search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    6-வது நாளாக நீடிக்கும் ஒற்றை தலைமை விவகாரம்- எடப்பாடி வீட்டில் குவிந்த அ.தி.மு.க. அனைத்து அணி தலைவர்கள்
    X

    6-வது நாளாக நீடிக்கும் ஒற்றை தலைமை விவகாரம்- எடப்பாடி வீட்டில் குவிந்த அ.தி.மு.க. அனைத்து அணி தலைவர்கள்

    • கடந்த 5 நாட்களாக நடந்து வரும் சர்ச்சை இன்று 6-வது நாளாக நீடித்தது.
    • எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே இன்று மதியம் வரை சமரசம் ஏற்படவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அ.தி.மு.க.வின் வேகம் குறைந்துவிட்டது என்று பல்வேறு தரப்பினராலும் கூறப்பட்டு வருகிறது.

    அ.தி.மு.க.வில் உள்ள இரட்டை தலைமை முறை தான் இதற்கு காரணம் என்பது மக்கள் மனதில் பொதுவான எண்ணமாக உள்ளது. முக்கிய பிரச்சினைகளில் முடிவுகள் எடுக்க தாமதம் ஏற்படுவதால் இரட்டை தலைமையை மாற்றிவிட்டு ஒரே தலைமையின் கீழ் அ.தி.மு.க.வை கொண்டுவர வேண்டும் என்பது பெரும்பாலான தொண்டர்களின் விருப்பமாக உள்ளது.

    தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஒற்றை தலைமையை வருகிற 23-ந்தேதி நடக்கும் பொதுக்குழுவில் தீர்மானமாக கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் தீவிரமாக உள்ளனர். ஆனால் ஒற்றை தலைமை வேண்டாம் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி வருகிறார்.

    கடந்த 5 நாட்களாக நடந்து வரும் சர்ச்சை இன்று 6-வது நாளாக நீடித்தது. எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே இன்று மதியம் வரை சமரசம் ஏற்படவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    6-வது நாளாக இன்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சென்னையில் உள்ள தங்களது வீட்டில் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்கள். இன்று காலையிலேயே எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு தம்பி துரை, சி.பாஸ்கர், மோகன் ஆகிய 3 தலைவர்களும் வந்துள்ளனர். அவர்கள் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.

    அதன்பிறகு அங்கிருந்து தம்பிதுரை மட்டும் புறப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு சென்றார். அங்கு ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். நீண்டநேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.

    நேற்று முன்தினமும் ஓ.பன்னீர்செல்வத்துடன் தம்பிதுரை சந்தித்து பேசி இருந்தார். இன்று 2-வது நாளாக அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் என்ன முடிவு எட்டப்பட்டது? என்பது வெளியிடப்படவில்லை.

    இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு அ.தி.மு.க.வின் அனைத்து அணிகளின் தலைவர்கள் சாரை சாரையாக வந்தனர். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தளவாய் சுந்தரமும் வந்திருந்தனர்.

    மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜய குமார், மாணவர் அணி மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் ஆ.பழனி மற்றும் மாவட்ட மாணவர் அணி செயலாளர்ர்கள், நிர்வாகிகள் ஏராளமான பேர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்று ஆதரவு தெரிவித்தனர்.

    இதேபோல் எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் என்.ஆர்.சிவபதி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் டாக்டர் சுனில் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்று ஆதரவு தெரிவித்தனர்.

    இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வேடசந்தூர் பரமசிவம் தலைமையிலும் கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.

    தேனி மாவட்ட பொறுப்பாளர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தேனி நகர செயலாளர் கிருஷ்ண குமார், பொருளாளர் சோலை ராஜா, முன்னாள் நகர செயலாளர் ராமர், கம்பம் ஒன்றிய செயலாளர் இளைய நம்பி உள்பட தேனி மாவட்ட நிர்வாகிகள் திரண்டு வந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    அனைத்து அணி தலைவர்களும் நிர்வாகிகளும் இன்று எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு திரண்டு வந்ததால் அடையார் கிரீன்வேஸ் சாலை பகுதி திருவிழா கோலாகலமாக காணப்பட்டது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் செல்வாக்கை உறுதி படுத்தும் வகையில் இன்று அவரது ஆதரவாளர்கள் திரண்டது குறிப்பிடத்தக்கது.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று காலை நீண்ட நேரம் பேசினார். பிறகு அவர் காரில் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

    11.15 மணியளவில் அவர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். நேற்று இரவும் ஓ.பன்னீர் செல்வத்துடன் செங்கோட்டையன் பேசியது குறிப்பிடத்தக்கது.

    ஓ.பன்னீர்செல்வத்தை எப்படியாவது சமரசம் செய்துவிட வேண்டும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இதற்காக இன்று காலை செங்கோட்டையன், தம்பிதுரையை தொடர்ந்து மேலும் சிலர் ஓ.பி.எஸ். வீட்டுகு சென்றனர். ஆனால் மதியம் வரை சுமூக முடிவு எட்டப்படவில்லை.

    ஓ.பன்னீர்செல்வமும் இன்று காலை முதல் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அவரை வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன். அரியலூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.

    எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அடுத்தடுத்து ஆலோசனையை தீவிரப்படுத்துவதால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அவர்களது ஆதரவாளர்கள் சென்னைக்கு வரத் தொடங்கி உள்ளனர்.

    Next Story
    ×