search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாட்டில் 10 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழ்: முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்
    X

    மரச்செக்கு எண்ணெய்யை பரிசோதிக்கும் முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்

    தமிழ்நாட்டில் 10 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழ்: முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

    • அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு தொழில்களை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • தொடர்ந்து கூட்டுறவு கடன் சங்கங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என முதன்மை செயலர் தகவல்

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த வாயலூர் பகுதியில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். கூட்டுறவு சங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார். சங்கத்தின் அருகே புதிதாக தொடங்கப்பட்டுள்ள எண்ணைய் உற்பத்தி செய்யும் மரச்செக்கு ஆலையை நேரில் பார்வையிட்டார்.

    பின்னர், செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

    கிராமப்பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலம் தொழில்நுட்ப ரீதியாக மேற்கொண்டுள்ள முன்னேற்ற செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறேன். இதன் ஒரு பகுதியாக, வாயலூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு, வாயலூர் சுற்றுப்புற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கடலை மூலம் எண்ணைய் தயாரிக்கும் வகையில், கூட்டுறவு சங்கத்தில் ரூ.20 லட்சம் கடன் பெற்று செக்கு ஆலை அமைக்கப்பட்டுள்ளது., இதில், உற்பத்தி செய்யப்படும் எண்ணைய் 1 லிட்டர் ரூ.220க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடன் சங்கங்கள் மூலம் அப்பகுதியில் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான செயல்பாடுகள் மற்றும் 24 வகையான தொழில்கள் மூலம் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில், அந்தந்த பகுதிக்கு தேவையான வகையில் தொழில் மேற்கொள்ளப்படுகிறது. வாயலூர் கூட்டுறவு சங்கத்தில் செக்கு அமைத்துள்ளதுபோல், உசிலம்பட்டி பகுதியில் கரும்பு உற்பத்தி மற்றும் அறுவடை செய்வதற்கான இயந்திரங்களை வாடகைக்கு வழங்குதல், கடலூரில் நெல் அறுவடை செய்யக்கூடிய இயந்திரம் வாடகைக்கு வழங்குதல் உள்பட, அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு தொழில்களை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    அதேபோல், இப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகளிலும் ஆய்வு செய்யப்பட்டது. புதுப்பிக்க வேண்டிய கடைகளையும் பார்வையிட்டேன். தமிழ்நாட்டில் ஏற்கெனவே 5 ஆயிரம் ரேஷன் கடைகள் ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்றுள்ளன. இந்தாண்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு மேற்கண்ட சான்று கிடைக்கும் என நம்புகிறோம். பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளை தீர்க்கும் வகையில், அதிகாரிகள் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். தொடர்ந்து கூட்டுறவு கடன் சங்கங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×