search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    42 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் கலைஞர் நினைவு மாரத்தான் ஓட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்குகிறார்
    X

    42 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் கலைஞர் நினைவு மாரத்தான் ஓட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்குகிறார்

    • 21.1 கிலோ மீட்டர் தூர மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு காலை 4.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இதற்கு பரிசுத்தொகை ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
    • 10 கிலோ மீட்டர் தூர ஓட்டத்தை காலை 5 மணிக்கு அமைச்சர் கே.என்.நேருவும், 5 கிலோ மீட்டர் ஓட்டத்தை காலை 7.15 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வும் தொடங்கி வைக்கிறார்கள்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் நினைவு தினத்தையொட்டி மாரத்தான் ஓட்ட போட்டிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார்.

    தொடர்ந்து 3-வது ஆண்டாக நடைபெறும் இந்த போட்டிக்கான பெயர் பதிவு கடந்த மாதம் நடைபெற்றது. மொத்தம் 41 ஆயிரத்து 858 பேர் பதிவு செய்துள்ளார்கள். இவர்களில் 31 ஆயிரத்து 295 பேர் ஆண்கள், 10 ஆயிரத்து 563 பேர் பெண்கள் ஆவார்கள்.

    ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி, நியூசிலாந்து, செசல்ஸ், சிங்கப்பூர், தென்கொரியா, இங்கிலாந்து உள்பட 9 வெளிநாடுகளை சேர்ந்த 86 பேரும் இந்த போட்டியில் கலந்து கொண்டு ஓடுகிறார்கள்.

    நாளை மறுநாள் (7-ந் தேதி) அதிகாலை 4 மணிக்கு பெசன்ட்நகர் ஆல்காட் பள்ளி முன்பிருந்து 42.2 கிலோ மீட்டர் தூர போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியை விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார். இதில் வெற்றி பெறுபவருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

    21.1 கிலோ மீட்டர் தூர மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு காலை 4.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இதற்கும் பரிசுத்தொகை ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

    10 கிலோ மீட்டர் தூர ஓட்டத்தை காலை 5 மணிக்கு அமைச்சர் கே.என்.நேருவும், 5 கிலோ மீட்டர் ஓட்டத்தை காலை 7.15 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வும் தொடங்கி வைக்கிறார்கள்.

    இந்த போட்டியில் பங்கேற்று ஓடும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு சீருடை பனியன், கழுத்துப்பட்டைகள் வழங்குவது நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தொடங்கியது. இதற்காக தனித்தனி கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

    காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை இந்த கவுண்டர்கள் திறந்து இருக்கும். பெயர் பதிவு செய்துள்ளவர்கள் பனியன் மற்றும் கழுத்து பட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலையில் பனியன்கள் வழங்கி தொடங்கி வைத்தார். திருவிழா கூட்டம் போல் வீரர்கள் திரண்டு இருப்பதால் உற்சாகப்படுத்த காலை முதல் மாலை வரை கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இந்த போட்டி தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    பெசன்ட்நகரில் இருந்து மெரினா கண்ணகி சிலை அருகே திரும்பி மீண்டும் பெசன்ட்நகர் நோக்கி ஓடுவார்கள். வழிநெடுக வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் 10 இடங்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் சில நிகழ்ச்சிகள் இதுவரை நகரை பார்த்திராத கலை குழுவினர் நடத்துகிறார்கள்.

    திருவண்ணாமலை பெரிய மேளம், காரமடை துடும்பாட்டம், திருப்பத்தூர் பம்பை, ராமநாதபுரம் ஜிம்பலா மேளம், சேலம் முரசு மேளம், அலங்காநல்லூர் வேலா ஆசான் பறையாட்டம், நெல்லை உறுமி மேளம் மற்றும் நையாண்டி மேளம் இவை நடைபெறும்.

    அனைவருக்கும் பிஸ்கெட் பாக்கெட், தண்ணீர் பாட்டில் வழங்கப்படும். வழிநெடுக களைப்பு போக்க தர்பூசணி, சாத்துக்குடி ஜூஸ் வழங்கப்படும். 200 டாக்டர்கள் பிசியோதெரப்பிஸ்டுகள், நர்சுகள், 15 ஆம்புலன்சுகள் வழி நெடுக அவசர உதவிக்காக நிறுத்தப்பட்டிருக்கும்.

    போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, 20 கல்லூரிகளை சேர்ந்த சுமார் 15 ஆயிரம் மாணவர்களும் பங்கேற்கிறார்கள். ராணுவ மற்றும் கடற்படை வீரர்களும் ஓடுகிறார்கள்.

    காலை 8 மணிக்கு பரிசளிப்பு விழா பெசன்ட் நகரில் நடக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்குகிறார். இந்த போட்டி ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறது. இதற்கான சான்றிதழையும் முதல்-அமைச்சரிடம் வழங்குகிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சருடன் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டு தூதர்களும் பங்கேற்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×