என் மலர்tooltip icon

    சிவகங்கை

    பாஜக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. எப்போது வேண்டுமானாலும் விலகலாம். அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இணைய வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் பாஸ்கரன் பேசியுள்ளார்.

    சிவகங்கை:

    எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வாள் மேல்நடந்த அம்மன் கோவில் அருகே நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டம் எப்போதும் பின் தங்கிய மாவட்டம், இந்த ஆட்சியில் மாவட்டத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் முதல்வர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

    குடிமராமத்து பணிகள் மூலம் இளையான்குடி நகர் ஒன்றிய பகுதிகளில் தண்ணீர் தேவைகளை நிறைவேற்றி தந்துள்ளார்.

    இஸ்லாமியர்கள் என்னிடம் குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மனு அளித்தனர். இஸ்லாமிய சமுதாய மக்கள் நடந்து முடிந்த எந்த தேர்தலிலும் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்கவில்லை.

    இருந்தாலும் அ.தி.மு.க. அரசு உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், வசதிகளையும் திட்டங்களையும் இன்று வரை செய்து வருகிறது.

    பாஜக

    பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. எப்போது வேண்டுமானாலும் விலகலாம். அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இணைய வாய்ப்பு உள்ளது. அப்படி இணைந்தால் இஸ்லாமிய மக்களாகிய நீங்கள் தி.மு.க.வுக்கு வாக்களிப்பீர்களா? அல்லது அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பீர்களா? இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு அ.தி.மு.க. என்றும் உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காரைக்குடியில் பள்ளி மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி கோவிலில் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி பாப்பா ஊருணி நாச்சுழியேந்தல் பகுதியில் பழங்குடி இன மக்களாக உள்ள தொட்டிய நாயக்கர் இனத்தவர்கள் சுமார் 500 குடியிருப்பு வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பள்ளிக்குழந்தைகள் 200-க்கும் மேற்பட்டவர்கள் காரைக்குடி எல்.எப்.ஆர்.சி. பள்ளி, எஸ்.எம்.எஸ்.வி. மேல் நிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, மகரிஷி மெட்ரிக் பள்ளி, மீனாட்சி பெண்கள் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீண்ட காலமாக சாதி சான்றிதழ் வழங்கவில்லையாம்.

    இதையடுத்து இவர்களுக்கு வழங்க உள்ள அரசின் சலுகைகள் ஏதும் கிடைக்காமல் தவிப்பதாக கூறி பள்ளிகளுக்கு செல்லாமல் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பள்ளி வகுப்புகளை புறக்கணித்து விட்டு அங்குள்ள மாரியம்மன் கோவிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்குடி தெற்கு போலீசார் அங்கு வந்து அந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் வருவாய்த்துறை சார்பில் காரைக்குடி தாசில்தார் பாலாஜி அங்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- எங்களது பூர்விகம் ஆந்திரா மாநிலம். நாங்கள் இங்கு வந்து சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. எங்கள் பகுதியில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு இதுவரை சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை.

    இதுகுறித்து நாங்கள் பல்வேறு கட்டங்களாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துவிட்டோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் இதுகுறித்து எங்கள் பகுதி மக்கள் ஏற்கனவே சிவகங்கை கலெக்டர் அலுவலகம் சென்று மாவட்ட கலெக்டரிடம் எங்கள் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனுவும் கொடுத்தோம். ஆனால் இதுவரை எவ்வித பதிலும் இல்லை. இதையடுத்து தற்போது எங்கள் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் இல்லாததால் பழங்குடி மக்களுக்கு அரசு வழங்கும் எந்தவித சலுகைகளையும் பெற முடியவில்லை.

    தற்போது பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய சாதி சான்றிதழை வழங்க வேண்டும் என்று கூறி இங்குள்ள இந்த மாரியம்மன் கோவில் வளாகத்தில் தர்ணா போராட்டத்தை தொடங்கி உள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து எங்களுக்கு உடனடியாக சாதி சான்றிதழை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    மானாமதுரை அருகே கஞ்சா பதுக்கிய வாலிபர்கள் 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மானாமதுரை:

    மானாமதுரை பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த சில தினங்களாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்தநிலையில் மானாமதுரை அருகே கிருஷ்ணராஜபுரம் பகுதியில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10 வாலிபர்கள் இருந்தனர். சோதனையில் ஒரு கிலோ கஞ்சா, அரிவாள், கத்தி உள்ளிட்டவைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த சிவா(வயது20), முத்துசரவணன்(19), பாலமுருகன்(21), வாணிஜெயராம்(24), திருப்பதி(23), அஜித் என்ற சேட்(19), ஹரி(19), மதுரையைச் சேர்ந்த விக்னேஷ்(27), ராஜன்(22), தியாகராஜன்(27) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கிருஷ்ணரா ஜபுரம் அருகே இவர்கள் காரில் கஞ்சாவுடன் வந்த போது சிக்கினர். இதில் கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த 7 பேரும், மதுரையை சேர்ந்த 3 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து பணம், கஞ்சா, கார், கத்தி, அரிவாள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    பரமக்குடி பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி விற்பனை செய்வதாக விசாரணையில் தெரிவித்தனர். மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை செய்து வருகிறோம் என்றனர்.

    தலைவர் தேர்தலில் யாருக்கு கவுன்சிலர்கள் வாக்களித்தனர் என்பதை அறிவித்ததால் கல்லல் யூனியன் தலைவர் தேர்தல் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று யூனியன் கவுன்சிலர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    சிவகங்கை:

    கலெக்டர் ஜெயகாந்தனை கல்லல் யூனியன் கவுன்சிலர்கள் பிரேமா, உஷாராணி, ராஜமலர், சங்கீதா மற்றும் கோமள வள்ளி ஆகியோர் சந்தித்து தனித்தனியாக கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:-

    கல்லல் யூனியன் தலைவரை தேர்வு செய்வதற்காக மறைமுக தேர்தல் கடந்த 11-ந் தேதி கல்லல் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் கல்லல் ஒன்றியத்தில் தேர்வு பெற்ற 16 கவுன்சிலர்கள் கலந்து கொண்டு மறைமுகமாக தங்களது வாக்கை அளித்தனர்.

    மேலும் அதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு பதிவான வாக்குகளை எண்ணும் போது எந்த வேட்பாளருக்கு எந்த கவுன்சிலர் வாக்களித்தார் என்று அனைவரின் முன்னிலையிலும் அவர்கள் அறிவித்தனர். அவர் இவ்வாறு அறிவித்தது சட்ட விரோதமான செயலாகும். அப்போது நாங்கள் இது குறித்து எங்களது எதிர்ப்பை தெரிவித்தோம். ஆனால் எங்கள் எதிர்ப்பை அவர்கள் பொருட்படுத்தாமல் கட்டாயமாக தீர்மான புத்தகத்தில் கையொப்பம் பெற்றனர். எனவே விதிகளை மீறி நடத்தப்பட்ட இந்த தேர்தலை செல்லாது என்ற அறிவித்துவிட்டு ஜனநாயக முறைப்படி மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர்.
    கவுன்சிலர்கள் தங்கியிருந்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தேவகோட்டை:

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி யூனியன் தேர்தலில் 19 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் தி.மு.க.வைச் சேர்ந்த 7 பேர் தே.மு.தி.க. கவுன்சிலர் மற்றும் 2 சுயேட்சை கவுன்சிலர்கள் என 10 கவுன்சிலர்கள், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள புதுக்குறிச்சி கிராமத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவின் மாவட்ட அமைப்பாளரான ராமகிருஷ்ணன் வீட்டில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். நேற்று காலை 7 மணிக்கு அந்த வீட்டுக்கு 50 பேர் கும்பல் வந்தது.

    அந்த கும்பல் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த 4 கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது. மேலும் பெட்ரோல் குண்டுகளையும் வீசியது.

    இதனால் அங்கு பதட்டம் உருவானது. கவுன்சிலர்களை தேடித்தான் கும்பல் வந்திருப்பதும் தெரியவந்தது. இதற்கிடையே கிராம மக்களும், ராம கிருஷ்ணனின் உறவினர்களும் அங்கு திரண்டு வந்தனர்.

    அவர்களில் விஜய் (வயது 24) என்பவரை 50 பேர் கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியது. பலத்த காயமடைந்த விஜய், மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    சம்பவம் குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கமுதி யூனியன் 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தமிழ் செல்வியின் கணவரும், முன்னாள் கிராம நிர்வாக அலுவலருமான போஸ் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், கமுதி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் காளி முத்து, அவரது மனைவி பாண்டியம்மாள் உள்பட 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    தேவகோட்டை உதவி சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்ல துரை மற்றும் போலீசார் குற்றவாளிகளை தேடிச் சென்றனர்.

    செல்போன் சிக்னல் மூலம், கமுதியில் தனியார் விடுதியில் பதுங்கியிருந்த 3 பேரை கைது செய்தனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    1.கணேசன் (61), அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர், காடமங்கலம் 2. கருமலையான் (46), ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர், பெருநாழி. 3 கணேசன் (40), டிரைவர் திம்மநாதபுரம்.

    கைதான 3 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது வருகிறது.
    சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் தேவி, பிரியதர்ஷினி ஆகியோர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின்போது தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் சிறிது நேரத்தில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தேர்தல் முடிவை எதிர்த்து தேவி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பிரியதர்ஷினி தலைவராக பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    தேவியின் மனு மீது நீதிபதிகள் புகழேந்தி, சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. முடிவில் சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி பதவி ஏற்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெற இருந்தது. தலைவர் பதவி ஏற்புக்கு கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளதால் துணைத் தலைவர் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று 6 கவுன்சிலர்கள் கலெக்டர் ஜெயகாந்தனை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்ட கலெக்டர் ஜெயகாந்தன், சங்கராபுரம் ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலை தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.
    சிவகங்கை மாவட்டத்தில் 1¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 19-ந் தேதி வழங்கப்படுகிறது. முகாம்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள் மற்றும் ஊட்டச் சத்து மையங்களில் நடை பெற உள்ளது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 1,33,131 குழந்தைகளுக்கு 19.1.2020 அன்று 1,192 நிரந்தர மையங்களிலும், (அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்நல மையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள்) 61 நடமாடும் மையங்களிலும், 17 பஸ் நிலையங்களிலும் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாம் மூலம் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.

    இதற்கு முன்னேற்பாடாக போலியோ சொட்டு மருந்தின் குளிர்பதன நிலையை பாதுகாக்க தடையில்லா மின்சாரம் வழங்கவும், மருந்து பெட்டிகளை சொட்டு மருந்து வழங்கும் மையங்களுக்கு கொண்டு செல்ல அனைத்துத்துறை சார்ந்த வாகனங்களை ஒதுக்கி தரவும், சொட்டு மருந்து மையத்திற்கு தேவையான இடவசதி செய்து தரவும் துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

    முகாம்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள் மற்றும் ஊட்டச் சத்து மையங்களில் நடை பெற உள்ளது.

    முகாம்களில் பொது சுகாதாரத்துறை, சமூகநலத் துறை, ஊட்டச்சத்துத்துறை, வருவாய்துறை, கல்வித் துறை மற்றும் பிற துறைகளை சார்ந்த 5,500 பேர் பணியாற்ற உள்ளனர்.

    எனவே, பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கனவே கொடுத்திருந்தாலும் மீண்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ நோயை முற்றிலும் அகற்ற உதவ வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    குரூப்-4 தேர்வில் முதலிடம் பெற்ற சிவகங்கை நபரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க டி.என்.பி.எஸ்.சி. உத்தரவிட்டுள்ளது.
    சிவகங்கை:

    தமிழக அரசின் அரசு பணியாளர் தேர்வுக்கான (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் நவம்பர் மாதம் வெளியானது.

    இதில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், கீழக்கரை ஆகிய பகுதிகளில் தேர்வு எழுதிய 3,214 பேர் தேர்ச்சி பெற்றனர். 2 மையங்களில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மேலும் முதல் 100 இடங்களில் 35 இடங்களை ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் பிடித்ததால் போட்டித்தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. உரிய விசாரணை நடத்தி வருகிறது. ராமேசுவரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர் சிவகங்கை அருகே உள்ள பெரிய கண்ணனூரைச் சேர்ந்த திருவராஜூ. இவர் 288.5 மதிப்பெண்கள் பெற்று குரூப்-4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு மையங்கள் இருந்தும் இவர் ராமேசுவரத்தில் தேர்வு எழுதியது ஏன்? என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்தது. இதற்காக வருகிற 13-ந் தேதி சென்னை வரும்படி திருவராஜூவுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

    தேர்வு மையங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த சந்தேகத்தில் டி.என்.பி.எஸ்.சி. விசாரணையை தொடங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவராஜூ

    டி.என்.பி.எஸ்.சி.யின் உத்தரவு குறித்து திருவராஜூ கூறியதாவது:-

    நான் சொந்த ஊரில் பள்ளி படிப்பை முடித்து விட்டு சிவகங்கை அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் முடித்துள்ளேன்.

    தற்போது ஆடு மேய்த்து வரும் நான் போட்டி தேர்வில் கலந்துகொண்டு போட்டி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியோடு படித்து வந்தேன்.

    இதுவரை 7 முறை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதியுள்ளேன். எனது விடாமுயற்சியால் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளேன்.

    ராமேசுவரம் பகுதியில் ஆடுகளை மேய்த்து வந்ததால் ராமேசுவரத்தில் கடந்த ஆண்டு தேர்வு எழுதினேன். என்னிடம் விசாரணை நடத்த வருகிற 13-ந் தேதி சென்னை வரும்படி டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    அதிகாரிகளின் விசாரணையில் நேரில் ஆஜராகி எனது விளக்கத்தை அளிப்பேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.


    ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க பகுதி வாரியாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க பகுதி வாரியாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் 2 அடி நீள கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ஆயிரம் ரூபாயும் அரசால் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

    இதனை தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் இந்த திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 29-ந்தேதி தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து மாவட்டத்தில் அமைச்சா் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் கடந்த 5-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

    இதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற 12-ந்தேதி வரை பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது. இதில் வாங்க தவறியவர்களுக்கும், விடுப்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு 13-ந்தேதி வழங்கப்படும். மேலும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அந்தந்த ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பகுதி வாரியாக வழங்கப்படும். அதற்கான விவரப்பட்டியல் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் அறிவிக்கப்படும்.

    அதன்படி, குடும்ப அட்டைதாரா்கள் தங்களுக்குரிய நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுச் செல்லலாம். 

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    சிவகங்கை அருகே வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை, ரூ.35 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த அண்ணாமலை நகரில் வசித்து வருபவர் தங்கராஜ் (வயது51). இவர் வீட்டின் அருகில் பலசரக்கு கடை வைத்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவர்கள் சென்னையில் வசிக்கின்றனர். இதில் ஒரு மகன் போலீசாக உள்ளார். 

    இந்த நிலையில் புத்தாண்டு தினத்தையொட்டி தங்கராஜ் மனைவியுடன் சென்னை சென்று விட்டு நேற்று காலை ஊருக்கு திரும்பினார். அப்போது அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் ஆகியவை திருட்டுபோனது தெரியவந்தது. இதுகுறித்து தங்கராஜ் உடனே சிவகங்கை நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மோகன், குற்றப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பெரிய கருப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு ெசன்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    காரைக்குடியில் முகமூடி அணிந்து வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் நகை மற்றும் பொருட்களை பறித்து சென்றனர்.

    காரைக்குடி:

    காரைக்குடி முத்துநகரைச் சேர்ந்தவர் ஜான்கருணாநிதி. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயராணி (வயது 43). இவர் தனது மகனுடன் வசித்து வருகிறார்.

    நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று விட்டார். மதிய நேரத்தில் ஜெயராணி வீட்டு கதவை திறந்து வைத்து விட்டு சமையல் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது முகமூடி அணிந்த 2 மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து ஜெயராணி கழுத்தில் கத்தியை வைத்து நகை-பணத்தை தருமாறு மிரட்டினர். இதனை தொடர்ந்து அவர் அணிந்திருந்த தாலி செயின் உள்பட 9 பவுன் நகை மற்றும் ஒரு செல்போன், லேப்-டாப் ஆகியவற்றை திருடிக்கொண்டு அந்த நபர்கள் தப்பினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சங்கராபுரம் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு உறுப்பினர்கள் பதவி ஏற்க வந்த நிலையில் தலைவர் பதவி ஏற்க வெற்றி சான்றிதழ் பெற்ற 2 பேரும் வரலாம் என்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர் மாங்குடியின் மனைவி தேவி மற்றும் ஐயப்பன் என்பவரது மனைவி பிரியதர்ஷினி போட்டியிட்டனர்.

    இதில் முதலில் தேவி வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன் பிறகு மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றதாகவும், இதில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. அவருக்கும் வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒரே பஞ்சாயத்தில் 2 பேருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டில் தேவி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணை நடத்திய ஐகோர்ட்டு பிரியதர்ஷினி தலைவர் பதவி ஏற்க இடைக்கால தடை விதித்து விசாரணையை வருகிற 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும் பிரியதர்ஷினி மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் தேவி வீட்டிற்கு சென்றனர். வீடு பூட்டப்பட்டு இருந்ததால் வீட்டு சுவற்றில் அவரது வெற்றி ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பாணையை ஒட்டிச் சென்றனர்.

    ஐகோர்ட்டில் வழக்கு விசாரணையில் இருக்கும்போது இதுபோன்ற நடைமுறைகள் தேவையற்றது என தேவி தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று உள்ளாட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

    சங்கராபுரம் பஞ்சாயத்து அலுவலகத்திற்கும் உறுப்பினர்கள் பதவி ஏற்க வந்தனர். இந்த நிலையில் தலைவர் பதவி ஏற்க வெற்றி சான்றிதழ் பெற்ற 2 பேரும் வரலாம்? என்பதால் அங்கு பதட்டம் காணப்பட்டது.

    இதனை தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு அருண் தலைமையில் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.




    ×