என் மலர்tooltip icon

    சிவகங்கை

    அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
    சிவகங்கை:

    தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் மருதவாணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராம்குமார் வரவேற்று பேசினார். மாநில சிறப்பு தலைவர் ஆறுமுகம், பொது செயலாளர் நாகேந்திரன், பொருளாளர் கோவிந்தன், அமைப்பு செயலாளர் ஆனந்தன், மாவட்ட நிர்வாகிகள் கரிகாலன், நடன சுந்தரம், மீனாட்சிசுந்தரம், திருப்பதி, ரமேஷ், தொல்காப்பியன், அக்கின பாண்டி, முத்துமுருகன், புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள காலை உணவு திட்டத்தை மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் நகராட்சி பள்ளிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும். ஆங்கிலம், கணிதம், அறிவியல் என அனைத்து பாடத்திட்டங்களுக்கும் கடைசியாக தமிழ் பாடத்தை நிலைபடுத்தி அரசாணை வெளியிட்டு உள்ளனர்.

    பள்ளிகளில் காலியாக உள்ள தமிழாசிரியர் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அரசு தேர்வுகளில் இருந்த தமிழ் 2-ம் தாளை நீக்கியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    மாணவர்களின் அறிவு திறனை வளர்க்கும் தமிழ் 2-ம் தாளை மீண்டும் அமல்படுத்தி அக மதிப்பெண் அடிப்படையில் 20 மதிப்பெண்கள் வழங்க தமிழக பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் மீது போராட்ட காலங்களில் போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.

    மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   
    கீழடியில் 2 அடுக்குகள் கொண்ட தரை தளம் ஏற்கனவே கண்டறியப்பட்ட தரைதளத்தின் 10 அடி தூரத்திலேயே கண்டறியப்பட்டதால் அதன் தொடர்ச்சியாக இருக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி 6-ம் கட்ட அகழாய்வை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

    கடந்த 16 நாட்களாக நடந்த அகழாய்வில் இரு வண்ண பானைகள், பானை ஓடுகள்,பாசிகள், கண்டறியப்பட்டன.

    5-ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண் குழாயின் தொடர்ச்சியை கண்டறிவதற்காக தமிழக தொல்லியல் துறை மீண்டும் கீழடியில் நீதியம்மாள் நிலத்தில் அகழாய்வை தொடங்கியது.

    குழிகள் தோண்டப்பட்ட நிலையில் சுடுமண் குழாயின் தொடர்ச்சி கிடைக்கவில்லை. இதனையடுத்து சுடுமண் குழாய் கண்டறியப்பட்ட இடத்தின் மேற்கு பகுதியில் அகழாய்வு பணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

    அப்போது 4 அடி ஆழத்தில் 2 அடுக்குகள் கொண்ட தரை தளம் தென்பட்டது. ஏற்கனவே 5-ம் கட்ட அகழாய்வின்போது கண்டறியப்பட்ட தரைதளத்தின் 10 அடி தூரத்திலேயே இந்த தரை தளம் கண்டறியப்பட்டதால் அதன் தொடர்ச்சியாக இருக்க வாய்ப்புள்ளது என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். தரை தளம் கடந்த 5-ம் கட்ட தரை தளம் போல செங்கல் கட்டுமானத்திற்கு மேலே களிமண் பூச்சுடன் காணப்படுகிறது.

    தற்போது தரைதளம் 3அடி தூரத்திற்கு உள்ளது. மேலும் அகழாய்வு நடைபெறும்போது முழுபகுதியும் கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போது கீழடி அகழாய்வை காண வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.



    ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் அனுமதியின்றி செயல்பட்ட 21 கேன் குடிநீர் ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    காரைக்குடி:

    தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 100-க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நகர் பகுதிகளில் கேன் குடிநீர் பயன்படுத்துவோர் கடும் அவதியடைந்துள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் ஆலைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பொதுப்பணித்துறையின் உரிய அனுமதி பெறாமலும், உரிமம் காலாவதியானதன் அடிப்படையில் தங்கச்சி மடம், மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி, ராமநாதபுரம், கமுதி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வந்த 10 கேன் குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

    இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தேவகோட்டை, தருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை நகர் பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 10 கேன் குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    குடிநீர் கேன் உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக குடிநீர் கேன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிலர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குடிநீர் கேனை அதிக விலைக்கு விற்று வருவதாக புகார்கள் வந்துள்ளன.

    கேன் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மீண்டும் மாநகராட்சி, நகராட்சிகள் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரை நாடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
    திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் இன்று காலை பாதுகாவலர் ஓய்வறையில் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    காரைக்குடி:

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 29). இவர் கடந்த 2013-ம் ஆண்டு கோயம்புத்தூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார்.

    அதன் பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை முகாமிற்கு மாற்றப்பட்டார். அங்கு பணியில் இருந்த யோகேஸ்வரன், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியின் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டார்.

    இன்று வங்கியில் உள்ள பாதுகாவலர் ஓய்வறையில் யோகேஸ்வரன் இருந்தார். காலை அந்த அறையில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற காவலர்களும், வங்கி பணியாளர்களும் ஓய்வறைக்கு ஓடினர். அங்கு யோகேஸ்வரன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் பாதுகாப்புக்கு வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்திருப்பதாக தெரிகிறது.

    தகவல் கிடைத்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்தனர். அவர்கள் யோகேஸ்வரன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, ஓய்வறையில் கதவை பூட்டிக் கொண்டு யோகேஸ்வரன் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    காரைக்குடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை பெத்தாட்சி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குட்டியான். இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கற்பகவல்லி (வயது 25). இவர் காரைக்குடி அருகே புதுவயல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்சில் அவசர மருத்துவ உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று அவருக்கு இரவு நேர பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்குவதற்கான அறையில் தங்கியிருந்தார்.

    மறுநாள் காலையில் மாற்றுப் பணிக்கு வந்த ஊழியர்கள் அறையில் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். கற்பகவல்லி தனது துப்பட்டாவால் ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டுக்கொண்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து சாக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவஇடத்திற்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், கற்பகவல்லியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் கற்பகவல்லி தூக்குப்போட்டுக்கொண்ட அறையும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அவரது செல்போனும் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கற்பகவல்லியின் தாயார் பேச்சிமுத்து, தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக சாக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    வயலில் ஆட்டுக்கிடை அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பெண்கள் உள்பட 16 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியை அடுத்த ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி. இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு் மாதம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர்களை அழைத்து வந்து தனது வயலில் ஆட்டுக் கிடை அமைத்து இருந்தார்.

    இதை அறிந்த அருகில் உள்ள கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த சந்திரகுமார் தனது வயலிலும் ஆட்டுக்கிடை அமைக்கும்படி கேட்டார். இதற்கு முனியாண்டி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 30.8.2010 அன்று முனியாண்டி தரப்பினர் சந்திரகுமார் ஆதரவாளர்களை ஆயுதங்களால் தாக்கினர். இதில் அல்லிமுத்து (55) என்ற விவசாயி கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக திருப்பாச்சேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த முனியாண்டி, அவருடைய மகன்கள் சேகர், பூசைமணி, பாண்டிவேல், வீரபத்திரன் மற்றும் அழகுபாண்டி, மற்றொரு முனியாண்டி, பழனியாண்டி, ராஜாங்கம், பிரபு, முத்துப்பாண்டி, மற்றொரு வீரபத்திரன், மைக்கேல், கணேசன், கருப்பையா, செல்வராஜ் மற்றும் ரதி, ராமாயி ஆகிய 18 பேரை கைது செய்தனர்.

    இதுதொடர்பான வழக்கு சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது சேகர் மற்றும் கருப்பையா ஆகிய 2 பேர் இறந்துவிட்டனர். ரதி, ராமாயி ஆகிய பெண்கள் உள்பட 16 பேர் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி 16 பேரும் கோர்ட்டில் ஆஜராகினர். நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட 2 பெண்கள் உள்பட 16 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

    இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டதையொட்டி ஆயுள் தண்டனை பெற்ற 16 பேரின் உறவினர்கள், குடும்பத்தினர் திரண்டு இருந்ததால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. இதை தொடர்ந்து அதிரடி படை போலீசார் கோர்ட்டு வளாகத்தில் குவிக்கப்பட்டனர். தீர்ப்புக்கு பின்னர் 16 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் ஏற்றி மதுரை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.


    ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவுக்கு வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மானாமதுரையில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.
    திருப்புவனம்:

    திருப்புவனம் யூனியன் தட்டான்குளம் வைகை ஆற்றுப் பகுதியில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும் இந்த பணிகளை அமைச்சர் பாஸ்கரன் நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து அமைச்சர் பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் வைகை ஆற்றுப்பகுதியில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில், இந்த பணிக்காக 20 பொக் லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட உள்ளது. காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தின் மூலம் நமது மாவட்டம் பயன் பெறும்.

    வருகிற 1-ந்தேதி ராமநாதபுரம் செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மானாமதுரையில் விவசாயிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இ்வ்வாறு அமைச்சர் கூறினார். ஆய்வின்போது கலெக்டர் ஜெயகாந்தன், எம்.எல்.ஏ. நாகராஜன் மற்றும் அரசியல் கட்சியினர், வைகை பாசன விவசாய சங்க நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் இருந்தனர்.

    இதனை தொடர்ந்து மானாமதுரை வைகை ஆற்றுப்படுகையில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணிகளை அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் ஜெயகாந்தன், நாகராஜன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தனர். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன், வட்டாரவளர்ச்சி அதிகாரிகள் சுந்தரமகாலிங்கம், அழகுமீனா, தாசில்தார் பஞ்பிகேசன், சின்னகண்ணனூர் ஊராட்சி கழக செயலாளர் வேலுச்சாமி, நாகு நரசிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    சிவகங்கை அருகே முனிக்கோவிலில் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த களத்தூர் விலக்கில் அமைந்துள்ளது பாண்டியாபுரம் கண்மாய். இந்த பகுதியில் உள்ள முனிக்கோவிலில் கல்வெட்டு ஒன்று இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் கொல்லங்குடியைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்றுனரும் தொல்லியல் ஆய்வாளருமான புலவர் காளிராசா அங்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது 131 ஆண்டுகள் பழமையான ஜமீன்தார் கால கல்வெட்டு என்பது தெரிய வந்தது. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது:-

    சிவகங்கை பகுதியை ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களிடமிருந்து தனிப்பகுதியாக பெற்று 1729-ம் ஆண்டிலிருந்து மன்னர் சசிவர்ணர் ஆண்டு வந்தார்.

    சிவகங்கையின் கடைசி மன்னரான வேங்கை பெரிய உடையண ராஜாவிற்கு பிறகு 1801-ம் ஆண்டிலிருந்து ஜமீன்தார் ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்தது. அதன் பிறகு ஆட்சி செய்த மகமு சுந்தர பாண்டியனால் இந்த கல்வெட்டு வெட்டிவைக்கப் பெற்றிருக்கலாம். சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோவிலில் மகமு சுந்தர பாண்டியருக்கும் அவரது தாய் மகமு நாச்சியாருக்கும் சிலை உள்ளது. 350 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவில் கட்டப்பெற்றதாக செய்தி உள்ளது.

    இந்த கோவிலில் 13-ம் நூற்றாண்டின் கல்வெட்டுகள் இருப்பதை இந்திய தொல்லியல் துறையினர் பதிவு செய்துள்ளனர். 13-ம் நூற்றாண்டு மாறவர்மன் சுந்தர பாண்டியனின் கல்வெட்டுகள் சிவகங்கை அருங்காட்சியத்தில் வைக்கப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இவ்வாறு அவர் கூறினார்.
    மானாமதுரை வைகை ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி மானாமதுரை பேரூராட்சி அலுவலகம் முன்பு அனைத்து கட்சி போராட்டம் நாளை (25-ந்தேதி) நடக்கிறது.

    மானாமதுரை:

    மானாமதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் தி.க. மாவட்ட செயலாளர் ஆனந்தவேல் தலைமையில் நடந்தது.

    தி.மு.க. நகர் செயலாளர் பொன்னுச்சாமி, இளைஞரணி செயலாளர் சுந்தர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆண்டி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வீரையா, முனியராஜ், ராஜாராமன், முருகானந்தம்.

    ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அசோகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர் செயலாளர் நாகராஜன், காங்கிரஸ் கட்சி தலைவர் பழனிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மாணிக்கம், நகர் செயலாளர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வேண்டும், மானாமதுரை வைகை ஆற்றில் தொடர் மணல் திருட்டு நடந்து வருகிறது. இந்த வைகை ஆற்றில்தான் குடிதண்ணீர் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து அனுப்பப்படுகிறது.

    ஒரு நாளைக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. குடிதண்ணீருக்கு ஆதாரமாக உள்ள வைகையில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதனை வலியுறுத்தி நாளை (25-ந்தேதி) பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முகம் சிதைக்கப்பட்டு மதுரை வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவலை போலீசிடம் தெரிவித்தனர்.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மேலராங்கியம் கிராமத்தில் கடந்த 7-ந்தேதி முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பழையனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி இறந்தவர் யார்? அவரை கொலை செய்தது யார்? என விசாரித்து வந்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த கொலை தொடர்பாக மேலராங்கியம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது48), உதயகுமார் (26), கண்ணன் என்ற மாயக்கண்ணன் (21) ஆகியோர் அந்த ஊரின் கிராம நிர்வாக அலுவலர் பல்லாக்கு என்பவரிடம் சரணடைந்தனர்.

    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர், போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாதேவிக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது, கொலையானவர் மதுரை குலமங்கலம் அருகே சிவகாடு பகுதியை சேர்ந்த சிவானந்தம் (23) என்பது தெரியவந்தது. மேலும் நாகராஜ், உதயகுமார், கண்ணன் ஆகிய 3 பேரும் சேர்ந்து சிவானந்தம் முகத்தில் கல்லைபோட்டு கொலை செய்ததும் தெரியவந்தது.

    மேலும் நாகராஜின் மகள் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டதால், அவரது மகன் ஆத்திரம் தாங்காமல் சகோதரியை காதல் திருமணம் செய்தவரின் உறவினரை வெட்டியுள்ளார். இதனால் தற்போது சிறையில் உள்ளார். இந்த சம்பவத்துக்கு பழிவாங்க வந்திருப்பதாக எண்ணி அந்த வாலிபரை சந்தேகப்பட்டு 3 பேரும் சேர்ந்து கொலை செய்ததாக போலீசாரிடம் பரபரப்பு தகவலை தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகளை சுற்றுலா பயணிகள் காண வசதியாக தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி போன்றவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 2014- 15-ம் ஆண்டு முதல் 2016-17-ம் ஆண்டுகள் வரை அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது 7,818 தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை அந்தப்பகுதியில் சங்க கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளாக அமைந்தன.

    4-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 2018-19-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 34 குழிகள் அமைக்கப்பட்டு 5 ஆயிரத்து 820 தொல்பொருட்களும், பழந்தமிழரின் கட்டுமான பகுதியும் வெளிப்படுத்தப்பட்டன.

    5-ம் கட்ட அகழாய்விலும் பல்வேறு வடிவிலான செங்கல் கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட 900 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் கால கணிப்பு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டன.

    ஆய்வின் முடிவில் அவை 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான நாகரீகத்துடன் தொடர்புடையவை என்று தெரியவந்தது.

    கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பார்வையிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் 6-ம் கட்ட அகழாய்வு பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து கீழடியில் அகழாய்வு பணிகள் தொடங்கியது. 6-ம் கட்ட அகழாய்வு பணி கீழடி மட்டுமின்றி அதன் அருகேயுள்ள அகரம், மணலூர், கொந்தகை ஆகிய கிராமங்களில் 10 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது. இந்தப்பணிகள் வருகிற செப்டம்பர் மாதம் வரை நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் மேற்கொள்ளப்படுகிறது.

    100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கீழடியில் சர்வதேச தரத்தில் தொல்லியியல் அருங்காட்சியகம் அமைக்க முதல்-அமைச்சர் ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக கீழடியில் 2 ஏக்கர் நிலப்பரப்பளவில் கட்டடம் கட்டுவதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அகழாய்வு பணிகளை சுற்றுலா பயணிகள் காண வசதியாக தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி போன்றவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
    கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணியை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ளது கீழடி. இங்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மத்திய அரசின் சார்பில் 3 கட்டங்களாக தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது.

    அதன் பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 4 மற்றும் 5-வது கட்ட அகழ்வாராய்ச்சி தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்தது.

    அகழ்வாராய்ச்சி பணியின் போது பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய தங்க ஆபரணங்கள், மண்பாண்ட பொருட்கள், சுடுமண் ஓடுகள், சுடுமண் உருவம், பானை ஓடுகள், தாயக்கட்டைகள், காதணி, உறைகிணறுகள், இரட்டைச் சுவர்கள், தண்ணீர் தொட்டிகள் உள்பட 15 ஆயிரம் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    இவற்றின் மூலம் கீழடி நாகரீகம் 2,600 ஆண்டுகள் பழமையானவை என்பது உறுதியானது. கீழடியில் 5 கட்டங்களில் கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் கீழடியில் சர்வதேச தரத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

    இதற்காக கீழடி அரசு பள்ளி விளையாட்டு மைதானம் அருகே 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

    தற்போது கீழடி மற்றும் அதன் அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 6-வது கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து 6-ம் கட்ட அகழாய்வு பணியை இன்று பிற்பகல் 3.45 மணியளவில் சென்னையில் இருந்தபடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதற்காக கீழடியில் அகழாய்வு செய்யும் இடத்தில் கடந்த 2 நாட்களாக சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

    கீழடியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயகாந்தன் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    ×