என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை அருகே நள்ளிரவில் தேவர் குருபூஜை டிஜிட்டல் பேனர் தீ வைத்து எரிப்பு
    X

    புதுக்கோட்டை அருகே நள்ளிரவில் தேவர் குருபூஜை டிஜிட்டல் பேனர் தீ வைத்து எரிப்பு

    புதுக்கோட்டை அருகே தேவர் குருபூஜையையொட்டி வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த பரவாக்கோட்டை கிராமத்தில் முத்துராமலிங்கதேவர் குரு பூஜையொட்டி அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பஸ் நிறுத்தம் அருகே டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை டிஜிட்டல் பேனர் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு பகுதி முற்றிலும் எரிந்து சேதமாகியிருந்தது. இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததோடு, சம்பவ இடத்தில் திரண்டனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், நவீன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    நேற்றிரவு 11 மணி வரை பரவாக்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே பொது மக்கள் நடமாட்டம் இருந்தது. அதன் பிறகு பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தபோது, நள்ளிரவு மர்ம நபர்கள் அங்கு வந்து டிஜிட்டல் பேனருக்கு தீ வைத்து விட்டு சென்றுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



    இதனிடையே டிஜிட்டல் பேனருக்கு தீ வைத்த மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் போலீசாரை முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×