search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் கைதானவர்கள்
    X
    பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் கைதானவர்கள்

    கவுன்சிலர்கள் தங்கி இருந்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - அ.தி.மு.க. செயலாளர் உள்பட 3 பேர் கைது

    கவுன்சிலர்கள் தங்கியிருந்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தேவகோட்டை:

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி யூனியன் தேர்தலில் 19 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் தி.மு.க.வைச் சேர்ந்த 7 பேர் தே.மு.தி.க. கவுன்சிலர் மற்றும் 2 சுயேட்சை கவுன்சிலர்கள் என 10 கவுன்சிலர்கள், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள புதுக்குறிச்சி கிராமத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவின் மாவட்ட அமைப்பாளரான ராமகிருஷ்ணன் வீட்டில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். நேற்று காலை 7 மணிக்கு அந்த வீட்டுக்கு 50 பேர் கும்பல் வந்தது.

    அந்த கும்பல் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த 4 கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது. மேலும் பெட்ரோல் குண்டுகளையும் வீசியது.

    இதனால் அங்கு பதட்டம் உருவானது. கவுன்சிலர்களை தேடித்தான் கும்பல் வந்திருப்பதும் தெரியவந்தது. இதற்கிடையே கிராம மக்களும், ராம கிருஷ்ணனின் உறவினர்களும் அங்கு திரண்டு வந்தனர்.

    அவர்களில் விஜய் (வயது 24) என்பவரை 50 பேர் கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியது. பலத்த காயமடைந்த விஜய், மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    சம்பவம் குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கமுதி யூனியன் 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தமிழ் செல்வியின் கணவரும், முன்னாள் கிராம நிர்வாக அலுவலருமான போஸ் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், கமுதி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் காளி முத்து, அவரது மனைவி பாண்டியம்மாள் உள்பட 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    தேவகோட்டை உதவி சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்ல துரை மற்றும் போலீசார் குற்றவாளிகளை தேடிச் சென்றனர்.

    செல்போன் சிக்னல் மூலம், கமுதியில் தனியார் விடுதியில் பதுங்கியிருந்த 3 பேரை கைது செய்தனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    1.கணேசன் (61), அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர், காடமங்கலம் 2. கருமலையான் (46), ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர், பெருநாழி. 3 கணேசன் (40), டிரைவர் திம்மநாதபுரம்.

    கைதான 3 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது வருகிறது.
    Next Story
    ×