என்று கருதி எந்தவித நிபந்தனையும் இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சென்றோம். தற்போதும் அந்தக் கூட்டணியில்தான் உள்ளோம் என்றார்.
- தேர்தல் கூட்டணி பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்.
- வருகிற சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க. நிச்சயம் முத்திரை பதிக்கும்.
தஞ்சை தெற்கு மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று இரவு நடந்தது.
கூட்டத்தில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏழுப்பட்டி பாலு மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசினார். அவர் பேசியதாவது:-
தேர்தல் கூட்டணி பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். யாரிடமும் மண்டியிடாத இயக்கம் அ.ம.மு.க. நாம் உண்மையாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். அதனால் உறுதியான, சரியான வழியில் நாம் செல்வோம். வருகிற சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க. நிச்சயம் முத்திரை பதிக்கும். 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் நாம் யார் என்பதை தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாக உறுதியாக செயல்படுவோம் என்றார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரனிடம், ஆம்புலன்ஸ் ஓட்டுநரை எடப்பாடி பழனிசாமி மிரட்டியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டி.டி.வி.தினகரன், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கூறினார்.
- வடகிழக்கு பருவமழையை பொறுத்தே ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து இருக்கும்.
- தஞ்சை மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 641 ஏரிகளில் இதுவரை 19 ஏரிகள் 100 சதவீதம் நிறைந்துள்ளன.
தஞ்சாவூர்:
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக கடந்த ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு உபரி நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக இருந்தது. இதனால் மேட்டூர் அணை 4 முறை நிரம்பியது.
பொதுவாக மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆற்று பாசனத்தை ஏரிகளுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தான் நீர் வரத்து இருப்பது வழக்கம். குறிப்பாக வடகிழக்கு பருவமழையை பொறுத்தே ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து இருக்கும்.
ஆனால் தஞ்சை மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழையும் சீராக பெய்து வருகிறது. கடந்த மாதம் 1-ந்தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை சராசரியாக 138.4 மி.மீ. என்கிற இயல்பான அளவை விஞ்சி 177.1 மி.மீ. மழை பெய்துள்ளது. அதாவது இயல்வை விட 28 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.
இதனால் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாயில் கடந்த மாதத்தில் முழுக் கொள்ளளவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆற்று பாசனத்தை சேர்ந்த ஏரிகளுக்கு தண்ணீர் வந்தது.
தஞ்சை மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 641 ஏரிகளில் இதுவரை 19 ஏரிகள் 100 சதவீதம் நிறைந்துள்ளன. மேலும் 132 ஏரிகளில் 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரையும், 133 ஏரிகளில் 51 முதல் 75 சதவீதம் வரையும், 211 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதம் வரையும், 122 ஏரிகளில் 25 சதவீதத்துக்குள்ளும் தண்ணீர் உள்ளது. இருந்தாலும் 24 ஏரிகள் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு கிடக்கிறது.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆற்று பாசனம் சார்ந்த 737 ஏரிகளில் சுமார் 56 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. தற்போது சாகுபடிக்கு தண்ணீர் பயன்படுத்தப்படுவதால் ஏரிகளில் நீர்மட்டம் குறைகிறது. சில ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. இருந்தாலும் அடுத்து பெய்யும் மழை மற்றும் காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும் போது ஏரிகளில் நீர்மட்டம் உயரவும், வறண்டு கிடக்கும் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவும் வாய்ப்புள்ளது என்றனர்.
இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, இந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் வந்துள்ளதால் சாகுபடி பணிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. ஏரிகளில் தண்ணீர் இருப்பதால் சுற்றியுள்ள ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆழமாக இருந்த நிலையில் தற்போது உயர்ந்து 20 அடி ஆழத்துக்கு வந்து விட்டது. இதனால் இந்த ஆண்டு ஏரியை சார்ந்த வயல்களிலும் சாகுபடி பணிகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளன. என்றாலும் காவிரி நீர்வரத்தும், மழையும் சீராக இருந்தால் தான் ஏரிகளில் நீர்மட்டம் குறையாமல், சாகுபடிக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்றனர்.






