search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பி.எஸ்-சின் முட்டுக்கட்டைகளை உடைக்க எடப்பாடி பழனிசாமி தீவிரம்- விரிவான பதில் மனு
    X

    ஓ.பி.எஸ்-சின் முட்டுக்கட்டைகளை உடைக்க எடப்பாடி பழனிசாமி தீவிரம்- விரிவான பதில் மனு

    • பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழில் தலைமை கழக நிர்வாகிகள் என்று மொத்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    • இதனால் அதில் யாரும் கையெழுத்திட வேண்டும் என்கிற அவசியம் ஏற்படவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று பிற்பகலில் நடைபெற்றது.

    அப்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் காரசாரமான வாதங்களை முன் வைத்தனர்.

    ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் பதவி காலம் 5 ஆண்டு காலம் என்றும், இடையிலேயே அவரது பதவி காலாவதியாகி விட்டதாக கூறி விட்டு பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முயற்சிப்பது கட்சியின் விதிகளுக்கு முரணானது என்றும் வாதிடப்பட்டது.

    அதே நேரத்தில் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக உறுப்பினர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பே முறைப்படி அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், தலைமை கழக நிர்வாகிகள் என்ற பெயரில் பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது செல்லாது என்றும் வாதிடப்பட்டது.

    இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள் கட்சியின் விதிகளை மாற்றுவதற்கு பொதுக்குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், இதன் அடிப்படையிலேயே பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    பொதுக்குழு கூட்டத்தில் இடைக்காலமாகவே பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் பின்னர் தேர்தல் மூலமே பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்றும் எடுத்து கூறப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி சில கேள்விகளை எழுப்பினார். இதற்கு எடப்பாடி பழனிசாமி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி விரிவாக பதில் மனு தயாரித்துள்ளார். இன்று பிற்பகலில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆதரவு வக்கீல்கள் கூறியதாவது:-

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? என்று நீதிபதி எழுப்பி இருக்கும் கேள்விக்கு உரிய பதில் அளிக்கப்படும். கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில்தான் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஒப்புதல் அளிப்பதாக இருந்தது. ஆனால் அன்று 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு விட்டதாலும், 2 பதவிகளும் தாமாகவே காலாவதி ஆகி விட்டன. இதனை நாங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.

    இன்று நடைபெறும் விசாரணையின் போது இந்த வாதத்தை எடுத்து வைப்போம்.

    அடுத்ததாக பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி கட்சியை வழி நடத்த தலைமை பதவியில் யாரும் இல்லாத நேரத்தில் தலைமை கழக நிர்வாகிகள் இணைந்து கட்சி தொடர்பான முடிவுகளை எடுக்கலாம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே பொதுக்குழு கூட்டத்துக்கான அழைப்பிதழ்கள் தலைமை கழக நிர்வாகிகள் பெயரில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    பொதுக்குழு கூட்டம் தொடர்பாக எத்தனை நாட்களுக்கு முன்பு அழைப்பிதழ் அனுப்ப வேண்டும் என்கிற கேள்விக்கும் இன்று உரிய பதில் அளிக்கப்படும். ஜூலை 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கான அறிவிப்பு கடந்த மாதம் (ஜூன்) 23-ந்தேதியே வெளியிடப்பட்டு விட்டது. இதன் மூலம் 18 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் உடனடியாக அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழில் தலைமை கழக நிர்வாகிகள் என்று மொத்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அதில் யாரும் கையெழுத்திட வேண்டும் என்கிற அவசியம் ஏற்படவில்லை. இது போன்று கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி ஆதரவு வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சட்ட நடவடிக்கைகள் மூலம் போடும் இதுபோன்ற முட்டுக்கட்டைகளை உடைத்தெறிய எடப்பாடி பழனிசாமி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து இந்த வியூகத்தை வகுத்துள்ளார்.

    பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கூறி இருக்கும் நிலையில் ஐகோர்ட்டும் தங்களது விளக்கத்தை ஏற்றுக்கொண்டு அது போன்ற உத்தரவையே வழங்கும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

    Next Story
    ×