என் மலர்tooltip icon

    சிவகங்கை

    முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்பி ஆகியோருக்கு டுவிட்டரில் கொலை மிரட்டல் விடுத்ததாக காரைக்குடி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

    அதன் அடிப்படையில் ராமநாதன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தலைமை ஆசிரியர் வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையன் கண்காணிப்பு கேமிரா உதவியால் சிக்கினான்.

    காரைக்குடி:

    காரைக்குடி ஆனந்தா நகர் பகுதியில் வசிப்பவர் அமல்ராஜ் கென்னடி, இவர் சாக்கோட்டை அருகே ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளனர்.

    இவரது வீட்டைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளன. இதன் பதிவை செல்போனில் பார்க்கும்படி இணைந்து உள்ளார். சம்பவத்தன்று பள்ளியின் ஆண்டு விழாவுக்கு அமல் ராஜ் கென்னடி குடும்பத்தினருடன் சென்றார்.

    அங்கிருந்த படியே தனது செல்போன் மூலம் வீட்டில் உள்ள கேமிரா பதிவுகளை அமல்ராஜ் கென்னடி பார்வையிட்டார். அப்போது ஒரு கேமிரா திருப்பி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர், மற்ற கேமிராக்கள் பதிவையும் பார்வையிட்டார். அதில் முகமூடி கொள்ளையன் வீட்டுக்குள் புகுந்திருப்பது தெரியவந்தது.

    அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அமல்ராஜ் கென்னடி, காரைக்குடியில் உள்ள சக ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தார்.

    அவர்கள் விரைந்து சென்று அமல்ராஜ் கென்னடி வீட்டுக்குள் புகுந்து முகமூடி கொள்ளையனை மடக்கி பிடித்தனர். அவனுக்கு தர்ம அடி கொடுத்து காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், முகமூடி கொள்ளையன் நாகர்கோவிலை சேர்ந்த ராபின் (வயது 35) என்பது தெரியவந்தது. இவன் வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டியுள்ளான் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தேவி பதவியேற்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
    புதுடெல்லி:

    சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தேவி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டு மறுநாள் காலை வேட்பாளர் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் தேவி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஊராட்சி மன்ற தலைவராக பிரியதர்ஷினி பொறுப்பு ஏற்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

    மேலும் முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தேவி மாங்குடியின் வெற்றியே செல்லும் என தீர்ப்பு கூறினர்.

    இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். பிரியதர்ஷினியும் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தேவி பதவி ஏற்க இடைக்கால தடை விதித்தனர்.
    சிவகங்கை மருதுபாண்டியர்நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.99 லட்சம் மதிப்பில் கூட்டரங்கம் கட்டும் பணிக்கான பூமி பூஜையை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மருதுபாண்டியர்நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி துறையின் மூலம் ரூ.99 லட்சம் மதிப்பில் கூட்டரங்க கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையிலும், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலையிலும் நடைபெற்றது. அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு கூட்டரங்க கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர், பள்ளிக்கல்வி துறை மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி வரை மாணவர்கள் எளிதாக நவீன தொழில்நுட்பங்களை பயன் படுத்தி கல்வி பயில அனைத்து அரசு பள்ளிகளிலும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதுடன், அதற்கான உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

    தற்போது சிவகங்கையில் பள்ளிக்கல்வி துறையின் மூலம் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் புதிய கூட்டரங்க கட்டிடம் கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. கட்டிடப்பணி 3 மாத காலத்திற்குள் முடிவடையும். இந்த கூட்டரங்கில் அனைத்து வகையான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கணினி வசதிகள் அமைக்கப்படவுள்ளதால், மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் பயிற்சி வழங்கிடவும், ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் மற்றும் பயிற்சி தொடர்பான கூட்டங்கள் நடத்தவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சகத்துறைத் தலைவர் சசிக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    பாலியல் தொந்தரவு செய்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிவகங்கை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சிவகங்கை:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலை அடுத்த வெள்ளாள வயல் கிராமத்தை சேர்ந்தவர் பச்சைமுத்து என்ற ராஜா (வயது 32). கூலி தொழிலாளியான இவர் கடந்த 2013-ம் ஆண்டு சிவகங்கையை அடுத்த அரசனேரி கீழமேடு கிராமத்திற்கு கூலிவேலைக்கு வந்தார். அப்போது அவர் அந்த கிராமத்தில் வசித்த 13 வயது சிறுமி ஒருவரின் செல்போன் எண்ணை தெரிந்து கொண்டார்.

    அந்த சிறுமி சிவகங்கையில் உள்ள ஒருதனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். பின்னர் சொந்த ஊருக்கு சென்ற பச்சைமுத்து தொடர்ந்து செல்போன் மூலம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த அந்த சிறுமி 17.12.2013 அன்று வீட்டில் மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி பச்சைமுத்துவை கைது செய்தனர்.

    அவர் மீது சிவகங்கையில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி செம்மல் குற்றம் சாட்டப்பட்ட பச்சைமுத்து என்ற ராஜாவிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
    தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் நேற்று திடீரென ஆய்வு செய்தனர். ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். அப்போது நோயாளிகள், ஆஸ்பத்திரியில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாக எம்.பி.யிடம் கூறினர். அதனை தொடர்ந்து வெளி நோயாளிகள் பிரிவை பார்வையிட்டனர். மேலும் பிரசவ வார்டு, ஆஸ்பத்திரி கட்டிடங்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

    தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    மிகவும் பழமையாக உள்ள இந்த ஆஸ்பத்திரி கட்டிடத்தை மராமத்து செய்ய தமிழக அரசிடம் வலியுறுத்தப்படும். மேலும் இங்குள்ள நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் காரைக்குடியில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது சிவகங்கை மாவட்ட துணைத்தலைவர் பாப்பாங்கோட்டை பூமிநாதன், முன்னாள் நகர்மன்ற தலைவர்கள் வேலுச்சாமி, ஜான்சிராணி, நகர தலைவர் லோகநாதன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மீராஉசேன், ஐகோர்ட்டு வக்கீல் சஞ்சய், சிறுநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன், வள்ளாளமோகன், ரவி ஆகியோர் உடனிருந்தனர்.
    காரைக்குடி அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்களிடையே பீதி எழுந்துள்ளது.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பள்ளத்தூரில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் சாலையின் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது.

    இந்த வனப்பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் அருகே சிறுத்தை நடமாட் டம் உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    இது குறித்து காரைக்குடி வனவர் திருப்பதியிடம் கேட்டபோது, பள்ளத்தூரில் இருந்து கொத்தமங்கலம் செல்லும் சாலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் எங்களிடம் கூறினர்.

    அதைத்தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டம் அந்தப்பகுதியில் உள்ளதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இதுவரை சிறுத்தையின் காலடித்தடம் எதுவும் அங்கு பதிவாகி இருப்பது தெரியவில்லை. தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

    நடிகர் ரஜினிகாந்த் பாஜகவின் ஆதரவாளர் என்பது வெளிப்படையாக தெரிகிறது என்று கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார்.
    மானாமதுரை:

    குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

    அரசியல் கட்சிகள் சுயலாபத்திற்காக தூண்டிவிடுகிறார்கள். குறிப்பாக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கும்போது தீர ஆராய்ந்து இறங்குங்கள்.

    பிரிவினையின்போது செல்லாமல் இதுதான் எங்கள் ஜென்மபூமி என இங்கேயே வாழும் இஸ்லாமியர்களை எப்படி வெளியே அனுப்புவார்கள்? அதுபோல் ஏதாவது நடந்தால் அவர்களுக்காக முதல் ஆளாக நானே வந்து நிற்பேன்.
    ரஜினி
    குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் தேவையற்ற பீதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார். 

    இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து மானாமதுரையில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ரஜினி அவரது வெளிப்பாட்டை கூறியது நல்லது. ரஜினி பாஜகவின் ஆதரவாளர் என்பது வெளிப்படையாக தெரிகிறது. ரஜினிக்கு தனிக்கட்சி தேவையில்லை. அவர் பாஜகவில் இணைவது தான் நல்லது.  பாஜகவின் பொம்மலாட்டத்துக்கு ரஜினி செவிசாய்க்கிறார். தமிழகம், தமிழக மக்களுக்கு விரோதமான கட்சி பாஜக.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தேவகோட்டையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயமானதால் தந்தை தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தேவகோட்டை:

    தேவகோட்டை காந்திநகர் ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 55). வெளிநாட்டில் வேலை பார்த்த இவர், சமீபத்தில் ஊர் திரும்பினார்.

    பாண்டியின் மகள் உமா நந்தினிக்கு (22) வருகிற 5-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி உமா நந்தினி மாயமாகி விட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டி, பல இடங்களிலும் மகளை தேடினார். ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதனால் மனவேதனை அடைந்த பாண்டி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அவரது மகன் மணிகண்டன் புகாரின் பேரில், தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி உமா, சப்- இன்ஸ்பெக்டர் மருது பாண்டி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிராமசபை கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கார்த்திசி தம்பரம் எம்.பி. கூறினார்.
    மானாமதுரை:

    மானாமதுரை அருகே உள்ள செய்களத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி கிழக்கு வட்டார தலைவர் ஆரோக்கியதாஸ் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி வரவேற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட கார்த்தி சிதம்பரம் எம்.பி பேசியதாவது:–

    நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சிக்கான நிதியாக ரூ.5 கோடி மட்டும் தான் ஒதுக்கப்படுகிறது. ஒரு தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 3 பேரூராட்சி, 3 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இதை கொண்டு இதற்கு தேவையான நிதியை ஒதுக்க முடியவில்லை. எனவே ஊராட்சி பொது நிதியில் இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். காவிரி–குண்டாறு இணைப்பிற்கு இது வரை எந்த நிதியும் ஒதுக்கவில்லை. மேலும் தமிழக அரசு இந்த திட்டத்தை பற்றி மத்திய அரசுக்கு எந்த கடிதமும் கொடுத்து அதை நிறைவேற்ற முயற்சி செய்யவில்லை. எனவே இந்த திட்டம் என்பது சாத்தியமற்றது. இருந்தாலும் கூட இந்த திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளேன்.

    இவ்வாறு நடைபெறும் கிராம சபை கூட்டத்திற்கு அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டால் மட்டும் தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரமகாலிங்கம், அழகுமீனாள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுந்தரம், ராஜசேகரன், மாநில எஸ்.சி பிரிவு துணைதலைவர் டாக்டர் செல்வராஜ், சஞ்சய் காந்தி, நகர தலைவர் கணேசன், மேற்கு வட்டார தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    அ.தி.மு.க. சிறந்த மக்களாட்சியை தருகிறது என்று வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் பேசியுள்ளார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் ராஜா தலைமையில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகத்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:-

    யார் ஆட்சியில் நல்ல பல திட்டங்கள் மக்களுக்கு அர்ப்பணித்தார்கள். யார் நல்லாட்சி தந்தார்கள் என்பதை சிந்தித்து பார்த்து செயல்பட வேண்டும். தொலைநோக்கு திட்டம் அம்மா ஆட்சியில் இருந்து எடப்பாடி ஆட்சி வரை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. தான் சிறந்த மக்களாட்சியை தருகிறது.

    மறைந்த முன்னாள் தமிழ் மொழி வீரர்கள் நமது மண்ணில் வாழ்ந்து பெருமை சேர்த்து உள்ளனர். இன்று நடைபெறும் இந்த கூட்டம் மொழிக்காக உயிர் நீத்த மண்ணின் மைந்தர்களுக்கானது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் கருணாகரன், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜாக்குலின், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவதேவ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகானந்தம், சந்திரன், பாசறை மாவட்ட செயலாளர் ஆபரத்தனபட்டி பிரபு, மாவட்ட அமைப்பு சாரா அணிச் செயலாளர் சீவாஜி, தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கோபி, ஒன்றிய செயலாளர்கள் பாரதிராஜன், கணேசன், பழனிசாமி மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பெண் குழந்தைகள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மானாமதுரை அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையாக 10-ம் வகுப்பு மாணவி செயல்பட்டார்.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகனூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 7 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று ஒருநாள் தலைமை ஆசிரியர் இருக்கையில் காவ்யா என்ற மாணவி அலங்கரித்தார். 10-ம் வகுப்பு மாணவியான அவர் உத்தரவுகள் பிறப்பிக்க மற்ற மாணவ-மாணவிகள் கேட்டு நடந்தனர். முன்னதாக தலைமை ஆசிரியர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட ஆசிரியர்கள் காவ்யாவை வரவேற்று தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.

    தலைமை ஆசிரியர் பணி குறித்து மாணவிக்கு, விநாயக மூர்த்தி விளக்கினார். அதன்பின் ஆசிரியர்களுடன் காவ்யா ஆலோசனை நடத்தினார். பின்னர் ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று ஆய்வு செய்தார். மாணவ-மாணவியர்களிடம் படிப்பு மட்டுமின்றி விளையாட்டு உள்ளிட்ட பிற துறைகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மாணவி தலைமை ஆசிரியரானது எப்படி? என்பது குறித்து கேட்டபோது, நேற்று பெண் குழந்தைகள் தினம் என்பதால் அதன் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாணவி ஒருவரை ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமித்துள்ளனர்.

    அந்த வாய்ப்பு மாணவி காவ்யாவுக்கு கிடைத்துள்ளது. அதாவது, வருகை பதிவு, சக மாணவ, மாணவியர்களிடம் பழகும் மனப்பான்மை, பிறருக்கு உதவி செய்தல் போன்றவற்றில் சிறந்து விளங்கியதால் காவ்யாவை ஒரு நாள் தலைமை ஆசிரியையாக தேர்வு செய்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். 
    ×