search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில கல்லூரி வளாகத்தில் கலைஞர் பெயரில் மாபெரும் அரங்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
    X

    மாநில கல்லூரி வளாகத்தில் கலைஞர் பெயரில் மாபெரும் அரங்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    • பட்டம் பெற்ற பெண்கள், தங்களது தகுதிக்கேற்ற வேலைக்குச் செல்ல வேண்டும்.
    • படிக்கின்ற காலத்தில் பல்வேறு தனித்திறமைகளைப் பெற்றிருக்கும் பெண்கள், 100-க்கு 100 மதிப்பெண் வாங்கிய பெண்கள், திருமணம் ஆனதும் தங்களது பணிகளை விட்டு விடுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான எம்.காம்., படிப்புக்கும், தமிழ்நாடு அரசு இப்போது அனுமதி வழங்கி இருக்கிறது.

    நான் பெருமையோடு சொல்கிறேன், இந்தியாவில் இப்படி ஒரு வாய்ப்பு எந்த மாநிலத்திலும் கிடையாது. மாற்றுத்திறனாளிகளின் கல்விக்கு உதவுவதன் மூலமாக, மாநிலக் கல்லூரி மனித நேயக் கல்லூரியாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இந்த சிறப்புக்குரிய மாநிலக் கல்லூரியின் மேம்பாட்டுக்கான ஒரு சில அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன்.

    2000 பேர் அமரக்கூடிய வகையில், நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பெயரால் மாபெரும் அரங்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் கட்டித் தரப்படும்.

    இங்கே சட்டமன்ற உறுப்பினர் தம்பி உதயநிதி பேசுகின்றபோது கூட, ஒன்றைச் சுட்டிக்காட்டினார். அதே போல பாராளுமன்ற உறுப்பினரும் காரில் வரும்போது என்னிடத்தில் எடுத்துச் சொன்னார். ஆக, இந்த கோரிக்கை வைத்ததோடு மட்டும் நீங்கள் விட்டுவிடக் கூடாது, உங்களுக்கு என்று தொகுதி மேம்பாட்டு நிதி இருக்கிறது. எனவே நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர் தம்பி தயாநிதிமாறனையும், சட்டமன்ற உறுப்பினர் தம்பி உதயநிதியையும் நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களால் இயன்ற அளவு அந்த தொகுதி மேம்பாட்டு நிதியை அதற்கு நீங்கள் வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவரின் சார்பில் நான் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

    300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் இங்கே படிக்கிறார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து அவர்கள் இங்கே வந்து, தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கென்று விடுதி கிடையாது. அவர்களுக்கான விடுதி, மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே அமைத்துத் தரப்படும்.

    பட்டம் பெற்ற பெண்கள், தங்களது தகுதிக்கேற்ற வேலைக்குச் செல்ல வேண்டும். படிக்கின்ற காலத்தில் பல்வேறு தனித்திறமைகளைப் பெற்றிருக்கும் பெண்கள், 100-க்கு 100 மதிப்பெண் வாங்கிய பெண்கள், திருமணம் ஆனதும் தங்களது பணிகளை விட்டு விடுகிறார்கள். கலை, இலக்கியம், நாடகம், நாட்டியம், விளையாட்டு போன்றவற்றில் இருக்கக்கூடிய விருப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்கள்.

    அப்படி இல்லாமல் தங்களது விருப்பங்களை, அறிவாற்றலை வாழ்நாள் முழுக்கப் பயன்படுத்தக்கூடிய சூழலை தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

    இன்றைக்கு உள்ளாட்சி அமைப்புகளில் ஏராளமான பெண்கள் பல்வேறு பொறுப்புகளில் அமர்ந்திருக்கிறார்கள்.

    50 விழுக்காடுதான் இடஒதுக்கீடு என்று சொன்னாலும், நான் மகிழ்ச்சியோடு சொல்கிறேன், இன்றைக்கு 56 விழுக்காடு பெண்கள் அந்தப் பொறுப்புகளை அடைந்திருக்கிறார்கள்.

    இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    Next Story
    ×