search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழடியில் அகழாய்வு பணிகள் நடைபெறுகிறது.
    X
    கீழடியில் அகழாய்வு பணிகள் நடைபெறுகிறது.

    கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது: சுற்றுலா பயணிகள் காண ஏற்பாடு

    கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகளை சுற்றுலா பயணிகள் காண வசதியாக தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி போன்றவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 2014- 15-ம் ஆண்டு முதல் 2016-17-ம் ஆண்டுகள் வரை அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது 7,818 தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை அந்தப்பகுதியில் சங்க கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளாக அமைந்தன.

    4-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 2018-19-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 34 குழிகள் அமைக்கப்பட்டு 5 ஆயிரத்து 820 தொல்பொருட்களும், பழந்தமிழரின் கட்டுமான பகுதியும் வெளிப்படுத்தப்பட்டன.

    5-ம் கட்ட அகழாய்விலும் பல்வேறு வடிவிலான செங்கல் கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட 900 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் கால கணிப்பு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டன.

    ஆய்வின் முடிவில் அவை 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான நாகரீகத்துடன் தொடர்புடையவை என்று தெரியவந்தது.

    கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பார்வையிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் 6-ம் கட்ட அகழாய்வு பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து கீழடியில் அகழாய்வு பணிகள் தொடங்கியது. 6-ம் கட்ட அகழாய்வு பணி கீழடி மட்டுமின்றி அதன் அருகேயுள்ள அகரம், மணலூர், கொந்தகை ஆகிய கிராமங்களில் 10 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது. இந்தப்பணிகள் வருகிற செப்டம்பர் மாதம் வரை நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் மேற்கொள்ளப்படுகிறது.

    100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கீழடியில் சர்வதேச தரத்தில் தொல்லியியல் அருங்காட்சியகம் அமைக்க முதல்-அமைச்சர் ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக கீழடியில் 2 ஏக்கர் நிலப்பரப்பளவில் கட்டடம் கட்டுவதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அகழாய்வு பணிகளை சுற்றுலா பயணிகள் காண வசதியாக தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி போன்றவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
    Next Story
    ×