search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு சம்பவம்: பா.ஜ.க. நிர்வாகிகள்-தி.மு.க.வினர் உள்பட 150 பேர் மீது போலீசார் வழக்கு
    X

    அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு சம்பவம்: பா.ஜ.க. நிர்வாகிகள்-தி.மு.க.வினர் உள்பட 150 பேர் மீது போலீசார் வழக்கு

    • மதுரை ரெயில் நிலையத்திற்குள் பயணிகள் போல சென்ற தி.மு.க.வினர் திடீரென்று அங்கு நின்றிருந்த செந்தூர்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் மீது ஏறி நின்று பா.ஜ.க.விற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
    • தகவலறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தி 21 பேரை கைது செய்தனர்.

    மதுரை:

    ஜம்மு-காஷ்மீர் ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் பலியானார். அவரது உடல் நேற்று தனிவிமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.

    இதையொட்டி ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை செலுத்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் ராணுவ உயர் அதிகாரிகள் திரண்டிருந்தனர்.

    விமான நிலையத்தில் ஏராளமான பா.ஜ.க.வினர் குவிந்திருந்தனர். இதைப்பார்த்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அரசு பொறுப்பில் இருப்பவர்கள் தான் முதலில் அஞ்சலி செலுத்த வேண்டும். மற்றவர்கள் ராணுவ வீரர் வீட்டுக்கு சென்று தான் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளார்.

    இதற்கு பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். வீரமரணமடைந்த ராணுவ வீரர் உடலுக்கு யார் வேண்டுமானாலும் அஞ்சலி செலுத்தலாம் என்று கூறி அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.

    பின்னர் அமைச்சர் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு காரில் புறப்பட்டார். அப்போது பா.ஜ.க.வை சேர்ந்த சிலர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன் கார் மீது செருப்பை வீசினர்.

    இதுதொடர்பாக அவனியாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். அங்குள்ள சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்து இந்த பிரச்சினைக்கு காரணமானவர்கள் குறித்து கண்டறிந்தனர். இதுசம்பந்தமாக பா.ஜ.க. மதுரை மாநகர் மாவட்ட துணைத்தலைவர் கீரைத்துறை குமார் என்ற மார்க்கெட் குமார், மாவட்ட பிரசார பிரிவு செயலாளர் பாலா, திருச்சி கோபிநாத், ஜெயகிருஷ்ணா, மற்றொரு கோபிநாத், முகமது யாகூப் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் மாவட்ட தலைவராக இருந்த டாக்டர் சரவணன், துணைத்தலைவர் மனோகரன், பா.ஜ.க மகளிர் பிரிவை சேர்ந்த தனலட்சுமி, மாலா, சரண்யா உள்பட 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்தை கண்டித்து நேற்று மாலை தி.மு.க.வினர் மதுரை பெரியார் பஸ் நிலையம் பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

    அப்போது பிரதமர் மோடி படங்களை கிழித்து கண்டன கோஷம் எழுப்பினர். மேலவெளிவீதி, ஆண்டாள்புரம் உள்ளிட்ட இடங்களிலும் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரகனூர் ரிங் ரோட்டில் தொழில் நுட்ப பிரிவு தென்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாசப்பிரபு தலைமையில் அண்ணாமலை உருவ பொம்மையை தி.மு.க.வினர் எரித்தனர். இதுதொடர்பாக 29 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதேபோல் நேற்று மாலை மதுரை ரெயில் நிலையத்திற்குள் பயணிகள் போல சென்ற தி.மு.க.வினர் திடீரென்று அங்கு நின்றிருந்த செந்தூர்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் மீது ஏறி நின்று பா.ஜ.க.விற்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தி 21 பேரை கைது செய்தனர்.

    மாவட்டம் முழுவதும் இந்த பிரச்சினை தொடர்பாக பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வை சேர்ந்த 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    Next Story
    ×