என் மலர்
தஞ்சாவூர்
- சொக்கப்பனைக்குள் பட்டாசுகள் போடப்பட்டு இருந்ததால் அதுவும் வெடித்தன.
- மேலும், அந்த சாம்பலை தங்கள் வீடுகளுக்கும் கொண்டு சென்றனர்.
தஞ்சாவூர்:
கார்த்திகை தீபத்திரு நாளை முன்னிட்டு நேற்று மாலை தஞ்சாவூர் பெரிய கோவில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக பெருவு டையார்-பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்கா ரத்தில் கோவில் நுழைவு கோபுரவாசல் அருகே சொக்கப்பனை வைத்திருக்கும் இடத்தில் எழுந்தருளினர்.
அங்கு சிறப்பு ஆராதனை காண்பிக்கப்பட்டு, அந்த தீபச்சுடரால் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. எரிகின்ற சொக்கப்பனையை அக்னிமய லிங்கமாக பக்தர்கள் வணங்கினர்.
மேலும் சொக்கப்பனைக்குள் பட்டாசுகள் போடப்பட்டு இருந்ததால், அந்த பட்டாசுகளும் வெடித்தன.
சொக்கப்பனை கொளுத்தி முடித்தபிறகு அந்த சாம்பலை பக்தர்கள் எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டனர்.
மேலும் அந்த சாம்பலை தங்கள் வீடுகளுக்கும் கொண்டு சென்றனர்.
- நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கூட்டம் நடைபெற உள்ளது.
- மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் மனு அளிக்கலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மின் வாரிய செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-
தஞ்சாவூர் நீதிமன்றசாலை மின் பொறியாளர் அலுவல கத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை 28-ந்தேதி காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடைபெற உள்ளது.
எனவே, தஞ்சாவூர் நகரிய கோட்டத்திற்கு உட்பட்ட நகர் எல்லையான தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கரந்தை, பள்ளியக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், அருளானந்த நகர், பர்மா காலனி, நிர்மலா நகர்,யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய ஹவுசிங் யூனிட்,
காந்திஜி ரோடு, மருத்து வகல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிப்பட்டி, ரஹ்மான் நகர், ரெட்டிபாளையம் சாலை, சிங்கபெருமாள் கோவில், ஜெபமாலைபுரம், வித்யா நகர், மேலவெளி பஞ்சாயத்து, தமிழ் பல்கலைகழக வளாகம் குடியிருப்பு, மாதாக்கோட்டை சாலை, புதிய பேருந்து நிலையம், திருவேங்கட நகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சார்ந்த மின் நுகர்வோர் மற்றும் பொது மக்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 7 பெண்களுக்கு கறவை மாடு வாங்க வங்கி கடன் உதவிகள் வழங்கப்பட்டது.
- அண்ணாமலைக்கு மகளிர் குழுவினர் அணிவகுத்து நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பூதலூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அடுத்த கருப்பூர் கவ்டெசி தொண்டு நிறுவனத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வினோபாஜியின் 41-ம் ஆண்டு நினைவு தினம் மற்றும் மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் உதவி வழங்கும் விழா தொண்டு நிறுவன தலைவர் மாவடியான் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு 9 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.95 லட்சத்து 40 ஆயிரம் வங்கி கடன் உதவி வழங்கினார்.
மேலும், பாரத பிரதமரின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அகரப்பேட்டையை சேர்ந்த ஒருவருக்கு ரூ.10 லட்சம் கடன் உதவி, ஏழை பெண்களுக்கு வேஷ்டி- சேலை வழங்கினார்.
அதனை தொடர்ந்து, 7 பெண்களுக்கு கறவை மாடு வாங்க வங்கி கடன் உதவிகளும் வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன செயலாளர் கருணாமூர்த்தி, பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில விவசாய பிரிவு செயலாளர் வெங்கடேசன், தமிழ்நாடு அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் ஜீவா சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினார்.
முன்னதாக கவ்டெசி தொண்டு நிறுவனத்திற்குள் வந்த பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கு மகளிர் குழுவினர் அணிவகுத்து நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- முகவரி மாற்றம் செய்ய விரும்பும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பம் அளித்தனர்.
- வாக்குச்சாவடி மையங்களை பாபநாசம் தாசில்தார் மணிகண்டன் ஆய்வு செய்தார்.
பாபநாசம்:
பாபநாசம் தாலுகாவில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில் 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் இருந்தவர்கள் பெயர் சேர்த்தனர்.
மேலும், இறந்தவ ர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. தொடாந்து, முகவரி மாற்றம் செய்ய விரும்பும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பம் அளித்தனர்.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் தேர்தல் அதிகாரிகளின் முன்னிலையில் இந்த பணிகள் நடைபெற்றது.
பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் வாக்குச்சாவடி நியமன அலுவலர் கார்த்திகேயன், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் கலியமூர்த்தி, கவிதா, ரவிச்சந்திரன் ராவ், பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன், பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாக்குச்சாவடி மையங்களை பாபநாசம் தாசில்தார் மணிகண்டன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது தேர்தல் துணை தாசில்தார் சுரேஷ், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
- சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா நெய்வேலி தென்பாதி மாளிகை புஞ்சை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது பள்ளியின் அருகே கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக சாலையில் மழை நீர் தேங்கி சாக்கடையாக மாறி துர்நாற்றம் வீசி நோய் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் இவ்வழியே நடந்து செல்ல பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியு ள்ளனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு உடனடியாக தார் சாலை அமைத்து தரும்படி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மிகவும் கெட்டுவிட்ட தமிழகத்தை மீட்டெடுக்க பா.ஜனதாவால் மட்டுமே முடியும்.
- போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சி தான்.
தஞ்சாவூர்:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழகத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் திருவையாறில் தனது பாதயாத்திரையை தொடங்கினார். பின்னர் மாலையில் தஞ்சை கொடிமரத்து மூலையில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார்.
அவருக்கு பா. ஜனதா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் அண்ணாமலையிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
இதையடுத்து அண்ணாமலை வடக்கு வீதி, மேலவீதி, தெற்கு வீதி வழியாக பாதயாத்திரை மேற்கொண்டு கீழ வீதி நிக்கல்சன் கூட்டுறவு வங்கி அருகே வந்தார். அவருடன் ஏராளமான பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பாதயாத்திரையாக வந்தனர்.
இதைத்தொடர்ந்து அண்ணாமலை பேசியதாவது:-
தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இந்த என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது 113 ஆவது தொகுதியாக தஞ்சாவூர் தொகுதியில் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. அதுவும் கார்த்திகை தீப திருநாளில் பாதயாத்திரை மேற்கொண்டது சிறப்பு வாய்ந்தது. இந்த பாதயாத்திரை ஜனவரி மாதம் சென்னையில் நிறைவடையும் போது அகில இந்திய அளவில் புரட்டி போட்டு இருக்கும்.
தமிழகத்தில் சாலை, பாலம் உள்பட ஒரு பணியும் உருப்படியாக நடைபெறவில்லை. மிக மோசமான அளவுக்கு தமிழகத்தை தி.மு.க மாற்றி வைத்துள்ளது. மிகவும் கெட்டுவிட்ட தமிழகத்தை மீட்டெடுக்க பா.ஜனதாவால் மட்டுமே முடியும்.
தமிழ் கலாச்சாரத்தை உலகெங்கும் பரப்பியவர் பிரதமர் மோடி. புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் வைத்து பெருமை சேர்த்துள்ளார். டெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் வைக்கப்பட்ட பெரிய நடராஜர் சிலை சுவாமி மலையில் இருந்து தான் சென்றது. மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பேசும் மனதின் குரல் நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை குறித்து பேசினார். அதன் பிறகு தலையாட்டி பொம்மை விற்பனை 240 சதவீதம் அதிகரித்துள்ளது. இப்படி தமிழின் புகழை உலகெங்கும் பரப்பியதில் முக்கிய பங்காற்றி வருகிறார். தமிழினத் தலைவர் பிரதமர் மோடி.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தூக்கி எறியப்பட வேண்டும். 2026 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.வை அகற்ற வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.
வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் 400-க்கும் அதிகமான மக்களவை உறுப்பினர்களுடன் மீண்டும் 3-வது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்கவுள்ளார். அதில், தஞ்சாவூர் தொகுதியிலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, மோடியின் அமைச்சரவையை அலங்கரிக்கச் செய்ய மக்கள் முன்வர வேண்டும்.
உதான் திட்டத்தின் கீழ் தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு 20 இருக்கைகள் கொண்ட விமானச் சேவை தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை பா.ஜனதா அரசுதான் கொண்டு வந்துள்ளது .
எந்த மாநிலங்களிலும் இல்லாத ஒன்று தமிழகத்தில் நடந்துள்ளது. அதாவது போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சி தான்.
கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தவரை தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் வந்து கொண்டிருந்தது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் தண்ணீர் வரவில்லை. இதனால் முப்போகம் விளையும் டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்கள் தரிசாக கிடைக்கிறது. நெல் உற்பத்தியும் கணிசமாக குறைந்துள்ளது. தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை எதையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. தஞ்சை மாவட்டத்திற்கு அளித்த தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- கார்த்திகை பெருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோவிலில் கார்த்திகை பெருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தேரோட்டம்
தினமும் இடும்ப, பூத, ஆட்டுக்கடா, யானை, காமதேனு, வாகன ங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. திருக்கார்த்திகை தினமான இன்று காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஈடுபட்டனர்.
பேரூராட்சி செயல் அலுவலர் சரவணவேல், பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், துணைத் தலைவர் சங்கர் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் நான்கு வீதிகளில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்திருந்தனர்.
- அவைகளை சேகரித்த போலீசார் பரிசோதனைக்காக தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்தனர்.
- மூலிகை பொடி கொடுத்து கொலை செய்து வீட்டில் பின்புறம் புதைத்துள்ளார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்தவர் போலி சித்த மருத்துவர் கேசவமூர்த்தி (வயது 47).
இவரிடம் அதே பகுதியை சேர்ந்த அசோக்ராஜ் (27) என்பவர் சிகிச்சைக்காக சென்றார்.
அப்போது மூலிகை மருந்து கொடுத்து அசோக்ராஜூடன், கேசவமூர்த்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார். அப்போது அசோக்ராஜ் மயங்கி விழவே அவரை கொலை செய்து வீட்டில் புதைத்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கேசவமூர்த்தியை கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து நேற்று முன்தினம் கேசவமூர்த்தி வீட்டில் பள்ளம் தோண்ட தோண்ட எலும்பு துண்டுகள் கிடைத்தன.
அவைகளை சேகரித்த போலீசார் பரிசோதனைக்கா தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில்
கூறியிருப்பதாவது:-
கைது செய்யப்பட்ட போலி சித்த மருத்துவர் கேசவமூர்த்தி ஓரினச்சேர்க்கை பழக்கம் உடையவர். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருணம் ஆகியுள்ளது. குழந்தையின்மையால் இருவரையும் பிரிந்து வாழ்ந்தார். சென்னையில் கட்டிடப்பணி அசெய்து வந்த காலத்தில் நாட்டு வைத்தியர் ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றியதில் நாட்டுவைத்தியம், மூலிகை செடிகள் பற்றி தெரிந்து கொண்டு சொந்த ஊரான சோழபுரத்திற்கு வந்து தானும் மருத்துவர் தான் என கூறி சித்த வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.
குறிப்பாக இளைஞர்களுக்கு போதை மற்றும் பாலுணர்வை தூண்டும் மருள் ஊமத்தை செடியால் தயாரித்த மூலிகைப் பொடியை கொடுத்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அசோக்ராஜீடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அசோக்ராஜ், தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்வதாக கூறியுள்ளார். எனவே இனி அவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முடியாது என கருதிய கேசவமூர்த்தி, அசோக்ராஜை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த 13-ந் தேதி இரவு அளவுக்கதிகமாக மூலிகை மருந்தை கொடுத்து மயங்கிய நிலையில் அசோக்ராஜை கொலை செய்து உடல் பாகங்களை தனிதனியே அறுத்து வீட்டின் பின்புறம் , கழிவறை உள்ளிட்ட இடங்களில் புதைத்துள்ளார். தற்போது உடல்பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டு சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு சோழபுரத்தில் காணாமல் போன முகமது அனாசுடனும், கேசவமூர்த்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அசோக்ராஜ் போலவே முகமது அனாசும், ஒரு பெண்ணை திருமணம் செய்யும் முடிவை கேசவமூர்த்தியிடம் தெரிவித்தார். இதனால் கேசவமூர்த்தி ஆத்திரம் அடைந்து முகமது அனாசுக்கு மூலிகை பொடி கொடுத்து கொலை செய்து வீட்டில் பின்புறம் புதைத்துள்ளார்.
பின்னர் சிறிது நாட்களுக்கு பின் புதைத்த இடத்தை தோண்டி எலும்புகளை சுடுகாட்டில் வீசிவிட்டு தாடை, எலும்பு, வெள்ளி செயின் இரண்டை மட்டும் எடுத்து வீட்டினுள் மறைத்து வைத்திருந்தார். இதனால் முகமது அனாஸ் மாயமான வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
மேலும் கேசவமூர்த்தியிடம் சிகிச்சை பெற்ற நபர்கள், அவருடன் தொடர்பில் இருந்த நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு விசாரணை நடத்து வருகிறது. மேலும் கேசவமூர்த்தியிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெண்ணின் இடுப்பில் துப்பட்டாவால் அந்த சிறுமி கட்டப்பட்டுள்ளது
- பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள தெக்கூர் கிராமம் கல்லணை கால்வாயில் இன்று காலை 30 வயது மதிக்கதக்க பெண் மற்றும் சிறுமியின் சடலங்கள் மிதந்து வந்தன.
இதனை பார்த்த பொதுமக்கள் இரு உடல்களையும் மீட்டனர்.
உடனடியாக தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பெண்ணின் இடுப்பில் துப்பட்டாவால் அந்த சிறுமி கட்டப்பட்டுள்ளது. இவர்கள் யார்? இருவரும் தாய், மகளா ? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எப்படி இறந்தனர் போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
இதையடுத்து அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த பெண், இடுப்பில் சிறுமியை கட்டிக்கொண்டு தற்கொலை செய்தாரா ? அல்லது யாரேனும் கொலை செய்து வீசினரா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- மாநகர் மாவட்ட பொருளாளர் டாக்டர் இரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜிடம் வழங்கினார்.
தஞ்சாவூர்:
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகா அர்ஜூன்கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் ஆணைப்படி அகில இந்திய காங்கிரஸ் சேவாதள தலைவர் லால்ஜி தேசாய் உத்தரவுப்படி தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாநில தலைவர் குங்பூ எஸ்.எக்ஸ்.விஜயன் பரிந்துரையின் பேரில் தஞ்சாவூர் மாநகர் மாவட்ட சேவாதள பொருளாளராக பாரதசிற்பி டாக்டர்.இரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சியில் நியமனம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பு கடிதத்தை சேவாதள மாநில தலைவர் குங்பூ எஸ்.எக்ஸ்.விஜயன், மாநகர் மாவட்ட பொருளாளர் டாக்டர் இரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜிடம் வழங்கினார்.
இதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- ஒவ்வொருவருக்கும் ரூ.1000 மதிப்பில் புத்தாடைகள் வாங்கி கொடுக்கப்பட்டது.
- மொத்தமாக ரூ.1.50 லட்சம் மதிப்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி யில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் .
ஊரே தீபாவளி , பொங்கல் போன்ற பண்டிகைகளை உற்சாகமாக கொண்டாடும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி தூய்மை பணியாளர்கள் தங்களது கடமையில் தவறாது பணி செய்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. 'சுத்தம் சோறு போடும்' என்ற முதுமொழிக்கு ஏற்ப தூய்மை இந்தியா எனும் வாசகத்தை முன்னிறுத்தி பல்வேறு சுகாதார திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. கிராமம், நகரம் என அனைத்தின் சுகாதாரத்திலும் தூய்மை பணியாளர்களின் பங்கு அளப்பரியது . மக்களின் சுகாதார நலனை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு பண்டிகை நாளன்று கூட தங்களது குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடி மகிழாமல் பணிகளில் துரித கவனம் செலுத்திவரும் நிகழ்வு நெகழ்ச்சியை அளிக்கிறது.இந்நிலையில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அனைவரையும் பிரபல துணிக்கடைக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு பிடித்த புத்தாடையை தேர்வு செய்ய வைத்து அதை வாங்கிக்கொடுக்கும் நிகழ்வு
தஞ்சையில் நடைபெற்றது.
தஞ்சை மாநகராட்சி 12-வது டிவிஷனை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள், அனிமேட்டர் உள்ளிட்ட 40 பணியாளர்கள் மற்றும் ஒவ்வொரு பணியாளரின் குடும்பத்தார் என சுமார் 150 நபர்களை ஜோதி அறக்கட்டளை நிர்வாகத்தினர் தனி வாகனத்தில் தஞ்சை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிரபல துணிக்கடைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு பிடித்த ஆடைகளை அவர்களே தேர்வு செய்ய வைத்து வாங்கி கொடுத்து ஆச்சர்யப்படுத்தினர். ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் மதிப்பில் புத்தாடைகள் என மொத்தம் 1.50 லட்சம் மதிப்பீட்டில் புத்தாடைகள் வழங்கப்பட்டது .
இது குறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், புத்தாடை வழங்க இருக்கிறார்கள் என்று கூறியவுடன் சாதரணமாக நினைத்தோம். ஆனால் எங்களை குடும்பம் சகிதமாக தனி வாகனத்தில் அழைத்து வந்து மிகப்பெரிய துணிக்கடையில் எங்களுக்கான ஆடைகள் மற்றும் எங்கள் குடும்ப த்தாருக்கும் தேவையான ஆடைகளை நாங்களே தேர்ந்தெடுக்கும் வகையில் ஜோதி அறக்கட்டளை நிர்வாகம் ஏற்பாடு செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.
முன்னதாக தூய்மை பணியாளர்களுக்கு பாரம்பரிய முறைப்படி வெற்றிலை, பாக்கு, சந்தானம், குங்குமம், கல்கண்டு சகிதம் பன்னீர் தெளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது . இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார், மேலாளர் ஞான சுந்தரி, மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம், தன்னார்வலர் ஆர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக்குகள் எடுத்து அப்புறப்படுத்தி தூய்மை பணி மேற்கொண்டனர்.
- பேராவூரணி தேசிய மாணவர் படை அலுவலர் சத்தியநாதன் மாணவர்களை வழிநடத்தினார்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் பொதுமக்களிடம் நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மனோரா சுற்றுலா தல கடற்கரையில் படகு நிறுத்தும் இடத்தில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் கடற்கரையில் கிடந்த நெகிழிப் பைகள், ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசப்பட்ட கப்புகள், மணலில் புதைந்து கிடக்கும் பொருட்களை கண்டுபிடித்து எடுத்து அப்புறப்படுத்தி தூய்மை பணி மேற்கொண்டனர்.
முன்னதாக காரைக்குடி 9 வது பட்டாலியன் மகேஷ் நீர்நிலைகளை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து மாணவர்களிடம் விளக்கி கூறினார். பேராவூரணி தேசிய மாணவர் படை அலுவலர் சத்தியநாதன் மாணவர்களை வழிநடத்தினார்.
நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா, துணை தலைவர் மாசிலாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






