search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை அரசு மருத்துவமனை நுழைவுவாயில் மீது டவுன் பஸ் மோதல்:  22 பயணிகள் காயம்
    X

    புதுக்கோட்டை அரசு மருத்துவமனை நுழைவுவாயில் மீது டவுன் பஸ் மோதல்: 22 பயணிகள் காயம்

    புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயில் மீது அரசு டவுன் பஸ் மோதியதில் 22 பயணிகள் காயமடைந்தனர்.



    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கந்தர்வகோட்டையை நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த டவுன் பஸ்சை டிரைவர் கல்லாக்கோட்டை பகுதியை சேர்ந்த அம்பேத்கர் ஓட்டினார். புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி நுழைவுவாயில் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் நுழைவுவாயில் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் பஸ்சில் பயணம் செய்த புதுக்கோட்டை சாந்தநாதபுரம் 1-ம் வீதியை சேர்ந்த தனலெட்சுமி, வடக்கு 2-ம் வீதியை சேர்ந்த சிவக்குமார், நிஜாம் காலனியை சேர்ந்த கலைவாணன், தைலாநகர் பகுதியை சேர்ந்த ஜமுனா, புதுக்கோட்டையை சேர்ந்த சிலம்பரசன், முள்ளூர் பகுதியை சேர்ந்த முத்து, மாந்தாங்குடியை சேர்ந்த முத்துலெட்சுமி, சிலட்டூர் பகுதியை சேர்ந்த செல்வி, மழவராயன்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன், வெங்கடேஷ், பெருங்கொண்டான்விடுதியை சேர்ந்த ரெகுநாதன், ராஜகுளத்தூரை சேர்ந்த மகேஸ்வரி, செம்பாட்டூரை சேர்ந்த தேவி, மணவிடுதி பானுமதி, பன்னீர்செல்வம், ஆலங்குடி அண்ணாநகரை சேர்ந்த விக்னேஷ், கார்த்தி, கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் உள்பட 22 பயணிகள் காயமடைந்தனர்.

    காயமடைந்த பயணிகளை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிலர் முதல் உதவி சிகிச்சை பெற்று, அங்கிருந்து சென்றனர். இதற்கிடையே பஸ் டிரைவர் அம்பேத்கர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அரசு பஸ் டிரைவர் அம்பேத்கரை தேடி வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக நேற்று புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
    Next Story
    ×