என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விவசாயிகளின் பாதுகாவலனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார்- ஏ.கே.எஸ். விஜயன்
    X

    விவசாயிகளின் பாதுகாவலனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார்- ஏ.கே.எஸ். விஜயன்

    • விவசாயிகளுக்கு எந்த நல்ல திட்டத்தையும் எடப்பாடி பழனிசாமி கொண்டு வரவில்லை.
    • விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பார்.

    நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்தாத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் இன்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளரும் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ். விஜயன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தொடர் மழையால் நெல்லின் ஈரப்பதம் அளவை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதன்படி ஆய்வு குழுவினரை மத்திய அரசு அனுப்பி வைத்து அதன் அறிக்கையை வாங்கியது. ஆனால் வழக்கம்போல் மத்திய அரசு நெல்லின் ஈரப்பதம் அளவை உயர்த்தாமல் விவசாயிகளை வஞ்சித்துள்ளது.

    கடந்த 1972ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி விவசாயிகளின் நலம் காக்க அவர்கள் உற்பத்தி செய்த நெல்களை வாங்குவதற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உருவாக்கினார். தற்போது அவரது வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். ஆனால் இது எதுவும் தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி ஏதேதோ பேசுகிறார்.

    கருணாநிதி எதிர்க்கட்சியாக இருந்தபோது அ.தி.மு.க ஆட்சியில் மின்சார கட்டணத்தை ஒரு பைசா குறைக்க வேண்டும் என கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

    போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கருணாநிதி விவசாயிகளை சந்தித்து தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகள் ஒரு பைசா கூட மின்சார கட்டணம் செலுத்த வேண்டாம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி கருணாநிதி முதலமைச்சராக ஆன உடன் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தார்.

    அதன் வழியிலே தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்துள்ளார். ஆனால் கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் எத்தனை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு எந்த நல்ல திட்டத்தையும் எடப்பாடி பழனிசாமி கொண்டு வரவில்லை.

    அ.தி.மு.க.வின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் 1.79 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் 4 ஆண்டுகளிலேயே 1.99 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

    மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக 10 ஆண்டுகளில் ரூ.1145 கோடி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் 4 ஆண்டுகளிலேயே ரூ.2042 கோடி ஊக்கத்தொகை வழங்கி சாதனை படைத்தது. இப்படி விவசாயிகளுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி பாதுகாவலனாக முதலமைச்சர் விளங்கி வருகிறார். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பார். அதற்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×