என் மலர்
புதுக்கோட்டை
கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33), இவர் அதே பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவரது தந்தைக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லை. இதனால் தஞ்சையில் உள்ள ஒரு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை பார்ப்பதற்காக கொத்தமங்கலத்தில் இருந்து, தனது கடையில் பணிபுரியும் நடராஜன் (45), உறவினர்கள் விஜயகுமார் (45), வடகாடு சக்கரவர்த்தி (55) ஆகியோருடன் ஒரு காரில் கிளம்பினார். காரை டிரைவர் செல்வக்குமார் (27) ஓட்டி சென்றார். தஞ்சை சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து இரவு நள்ளிரவில் திரும்பினர்.
கார் திருவரங்குளம் அருகே ஆலங்குடி புதுக் கோட்டை சாலையில் வந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது. பின்னர் சாலையின் ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நடராஜன், சக்கரவர்த்தி உட்பட அனைவருக்கும் காயம் ஏற்பட்டது.
பின்னர் அனைவரும் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள சோழகம்பட்டியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 48), விவசாயி. இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் வயல் உள்ளது. இன்று காலை வயலில் டிராக்டரை வைத்து உழும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மேலே சென்ற மின்கம்பி திடீரென அறுந்து டிராக்டர் மீது விழுந்தது. இதில் டிராக்டரில் மின்சாரம் பாய்ந்து பழனிவேலை தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பழனிவேலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனேவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் அறந்தாங்கி பகுதியில் மின்சாரம் தாக்கியதில் விவசாயி பாலையா என்பவர் பலியானார். இந்நிலையில் இன்று பழனிவேல் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் இன்று அதிகாலை இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான குட்டி ரோந்து கப்பல் வேகமாக வந்தது.
இதைப்பார்த்த புதுக்கோட்டை மீனவர்கள் பலர் அவசரம், அவசரமாக அங்கிருந்து தங்களது விசைப்படகை நகர்த்தினர். ஆனாலும் மின்னல் வேகத்தில் வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகை சுற்றி வளைத்தனர்.
அதிலிருந்த கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த சுப்பையா (வயது 35), ராஜ்குமார் (32), கஜேந்திரன் (40), சகுபர் (38) ஆகிய 4 மீனவர்களையும் எல்லை தாண்டி வந்து அத்து மீறி மீன்பிடித்ததாக கூறி சிறைப்பிடித்தனர்.
மேலும் அவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்களையும் இலங்கை கடற்படையினர் அபகரித்து கொண்டனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 மீனவர்களையும், அவர்களின் படகுடன் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர்.
இன்று பிற்பகலில் மீனவர்கள் 4 பேரும் அங்குள்ள ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன்பின்னரே அவர்கள் விடுதலை ஆவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்ற விபரம் தெரிய வரும்.
கடந்த 2 வாரங்களில் 3-வது முறையாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அத்தாணி கிராமத்தை சேர்ந்தவர் பாலையா (வயது 63) விவசாயி. இவரது மனைவி சரோஜா (58). இவர்களுக்கு பழனியப்பன் என்ற மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.
பாலையா தனது மனைவியுடன் அத்தாணியில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். வீட்டின் பின் பக்கம் உள்ள காலி நிலத்தில் கொட்டகை அமைத்து, மாடு வளர்த்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் மாட்டிற்கு தேவையான இரையை போட்டுவிட்டு வீட்டின் பின்புறம் கட்டிவிட்டு தூங்க சென்றார்.
அதிகாலை 3 மணியளவில் மாட்டு கொட்டகைக்கு மேலே சென்ற மின்சார கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதில் கீழே கட்டியிருந்த மாட்டின் மீது மின்சாரம் தாக்கியதால் மாடு அலறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. திடீரென மாட்டின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த பாலையா மாடு கட்டியிருந்த இடத்தின் அருகே சென்றுள்ளார்.
மாடு கயிற்றில் சிக்கி தான் கீழே விழுந்தது என நினைத்த பாலையா மாட்டை தூக்கிவிடுவதற்காக தொட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மாட்டின் மீது பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம் பாலையா மீதும் பாய்ந்தது. இதனால் பாலையாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவர் எழுந்து சென்று நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரது மனைவி சரோஜா, வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது பாலையா கீழே கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், கணவரை தூக்க முயன்றார். இதில் அவரது வலது கையில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதனால் படுகாயமடைந்த சரோஜாவை அக்கம் பக்தினர் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த மணமேல்குடி போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு சென்றனர். மின்சாரத்தை தடை செய்து பாலையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள கட்டுக்கரை கிராமத்தை சேர்ந்தவர் காமாட்சி (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் காரைக்குடியில் உள்ள பல் கலைக்கழக கல்லூரியில் பி. பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார்.
கடலூர் மாவட்டம் வட பழனியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் சுரேஷ் (26). இவர் ஆவுடையார்கோவில் பகுதியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். தினமும் ஒரே பஸ்சில் சென்று வரும் சுரேசுக்கும், மாணவி காமாட்சிக்கும் காதல் மலர்ந்தது.
இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி மாணவியை கடத்தி திருமணம் செய்துள்ளார். இதற்கிடையே கல்லூரிக்கு சென்ற மகள் மாயமானது குறித்து அவரது தந்தை ஆவுடையார்கோவில் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு மாணவி காமாட்சியை மீட்டார்.
மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அவர் ஆவுடையார் கோவிலில் உள்ள ரீக்கோ தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். மாணவியை கடத்தி திருமணம் செய்ததாக வழக்குப்பதிவு செய்த போலீசார் புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் சுரேசை கைது செய்து ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இருப்பினும் திருச்சி,கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யவில்லை. அவ்வப்போது லேசான தூரலுடன் மட்டுமே மழை பெய்து வருகிறது. இந்த மழை வெப்பத்தின் தாக்கத்தை தணித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
நேற்றிரவு திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. அதன்பிறகு மழை பெய்யவில்லை. இந்நிலையில் இன்று காலை முதல் லேசான தூரலுடன் மழை பெய்தது.
கடலோர மாவட்டமான புதுக்கோட்டையில் கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து நேற்று மாவட்டத்தில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். ஆனால் நேற்று மழை பெய்யாமல் வெயில் அடித்தது. இந்நிலையில் இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் முதல் லேசான தூரலுடன் மழை பெய்தது.
மாவட்டத்திற்குட்பட்ட அன்னவாசல், இலுப்பூர், ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், நாகுடி, மீமிசல், கோட்டைபட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
வானிலை மையம் எச்சரிக்கை விடுத்த தையடுத்து ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன. போதிய அளவு மழை பெய்யாததால் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் அவ்வப்போது லேசான தூரலுடன் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்த போதிலும் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யவில்லை. அவ்வப்போது லேசான தூரலுடன் மட்டுமே மழை பெய்து வருகிறது. இந்த மழை வெப்பத்தின் தாக்கத்தை தணித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. அதன்பிறகு லேசான தூரலுடன் விடிய விடிய மழை பெய்தது. இந்த மழை இன்று காலை வரை நீடித்தது.
கடலோர மாவட்டமான புதுக்கோட்டையில் கன மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து நேற்று மாவட்டத்தில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். ஆனால் நேற்று மழை பெய்யாமல் வெயில் அடித்தது. இந்நிலையில் இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் முதல் லேசான தூரலுடன் மழை பெய்தது.
மாவட்டத்திற்குட்பட்ட அன்னவாசல், இலுப்பூர், ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், நாகுடி, மீமிசல், கோட்டைபட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
வானிலைமையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன. கரூர், பெரம்பலூர் மாவட்டத்தில் அவ்வப்போது லேசான தூரலுடன் மழை பெய்து வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் நேற்றிரவு கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் ஆறாக ஓடியது. இந்த மழையின் காரணமாக செந்துறை அருகேயுள்ள பெரியகுறிஞ்சியை சேர்ந்த மலர்கொடி என்பவரின் குடிசை வீடும், சொக்கநாத புரத்தை சேர்ந்த தனலட்சுமி என்பவரது வீடும் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழை விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
அரியலூர்-25, ஜெயங்கொண்டம்-36, திரு மானூர்-14, செந்துறை-3.
திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை பெய்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் குடை பிடித்தப்படி சென்றனர்.
புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் விழா புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் பொம்மாடிமலை காந்திநாதன் திடலில் நடைபெற்றது.
விழாவிற்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருமயம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரகுபதி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் வரவேற்றார்.
இதில் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவரது முன்னிலையில், நடிகர் தவசி தேவன், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சாதிக், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் முகமது அலிஜின்னா, வெள்ளனூர் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் நல்லதம்பி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அமைச்சர் விஜயபாஸ்கர் குவாரி ஊழலில் ரூ.350 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி மோசடி, குட்கா ஊழலில் ரூ.40 கோடி லஞ்சம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளருக்கு பல கோடி ரூபாய் பட்டுவாடா செய்த பட்டியல் என வருமான வரித்துறை கண்டுபிடித்து குற்றம் சாட்டி உள்ளது.
இதற்காக அமைச்சர் விஜயபாஸ்கர் மீது தேசத்துரோக வழக்கு போடவேண்டும். அவர்தான் சிறைக்கு செல்ல வேண்டும். ஆனால் மத்திய அரசு கதிராமங்கலம் பிரச்சனைக்கு போராடிய பேராசிரியர் ஜெயராமன் மீது தேசத்துரோக வழக்கு போட்டுள்ளது.
சத்துணவு அமைப்பாளர் பணிக்கு லஞ்சம் பெறப்பட்டதாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மீதும், அவரது நேர்முக உதவியாளர் மீதும் அறந்தாங்கியை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 31-ந்தேதி ஓய்வுபெறும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஓய்வு பெறுவதை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. சத்துணவு அமைப்பாளர் நியமன ஊழலில் யாரும் தப்பிக்க முடியாது.
ஜெயலலிதா மறைவுக்கு தி.மு.க. இரங்கல் தெரிவித்தது. நான் எம்.ஜி.ஆரின் ரசிகன். அவர் நடித்த படத்தை நான் முதல் காட்சியே பார்த்துவிடுவேன். அவரை அரசியலில் வளர்த்தது தி.மு.க.தான். அவர் நோய்வாய்ப்பட்டபோது கருணாநிதி, நாற்பது ஆண்டு கால நண்பரே நலமுடன் வா என வாழ்த்தினார்.
தமிழக அரசு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்ற பெயரில் பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து எதிர்க்கட்சியை விமர்சிக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சியின் பணிகளை நாங்கள் மிகவும் சரியாக செய்து வருகிறோம். என்னை சந்திக்கும் வி.ஐ.பி.க்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த (அ.தி.மு.க.) ஆட்சியை எப்போது அகற்றுவீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள். அவர்களின் கோபம் எல்லாம் அ.தி.மு.க. மீது அல்ல, இந்த ஆட்சியை இன்னமும் விட்டு வைத்திருக்கிறார்களே என்று தி.மு.க. மீதுதான் கோபமாக இருக்கிறார்கள்.
தலைவர் கலைஞரை பொறுத்தவரை கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்கக்கூடாது என்று வலியுறுத்துவார். அதற்காகத்தான் காத்திருக்கிறோம். இந்த ஆட்சியை காப்பாற்ற மோடி முயற்சிக்கிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியாது என்பதே இதற்கு காரணம். ஆனாலும் தமிழகத்தில் பா.ஜ.க.வால் கையைகூட ஊன்ற முடியாது.

வருகிற 6-ந்தேதி சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ரேஷன் கடைகள் முன் போராட்டமும், 8-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் நெடுவாசல், கதிராமங்கலம், நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சனைக்காக மத்திய அரசை கண்டித்து தி.மு.க. போராட்டம் நடத்துகிறது. அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 7-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நான் சொல்வது பொய் என்றால், அவருக்கு தைரியமிருந்தால் என் மீது வழக்கு தொடரட்டும்.
இதனை தொடர்ந்து புதுக்கோட்டையில் உள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனையை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த டாக்டரிடம் தற்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் விபரங்களை கேட்டறிந்தார்.
அதை தொடர்ந்து ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
புதுக்கோட்டை நகர பகுதியில் செயல்பட்டு வந்த மருத்துவமனையை மூடிவிட்டு இங்குள்ள மருத்துவர்களை கொண்டே மருத்துவ கல்லூரி மருத்துவமனையை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டதால் மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மருத்துவமனைகளை அதிகம் திறக்க வேண்டிய அரசு, செயல்பட்டுவரும் மருத்துவமனைகளுக்கு மூடுவிழா நடத்தி உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் வழக்கம் போல் இந்த அரசு மருத்துவமனை செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 141 விசைப்படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் இன்று அதிகாலை இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான குட்டி ரோந்து கப்பல் வேகமாக வந்தது.
இதைப்பார்த்த புதுக்கோட்டை மீனவர்கள் பலர் அவசரம், அவசரமாக அங்கிருந்து தங்களது விசைப்படகை நகர்த்தினர். ஆனாலும் மின்னல் வேகத்தில் வந்த இலங்கை கடற்படையினர் செல்வி, விஜயேந்திரன் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளை சுற்றி வளைத்தனர்.
அதிலிருந்த ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த சந்திரபோஸ் (வயது 28), தெய்வகுமார் (20), குகன் (20), பிரவீன் (21), விவேக் (22), விஜயேந்திரன் (34), செல்வநாதன் (60), முருகன் (35), பாண்டி (40) ஆகிய 9 மீனவர்களையும் சிறைப்பிடித்தனர்.
முன்னதாக டி.என். 06 எம்.எம். 1138 என்ற எண் கொண்ட விசைப்படகில் தங்களது ரோந்து கப்பலால் இலங்கை கடற்படையினர் மோதியதில் அந்த படகு பலத்த சேதமடைந்தது. மேலும் 2 விசைப்படகுகளிலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்களையும் இலங்கை கடற்படையினர் அபகரித்து கொண்டனர்.
மேலும் கடலில் மீனவர்கள் விரித்திருந்த வலைகளையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும், அவர்களின் படகுகளுடன் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர்.
இன்று பிற்பகலில் மீனவர்கள் 9 பேரும் அங்குள்ள ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன்பின்னரே அவர்கள் விடுதலை ஆவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்ற விபரம் தெரிய வரும்.
கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கந்தர்வகோட்டையை நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த டவுன் பஸ்சை டிரைவர் கல்லாக்கோட்டை பகுதியை சேர்ந்த அம்பேத்கர் ஓட்டினார். புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி நுழைவுவாயில் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் நுழைவுவாயில் மீது பயங்கரமாக மோதியது.
இதில் பஸ்சில் பயணம் செய்த புதுக்கோட்டை சாந்தநாதபுரம் 1-ம் வீதியை சேர்ந்த தனலெட்சுமி, வடக்கு 2-ம் வீதியை சேர்ந்த சிவக்குமார், நிஜாம் காலனியை சேர்ந்த கலைவாணன், தைலாநகர் பகுதியை சேர்ந்த ஜமுனா, புதுக்கோட்டையை சேர்ந்த சிலம்பரசன், முள்ளூர் பகுதியை சேர்ந்த முத்து, மாந்தாங்குடியை சேர்ந்த முத்துலெட்சுமி, சிலட்டூர் பகுதியை சேர்ந்த செல்வி, மழவராயன்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன், வெங்கடேஷ், பெருங்கொண்டான்விடுதியை சேர்ந்த ரெகுநாதன், ராஜகுளத்தூரை சேர்ந்த மகேஸ்வரி, செம்பாட்டூரை சேர்ந்த தேவி, மணவிடுதி பானுமதி, பன்னீர்செல்வம், ஆலங்குடி அண்ணாநகரை சேர்ந்த விக்னேஷ், கார்த்தி, கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் உள்பட 22 பயணிகள் காயமடைந்தனர்.
காயமடைந்த பயணிகளை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிலர் முதல் உதவி சிகிச்சை பெற்று, அங்கிருந்து சென்றனர். இதற்கிடையே பஸ் டிரைவர் அம்பேத்கர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அரசு பஸ் டிரைவர் அம்பேத்கரை தேடி வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக நேற்று புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த பரவாக்கோட்டை கிராமத்தில் முத்துராமலிங்கதேவர் குரு பூஜையொட்டி அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பஸ் நிறுத்தம் அருகே டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை டிஜிட்டல் பேனர் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு பகுதி முற்றிலும் எரிந்து சேதமாகியிருந்தது. இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததோடு, சம்பவ இடத்தில் திரண்டனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், நவீன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
நேற்றிரவு 11 மணி வரை பரவாக்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே பொது மக்கள் நடமாட்டம் இருந்தது. அதன் பிறகு பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தபோது, நள்ளிரவு மர்ம நபர்கள் அங்கு வந்து டிஜிட்டல் பேனருக்கு தீ வைத்து விட்டு சென்றுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே டிஜிட்டல் பேனருக்கு தீ வைத்த மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் போலீசாரை முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கீரனூர் உடையாளிப்பட்டி பகுதிகளில் உள்ள செல்போன் கோபுரங்களில், பேட்டரிகள் திருடு போகும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது. செல்போன் டவர்களில் இருந்த மொத்தம் ரூ.3லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரிகள் திருடு போனதாக மாத்தூர் மற்றும் கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் மதுரையை சேர்ந்த பொய்யாமொழி (வயது 53), கண்ணாங்குடியை சேர்ந்த ஆரோக்கியசாமி(62) திருமலைராயபுரத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் சிவக்குமார் (24) ஆகிய மூன்று பேரையும் கைது செய்த கீரனூர் போலீசார், 3 பேரையும் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி பாரதிராஜா முன்னிலையில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.






