search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேஷன் கடைகள்"

    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
    • வெள்ளத்தால் சேதமடைந்த விவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி வெள்ளத்தால் சேதமடைந்த விவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.

    இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகைக்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியது.

    இந்நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் டிசம்பர் 31-ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும். நிவாரண நிதி வழங்கும் பணிகளுக்காக அன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    • ரேஷன் கடையை கண்காணிக்க தன்னார்வ கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.
    • அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருள் இருப்பு பலகை வைக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர் மற்றும் கண்காணிப்பு கூட்டம் அனைத்து தன்னார்வ அமைப்புகளை கொண்டு நடைபெற்றது.

    கூட்டத்திற்கு வட்ட வழங்க அலுவலர் மதியழகன் தலைமை தாங்கினார். மாவட்ட நுகர்வோர் மைய தலைவர் வக்கீல் நாகராஜன் முன்னிலை வகித்தார்.

    இதில் நுகர்வோர் மைய செயற்குழு உறுப்பினர் துரை. ராயப்பன், முருகானந்தம், கலா, சரோஜினி அண்ணாதுரை, அரிமா செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ரேஷன் கடையை கண்காணிக்க தன்னார்வ கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும், அனுமதி இல்லாத இடத்தில் கேஸ் சிலிண்டர் விற்பதை தடை செய்ய வேண்டும், அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருள் இருப்பு அறிவுப்பு பலகையும், குறைகள் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்ணும், விடுமுறை நாட்கள் மற்றும் பணி நேரம் குறித்த தகவல் பலகை வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல் நாகராஜன் தலைமையில் வட்ட வழங்க அலுவலர் மதியழகனிடம் அளிக்க ப்பட்டது.

    மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதனை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    • சென்னையில் உள்ள கூட்டுறவு ரேசன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • தக்காளி அதிகம் வராததால் 1 நபருக்கு 1 கிலோ என்ற அளவில்தான் 60 ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் கொடுக்கிறார்கள்.

    சென்னை:

    தக்காளி வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரை விற்கப்பட்டு வருகிறது.

    ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளதால் இங்கு தட்டுப்பாடு ஏற்பட்டு நாளுக்கு நாள் தக்காளி விலை அதிகரித்து விட்டது.

    இதனால் சென்னையில் உள்ள கூட்டுறவு ரேசன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் இதை விரிவுபடுத்தும் வகையில் இப்போது மொத்தம் 302 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கி உள்ளது.

    தக்காளி அதிகம் வராததால் 1 நபருக்கு 1 கிலோ என்ற அளவில்தான் 60 ரூபாய்க்கு ரேஷன் கடை களில் கொடுக்கிறார்கள்.

    சென்னையில் காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைக்கு உட்பட்ட ராமாபுரம், மடிப்பாக்கம், போரூர், வளசரவாக்கம், மதுரவாயல் லட்சுமி நகர், வானகரம், கந்தன்சாவடி, காரப்பாக்கம் ரேசன் கடைகளில் தக்காளி விற்கப்படுகிறது.

    திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க கடைகள், ராயப்பேட்டை, பெசன்ட் நகர், சாஸ்திரி நகர், அவ்வை நகர், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, ஸ்ரீராம் நகர், தி.நகர், சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், லட்சுமி புரம், நுங்கம்பாக்கம், கோபாலபுரம், ஆர்.ஏ.புரம், சைதாப்பேட்டை, சின்னமலை, கிண்டி, கே.கே.நகர், ஆர்.கே.நகர், எருக்கஞ்சேரி, மணலி, மாம்பலம், சாலி கிராமம், வேளச்சேரி, ஆதம்பாக்கம் என 87 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

    இது தவிர மதுரை மண்டலத்தில் 20 கடைகள், கோவை மண்டலத்தில் 20, திருச்சி மண்டலத்தில் 20, சேலம் மண்டலம்-15, திருநெல்வேலி மண்டலம்-15, திருப்பூர்-10, வேலூர்-15, ஈரோடு-15, தூத்துக்குடி-15, தஞ்சாவூர்-15, திண்டுக்கல்-10, காஞ்சிபுரம்-10, கரூர்-10, கடலூர்-10, விழுப்புரம்-10, கன்னியாகுமரியில்-5 ரேஷன் கடை என 215 ரேஷன் கடைகள் ஆக மொத்தம் 302 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்து வருகின்றனர்.

    • அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு தொழில்களை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • தொடர்ந்து கூட்டுறவு கடன் சங்கங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என முதன்மை செயலர் தகவல்

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த வாயலூர் பகுதியில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். கூட்டுறவு சங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார். சங்கத்தின் அருகே புதிதாக தொடங்கப்பட்டுள்ள எண்ணைய் உற்பத்தி செய்யும் மரச்செக்கு ஆலையை நேரில் பார்வையிட்டார்.

    பின்னர், செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

    கிராமப்பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலம் தொழில்நுட்ப ரீதியாக மேற்கொண்டுள்ள முன்னேற்ற செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறேன். இதன் ஒரு பகுதியாக, வாயலூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு, வாயலூர் சுற்றுப்புற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கடலை மூலம் எண்ணைய் தயாரிக்கும் வகையில், கூட்டுறவு சங்கத்தில் ரூ.20 லட்சம் கடன் பெற்று செக்கு ஆலை அமைக்கப்பட்டுள்ளது., இதில், உற்பத்தி செய்யப்படும் எண்ணைய் 1 லிட்டர் ரூ.220க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடன் சங்கங்கள் மூலம் அப்பகுதியில் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான செயல்பாடுகள் மற்றும் 24 வகையான தொழில்கள் மூலம் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில், அந்தந்த பகுதிக்கு தேவையான வகையில் தொழில் மேற்கொள்ளப்படுகிறது. வாயலூர் கூட்டுறவு சங்கத்தில் செக்கு அமைத்துள்ளதுபோல், உசிலம்பட்டி பகுதியில் கரும்பு உற்பத்தி மற்றும் அறுவடை செய்வதற்கான இயந்திரங்களை வாடகைக்கு வழங்குதல், கடலூரில் நெல் அறுவடை செய்யக்கூடிய இயந்திரம் வாடகைக்கு வழங்குதல் உள்பட, அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு தொழில்களை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    அதேபோல், இப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகளிலும் ஆய்வு செய்யப்பட்டது. புதுப்பிக்க வேண்டிய கடைகளையும் பார்வையிட்டேன். தமிழ்நாட்டில் ஏற்கெனவே 5 ஆயிரம் ரேஷன் கடைகள் ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்றுள்ளன. இந்தாண்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு மேற்கண்ட சான்று கிடைக்கும் என நம்புகிறோம். பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளை தீர்க்கும் வகையில், அதிகாரிகள் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். தொடர்ந்து கூட்டுறவு கடன் சங்கங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அடுத்த 6 மாதத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளிலும் இ.சேவை மையமும் செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்படுகிறது.
    • முதல் கட்டமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பொது விநியோக திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

    கூட்டுறவு துறை மூலம் தமிழகத்தில் 33 ஆயிரம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் அத்தியாவசிய உணவு பொருட்கள் மலிவான விலையில் விற்கப்படுகிறது.

    இதன் மூலம் இத்துறைக்கு போதிய வருமானம் வருவது இல்லை. என்றாலும் பொதுமக்களின் அத்தியாவசிய சேவையாக கருதி இதனை செய்து வருகிறது.

    பல மாநிலங்களில் ரேஷன் கடைகளுடன் இ.சேவை மையம் செயல்படுவதால் பொதுமக்களுக்கு உதவியாக இருப்பதோடு வருவாய் ஈட்டி வருகிறது. அதே போல தமிழகத்திலும் ரேஷன் கடைகளுடன் இ.சேவை மையங்களை தொடங்க கூட்டுறவு துறை திட்டமிட்டு உள்ளது. ரேஷன் கடைகளை லாபகரமாக செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    அடுத்த 6 மாதத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளிலும் இ.சேவை மையமும் செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    பாஸ்போர்ட் எடுப்பதற்கான ஆன்லைன் மூலம் சமர்பித்தல், மின்சாரம், குடிநீர், கழிவுநீர், சொத்துவரி, டெலிபோன் உள்ளிட்ட கட்டணங்கள் செலுத்துதல், ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த மையத்தில் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    முதலில் கிராமப் பகுதிகளில் இத்திட்டத்தை செயல்படுத்தவும் இதற்கான இடம் தேர்வு செய்வது ஒரு சிக்கலான விஷயம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இத்திட்டத்தை செயல்படுத்த இந்திய அஞ்சல் கட்டண வங்கி, இந்திய தேசிய பேயிமென்ட் கழகம் மற்றும் தனியார் சேவை வழங்குபவர்களுடன் கூட்டுறவு துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    தமிழகத்தில் 11 ஆயிரத்து 867 தபால் அலுவலகங்கள் உள்ளன. இதில் கிராமப் புறங்களில் 10 ஆயிரத்து 259 செயல்படுகின்றன. இந்த தபால் நிலையங்கள் கிராமங்களில் செயல்படும் சுமார் 26 ஆயிரம் ரேஷன் கடைகளை நிறைவு செய்கின்றன. அவர்களால் 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகளை எளிதாக கட்டுப்படுத்த முடியும் என்று அதிகாரி நம்பிக்கை தெரிவிக்கிறார்.

    பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பங்களை வழங்குதல், திருத்தங்களை செய்து பயன்பாட்டு பில் தொகை செலுத்துதல் மற்றும் ஆதார் தரவை புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளை தமிழக ரேஷன் கடைகள் விரைவில் வழங்க உள்ளன.

    • யாருக்கும் பொங்கல் பரிசு பொருள்-பணம் வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
    • பொங்கல் பரிசை பொங்கல் பண்டிகைக்கு முன்பே வழங்க வேண்டும் என்பதற்காக வருகிற 13-ந்தேதி ரேஷன் கடைகள் அனைத்தும் செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

    பொங்கல் பரிசு தொகுப்பு-ரூ.1000 ரொக்கம், முழு கரும்பு வாங்குவதற்கு ரேஷன் கடைகளில் வரிசையில் நிற்கும் பொதுமக்கள் அனைவருக்கும் விடுபடாமல் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. யாருக்கும் பொங்கல் பரிசு பொருள்-பணம் வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    பொங்கல் பரிசை பொங்கல் பண்டிகைக்கு முன்பே வழங்க வேண்டும் என்பதற்காக வருகிற 13-ந்தேதி ரேஷன் கடைகள் அனைத்தும் செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

    • வாளவாடி, தளி, எழுகுள பாசனம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெல்லம் தயார் செய்யப்படுகிறது.
    • பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 20 நாட்களே உள்ளதால் வெல்லம் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.

    உடுமலை:

    தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு இரவு பகலாக உருண்டை வெல்லம் மற்றும் அச்சு வெல்லம் தயாரிக்கும் பணியில் உடுமலைப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றியுள்ள பகுதிகளான கொழுமம், கணியூர், கடத்தூர், கொமரலிங்கம், வாளவாடி, தளி, எழுகுள பாசனம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெல்லம் தயார் செய்யப்படுகிறது. அமராவதி புதிய,பழைய வாய்க்கால் பாசனப் பகுதி மற்றும் பிஏபி. பாசன பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வந்தனர். ஆனால் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு பதிவு செய்த விவசாயிகளின் கரும்புகள் உரிய காலத்தில் ஆண்டு தோறும் வெட்டப்படாததால் பெரும் நஷ்டம் அடைந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் ஆலைக்கு கரும்பு பயிரிடுவதை குறைத்து வெல்லம் காய்ச்ச மட்டும் பயிரிட ஆரம்பித்தனர்‌.

    இதன் மூலம் கரும்பு 9 மாதம் முதல் 11 மாதத்துக்குள் வெட்டப்படுவதால் நல்ல சாறுடன் எடையும் கிடைப்பதால் தனியார் வெல்லம் தயாரிக்கும் இடங்களுக்கும், தாங்களாகவே சிறிய அளவில் வெல்லம் தயாரிக்க யூனிட் அமைத்தும் வெல்லம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் தற்போது உடுமலையில் தயாராகும் வெல்லம் அருகில் உள்ள கேரள மாநிலத்துக்கும், கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர். இதன் மூலம் குறைந்த அளவு வருமானம் கிடைப்பதாக கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறுகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 20 நாட்களே உள்ளதால் வெல்லம் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.

    வெல்லம் தயாரிப்பு குறித்து மடத்துக்குளம் விவசாயி ஒருவர் கூறுகையில், மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில்,வெல்லம் மற்றும் அச்சு வெல்லம் தயாரிப்பதற்காக கரும்பு சாகுபடி செய்துள்ளோம். இந்த கரும்பினை நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து அறுவடை செய்யத் தொடங்குவோம். இப்போது மழை குறைந்த பின்னர் கரும்பு அறுவடை செய்து வெல்லம் தயாரித்து வருகிறோம். ஒரு ஏக்கருக்கு சுமார் 50 டன் கரும்பு கிடைக்கும். ஒரு டன் கரும்பு தற்போது ரூ.2300 வரை வாங்கப்படுகிறது. ஒரு ஏக்கர் கரும்பில் இருந்து ஒரு சிப்பம் 30 கிலோ எடையில், சுமார் 160 முதல் 200 சிப்பம் வெல்லம் தயாரிக்கலாம். அச்சு வெல்லத்தின் நிறத்தைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இந்த ஆண்டு 30 கிலோ எடை கொண்ட ஒரு சிப்பம் 950 ரூபாய் முதல் 1350 ரூபாய் வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. நல்ல விளைச்சல் உள்ள கரும்பு எனில் ஒரு கொப்பரைக்கு 5 முதல் 7 சிப்பம் வரை வெல்லம் கிடைக்கும். தற்போது உரவிலை, போக்குவரத்து செலவு, அச்சு வெல்லம் தயாரிக்க கூலியாட்கள் சம்பளம், டீசல் விலை தற்போது பல மடங்கு உயர்ந்து விட்ட நிலையில் வெல்லத்தின் தற்போதைய கொள்முதல் விலை நிலவரம் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாத நிலையில் உள்ளது. இதனால் பல விவசாயிகள் தனியார் கரும்பு வியாபாரிகளிடம் கரும்புகளை விற்று வருகின்றனர்.

    இங்கு தயாராகும் வெல்லம் கோவை, திருப்பூர், திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்துக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில்தயாராகும் வெல்லத்தை விட இங்கு தயாராகும் வெல்லம் சுவை நன்றாக இருக்கும். இதனால் அனைவரும் இங்கு தயாராகும் வெல்லத்தை விரும்பி வாங்குகின்றனர். கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க பொங்கல் பண்டிகைக்கு அரசே வெல்லத்தை அந்தந்த மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் விற்பனை செய்வதற்கு முன்வர வேண்டும் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் விவரம் ஒவ்வொரு கடைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
    • வங்கி கணக்கு இல்லாதவர்கள், ஆதாருடன் இணைக்காமல் உள்ளவர்களுக்கு ஒரு படிவம் வழங்கப்பட்டு அதனை பூர்த்தி செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக அரிசி, கோதுமை வழங்கப்படுவதோடு குறைந்த விலையில் பாமாயில், பருப்பு, சர்க்கரை ஆகியவையும் வினியோகிக்கப்படுகிறது.

    2 கோடியே 23 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இதன்மூலம் பயன் அடைந்து வருகின்றனர்.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு குடும்ப உறுப்பினர்கள் கைவிரல் பதிவு செய்தால் மட்டுமே பொருட்கள் வாங்கக்கூடிய நிலை உள்ளது. குடும்பத்தை சாராதவர்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாது.

    இந்த நிலையில் ஸ்மார்ட் கார்டுடன் ஆதார் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஏற்கனவே வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வங்கி கணக்குடன் பெரும்பாலானவர்கள் ஆதார் எண்ணை இணைத்தனர்.

    ஒரு சிலர் இன்னும் ஆதாருடன் வங்கி கணக்கை இணைக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனம் தமிழகத்தில் 18 லட்சத்து 40 ஆயிரம் பேர் ஆதாருடன் வங்கி கணக்கை இணைக்காமல் இருப்பதால் ரேஷன் கார்டுடன் இணைக்க முடியாமல் உள்ளது.

    வங்கி கணக்கு இல்லாமல் சிலர் ஆதார் இணைக்காமல் இருப்பதால் ரேஷன் கார்டும் இணையாமல் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு உணவு வழங்கல் துறை மூலம் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் விவரம் ஒவ்வொரு கடைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. வங்கி கணக்கு இல்லாதவர்கள், ஆதாருடன் இணைக்காமல் உள்ளவர்களுக்கு ஒரு படிவம் வழங்கப்பட்டு அதனை பூர்த்தி செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதில் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது. ரேஷன் கடை எண், குடும்ப உறுப்பினர் பெயர், ஆதார் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.

    தமிழகம் முழுவதும் இதுவரையில் வங்கி கணக்குடன் ஆதார் எண்களை இணைக்காத ரேஷன் கார்டுதாரர்களிடம் இந்த மாத இறுதிக்குள் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்று சிவில் சப்ளை துறை உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் ரேஷன் கடை ஊழியர்கள் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வங்கி கணக்கு தொடங்காமல் இருந்தவர்கள் தற்போது புதிதாக தொடங்கி ஆதார் எண்ணை இணைந்த விவரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பித்து வருகின்றனர்.

    அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். ரொக்கமாக வழங்கலாமா என ஆலோசிக்கப்படுகிறது. வங்கி கணக்கில் பொங்கல் பரிசுத்தொகை வழங்குவது எளிதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    மேலும் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு பரிசீலிக்கிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'அரசின் திட்டங்கள் மக்களுக்கு வங்கி கணக்கு மூலம் நேரடியாக சென்றடைய வேண்டும் என்பதற்காக வங்கி கணக்கு தொடங்காமல் ஆதார் இணைக்காமல் உள்ளவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் இந்த பணி மும்முரமாக நடந்து வருகிறது. பொங்கல் பணம் இந்த வருடம் வங்கி கணக்கில் செலுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது' என்றனர்.

    • கடலூர் மாவட்டத்தில் இன்று வழக்கத்தை விட மிக அதிக கன மழை பெய்யும்.
    • 68 நபர்கள் கடலூர் மாவட்டத்தில் வந்துள்ளனர்.

    கடலூர்:

    மாண்டஸ் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று வழக்கத்தை விட மிக அதிக கன மழை பெய்யும். மேலும் பலத்த காற்று வீசப்படும் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே 42 புயல் பாதுகாப்பு மையங்கள், 191 தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன . இதனைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என 68 நபர்கள் கடலூர் மாவட்டத்தில் வந்துள்ளனர். 

    இதனை தொடர்ந்து கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் மாண்டஸ் புயல் காரணமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை வாங்கி பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்தால் 278 இடங்கள் பாதிக்கப்படக்கூடும் என ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்டம் முழுவதும் தீயணைப்பு துறையினர், மின்சாரத் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 241 ரேஷன் கடைகளில் சுமார் 750 டன் அரிசி பேரிடர் காலத்தில் பாதுகாப்பு மையங்களில் தங்கப்பட உள்ள பொதுமக்களுக்கு பயன்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே சேமிக்கப்பட்டு உள்ளது. மேலும் 241 ரேஷன் கடைகள் இருக்கக்கூடிய பகுதிகள் அதிக பாதிக்கக்கூடிய பகுதிகளாகவும், பொதுமக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்கும் சமயத்தில் எளிமையாக ரேஷன் கடையில் இருந்து அரிசி மூட்டைகள் கொண்டு சென்று மக்களுக்கு உணவு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். இந்த நிலையில் பேரிடர் பெருமளவில் பாதிப்பு ஏற்படாமல் அரிசிகள் இருந்தால் ஜனவரி மாதம் முதல் அதனை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படும். ஆகையால் இதன் மூலம் பொது மக்களுக்கு மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உணவு உடனுக்குடன் கிடைப்பதற்கு ஏதுவாக அமையும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • சாா்ஜ்போட்டு வைத்து மின்தடை நாளில் நியாய விலைக் கடைகள் செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்யாமல் கடைகளைப் பூட்டிச் செல்கின்றனா்.

    திருப்பூர் : 

    திருப்பூா் வடக்குப் பகுதியில் மின் தடையின்போது நியாய விலைக் கடைகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து பொதுத் தொழிலாளா் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத்துக்கு, அனைத்து பொதுத் தொழிலாளா் நல அமைப்பின் பொதுச் செயலாளா் ஆ.சரவணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் வடக்கு பகுதிகளுக்குட்பட்ட 15 வேலம்பாளையம், அனுப்பா்பாளையம், ஆத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடையைக் காரணம் காட்டி சில நியாய விலைக் கடை ஊழியா்கள் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்யாமல் கடைகளைப் பூட்டிச் செல்கின்றனா்.

    நியாய விலைக்கடைகளில் வைத்துள்ள ஸ்டாா்ட் ஸ்கேனா் எந்திரம், எலக்ட்ரானிக் எடை அளவை எந்திரம் ஆகியவற்றை மின்தடைக்கு முந்தைய நாளே சாா்ஜ்போட்டு வைத்து மின்தடை நாளில் நியாய விலைக் கடைகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகாரிகளின் ஆய்வின்போது ரேஷன் பொருட்கள் வாங்க வரும் மக்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
    • புதியசெல்போன் செயலி மூலம் ரேஷன் கடைகளில் ஆய்வுநடத்த மாவட்ட அதிகாரிகள் தயாராகிவருகின்றனர்.

    திருப்பூர்:

    ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள், இருப்பு விவரங்கள் குறித்து மாவட்ட கலெக்டர், டி.ஆர்.ஓ., - மாவட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு சார்பதிவாளர், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

    பாய்ன்ட் ஆப் சேல் மெஷினை நிறுத்தி ஆய்வு நடத்தப்படுகிறது. இதனால் அதிகாரிகளின் ஆய்வின்போது ரேஷன் பொருட்கள் வாங்க வரும் மக்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

    இதனை தவிர்க்க ரேஷன் கடைகளில் ஆய்வு செய்வதற்காக பிரத்யேக செயலி உணவு துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சக்ரபாணி, அறிமுகப்படுத்தினார். இதையடுத்து திருப்பூர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகளின் செல்போனில் இந்த செயலி நிறுவப்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் 1,135 ரேஷன் கடைகள் உள்ளன. புதியசெல்போன் செயலி மூலம் ரேஷன் கடைகளில் ஆய்வுநடத்த மாவட்ட அதிகாரிகள் தயாராகிவருகின்றனர்.

    ரேஷன் கடைக்கு செல்லும் ஆய்வு அதிகாரி தனது செல்போன் செயலியில், யூசர்நேம், பாஸ்வேர்டு அளித்து, புதிய ஆய்வுக்கான பகுதியை உருவாக்குவார். மாவட்டம், தாலுகா, ரேஷன் கடை எண் விவரங்களை அளிப்பார். உடனடியாக கடை பொறுப்பாளர் பெயர், கடை அமைவிடம் உள்பட முழு விவரம் காட்டப்படும்.

    பொருட்கள் இருப்பு, கடை குறித்த ஆய்வு, இதர ஆய்வு என்கிற 3 பிரிவில் ஆய்வு மேற்கொள்ளலாம். பொருட்கள் இருப்பு பிரிவை தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட பொருளின் பெயரை அதிகாரி பதிவு செய்வார். உடனடியாக அந்த கடையின் பாய்ன்ட்ஆப்சேல் மெஷினில் பதிவாகியுள்ள விவரங்கள் அடிப்படையில் விற்பனை, பொருட்கள் இருப்பு ஆகியன செயலியில் காட்டப்படும்.

    நேரடி ஆய்வுமூலம் குறிப்பிட்ட அளவில் பொருள் இருப்பு உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு முரண்பாடு இருப்பின், அவ்விவரங்களையும் அபராத தொகையையும் செல்போன் செயலியிலேயே ஆய்வு அதிகாரி பதிவு செய்து விடுவார்.

    இதேபோல் ரேஷன் கடை சரியான நேரம் இயங்குகிறதா, பணியாளர், மின் இணைப்பு, எலக்ட்ரானிக் தராசு, பொருள் இருப்பு, பாய்ன்ட் ஆப் சேல் மெஷின் செயல்பாடு ஆகிய பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து ஆம், இல்லை என பதிவு செய்யும் வசதியும் உள்ளது.செயலியை பயன்படுத்துவது எளிதாக புரிந்து கொள்ள படவிளக்கத்துடன் கூடிய விளக்க கையேடு வழங்கப்பட்டுள்ளன.குறைகள் கண்டறிந்து களையப்பட்ட பின், ரேஷன் கடை ஆய்வுகள் முழுமையாக இந்த செயலி மூலமாகவே மேற்கொள்ளப்படும் என்கின்றனர் வழங்கல் பிரிவு அதிகாரிகள்.

    • வடக்குப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் காலை 10 மணிக்கு மேல் திறந்து, மதியம் ஒரு மணிக்குள் அடைத்து விடுகின்றனர்.
    • ரேஷன் கடைகளை உரிய நேரத்தில் திறந்து, மக்களுக்கு பொருட்கள் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுச்செயலாளர் சரவணன் திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூரில் உள்ள ரேஷன் கடைகள் சரியான நேரத்துக்கு திறப்பதில்லை. வடக்குப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் காலை 10 மணிக்கு மேல் திறந்து, மதியம் ஒரு மணிக்குள் அடைத்து விடுகின்றனர். மாலை, 4 மணிக்கு திறந்து 5:30 மணிக்குள் அடைத்து விட்டு செல்கின்றனர். மாதந்தோறும் 1, 30, 31-ந் தேதிகளில் கடைகளை திறப்பதே இல்லை. போயம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் 31ந் தேதி விடுமுறை என இரண்டு நாட்களுக்கு முன்னரே தகவல் பலகையில் எழுதி வைத்து விடுகின்றனர். ரேஷன் கடைகளை உரிய நேரத்தில் திறந்து, மக்களுக்கு பொருட்கள் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×