search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொந்த ஊரில் முகாமிட்டுள்ள இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்.: கோர்ட்டு தீர்ப்பு வரும்வரை அமைதி காக்க முடிவு
    X

    சொந்த ஊரில் முகாமிட்டுள்ள இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்.: கோர்ட்டு தீர்ப்பு வரும்வரை அமைதி காக்க முடிவு

    • இரு தலைவர்களும் தங்கள் ஊர்களில் முகாமிட்டிருப்பதால் சென்னையில் தலைவர்களை சந்திக்க முடியாமல் தொண்டர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
    • பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கி இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் வக்கீல்களுடன் ஆலோசனை மேற்கொள்ள வசதியாக சென்னை திரும்புகிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார்.

    ஒற்றை தலைமையை ஒத்துக்கொள்ளாத ஓ.பன்னீர்செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார். பதிலுக்கு ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியை நீக்குவதாக அறிவித்தார்.

    சட்ட ரீதியாக கட்சியையும், கட்சி சின்னத்தையும் கைப்பற்றியே தீருவது என்று கங்கணம் கட்டி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம்.

    இதற்கிடையில் பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்க கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் இருக்கும் போதே வேறு நீதிபதியை கொண்டு விசாரிக்க வேண்டும் என்று மனு போட்டதால் கோர்ட்டின் விமர்சனத்துக்குள்ளானார்.

    சென்னையில் கட்சி அலுவலகம் இல்லாததால் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனிக்கு சென்றுவிட்டார். பெரிய குளம் அருகே உள்ள கைலாசம்பட்டியில் பண்ணை வீட்டில் தங்கி இருக்கிறார். அரசியல் ரீதியான முக்கிய முடிவுகளை அவர் இந்த பண்ணை வீட்டில் இருந்துதான் எடுப்பார்.

    இப்போதும் பண்ணை வீட்டில் இருந்தபடியே பார்க்க வரும் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டு வருகிறார்.

    அப்போது தொண்டர்கள் பலர் சசிகலாவோடு இணைந்தால் தான் எடப்பாடியை வீழ்த்த முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.

    எடப்பாடி பழனிசாமியும் சேலத்தில் உள்ள தனது வீட்டில் தங்கி இருக்கிறார். சொந்த ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தன்னை சந்திக்க வரும் நிர்வாகிகளுடன் சந்தித்து பேசுகிறார். நேற்று இரவு பழனியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அதன்பிறகு பழனியில் தங்கிய எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு சென்றார்.

    காலை 7.15 மணி அளவில் அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் கோவிலுக்கு சென்றார். அங்கு மூலவருக்கு நடந்த கால சந்தி மற்றும் சிறு கால சந்தி பூஜைகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    இருவருமே கோர்ட்டு தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள். அதுவரை அமைதியாக இருக்கும்படி நிர்வாகிகளுக்கும் கட்டளையிட்டுள்ளார்கள்.

    இரு தலைவர்களும் தங்கள் ஊர்களில் முகாமிட்டிருப்பதால் சென்னையில் தலைவர்களை சந்திக்க முடியாமல் தொண்டர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை திரும்ப திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கி இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் வக்கீல்களுடன் ஆலோசனை மேற்கொள்ள வசதியாக சென்னை திரும்புகிறார்.

    மேலும் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாத 17 மாவட்டங்களுக்கும் புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    Next Story
    ×