search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பார்த்திபனூர் மதகு அணைக்கு நீர்வரத்து
    X

    அணை நீர்வரத்தைகலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டார்.

    பார்த்திபனூர் மதகு அணைக்கு நீர்வரத்து

    • பார்த்திபனூர் மதகு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • இதனை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் மதகு அணையில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது:-

    ராமநாதபுரம் வைகை பழைய மூன்றாம் பாசனப்பரப்பின் பங்கீட்டு நீர் வைகை அணையில் இருந்து 8.8.2022 முதல் 14.8.2022 வரை ஆறு நாட்களுக்கு 1148 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேலும் 27.08.2022 முதல் 02.09.2022 வரை ஆறு நாட்களுக்கு 840 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதனுடன் வைகை ஆறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழைநீரும் சேர்ந்து பெறப்பட்டது. இதன் மூலம் வைகை பாசனப்பரப்பில் பயன் பெறும் கண்மாய்களில் 104 கண்மாய்களுக்கு தண்ணீர் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இந்த 104 கண்மாய்களில் 14 கண்மாய்கள் 75 -100 சதவீதம், 37 கண்மாய்கள் 50 -75 சதவீதம், 32. கண்மாய்கள் 25 -50 சதவீதம், 21 கண்மாய்கள் 25 சதவீதம் வைகை தண்ணீரால் நிரப்பப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் விவசாயம் வடகிழக்கு பருவமழையின் மூலம் பெறப்படும் தண்ணீரை நம்பியுள்ளது. தற்சமயம் வடகிழக்கு பருவமழைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வைகை அணையிலிருந்து பெறப்பட்ட வைகை நீரின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 104 கண்மாய்களுக்கும் எஞ்சிய பிற கண்மாய்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது ஓர் அரிய நிகழ்வாகும். ராமநாதபுரம் பெரிய கண்மாயில் மொத்த கொள்ளளவாகிய 7 அடியில் 6 அடி தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பெரிய கண்மாயின் தலைமதகில் உள்ள 7 போக்கிகளுடன் கூடுதலாக 2 போக்கிகள் அமைக்கப்பட்டதன் மூலமாக வினாடிக்கு 1850 லிருந்து 2300 கனஅடி கூடுதலாக தண்ணீர் எடுக்கப்பட்டு நீர் வீணாவது தடுக்கப்பட்டுள்ளது.

    2-வது பெரிய கண்மாயான சக்கரக்கோட்டை கண்மாய்க்கு வெள்ள காலங்களில் மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டுவந்த நிலையில் தற்பொழுது 40 சதவீதம் மேல் தண்ணீர் வழங்கப்பட்டு நீர் இருப்பு மேலும் உயர்ந்து வருகிறது.

    வைகை நீர் பார்த்திபனூர் மதகு அணையிலிருந்து பரளை வெள்ளை நீர் போக்கி வழியாக வினாடிக்கு 750 கனஅடி முதல் 1000 கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பரளையாறு மூலம் பயன் பெறும் 10 நீர்வளத்துறை கண்மாய்களில் 2 கண்மாய்களில் 50 சதவீதத்திற்கு மேலாகவும் மற்றும் 4 கண்மாய்கள் 25 சதவீதத்திற்கு மேலாகவும் நீர் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அதற்கேற்ப தற்பொழுது உட்கட்டமைப்பு வசதிகள் மூலம் இணைப்பு கால்வாய்களுக்கு போதிய அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு தண்ணீர் வீணாகாமல் சேமித்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி, வைகை ஆறு வடிநிலை கோட்ட உதவி செயற்பொறியாளர் நிறைமதி, உதவி செயற்பொறியாளர்கள் ஆனந்தபாபு, சீனிவாசன், கார்த்திக், பரமக்குடி வட்டாட்சியர் தமீம் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×