என் மலர்
புதுக்கோட்டை
அறந்தாங்கி பகுதியில் நேற்று மிதமான மழை பெய்தது. மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அறந்தாங்கி பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் அறந்தாங்கியில் லேசான தூறல் இருந்தது. மாலை விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.
காவிரி பாசனப் பகுதியான நாகுடி பகுதியிலும் மிதமான மழை பெய்தது. மழை பெய்த போதிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிருக்கு இந்த மழையால் எவ்வித பயனும் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
சென்னை திருவான்மியூர் ஈஸ்வரா அபார்ட்மெண்ட் பகுதியை சேர்ந்த தாம்சன் மகன்கள் ஹீமோபி (வயது 34), டைட்டஸ் (30). இவர்கள் இருவரும் சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தனர்.
இவர்களது நண்பர் தர்மபுரி மாவட்டம் பாலமேட்டை சேர்ந்த சதீஸ் (24). இவரும் சென்னையில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் புறப்பட்டு சென்றனர்.
அங்கு நிகழ்ச்சியை முடித்து விட்டு ஹீமோபி, டைட்டஸ், அவர்களது சகோதரி ஸ்ரீபா, சதீஸ் ஆகிய 4 பேரும் சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர். காரை ஹீமோபி ஓட்டிவந்தார். அவர்களது கார் இன்று அதிகாலை சுமார் 12.15 மணியளவில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விராலிமலை அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் விராலிமலை ஊருக்குள் சென்று பயணிகளை இறக்கிவிட்டு விராலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏறியது.
அந்த சமயம் எதிர்பாராத விதமாக சென்னை நோக்கி சென்ற கார் பஸ் மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரை ஓட்டி வந்த ஹீமோபி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
மேலும் படுகாயம் அடைந்த டைட்டஸ், சதீஸ் ஆகியோரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர். ஸ்ரீபா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
விபத்து நடந்த இடத்தை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கீரனூர் டி.எஸ்.பி. பாலகுரு, விராலிமலை இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விபத்து காரணமாக நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள எல்லையாப்பட்டியில் கல்குவாரி ஒன்று உள்ளது. அந்த குவாரியில் துளையிடுவதற்காக கம்பரசர் ஒன்று டிராக்டர் மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர் வேலை முடிந்தபின் நேற்று முன்தினம் மாலை குவாரியில் இருந்து அந்த டிராக்டர் மேலே செல்வதற்காக புறப்பட்டது. அந்த டிராக்டரை எல்லையாப்பட்டியை சேர்ந்த மாணிக்கம் மகன் பால்ராஜ் (வயது 27)ஓட்டினார். அப்போது அந்த டிராக்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் நிலை தடுமாறி கல் குவாரியில் உள்ள 100 அடி பள்ளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கியது.
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரில் கிடந்த பால்ராஜை மீட்டனர். இருப்பினும் அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பால்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அன்னவாசல் அருகே 100 அடி பள்ளத்தில் டிராக்டர் விழுந்து டிரைவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாட்சியமை தங்கிய மன்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், புதுக்கோட்டை மாவட்ட பிரிவு சார்பில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் 2017-18 மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்த தடகளப் போட்டிகளில் கை, கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், காது கேளாதோர் உள்ளிட்ட 4 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி, நின்ற நிலையில் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகள விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்து பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகளிடம் உள்ள பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகள் இது போன்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் மாற்றுத்திறனாளிகளின் மனமும் உடலும் புத்துணர்ச்சியுடன் செயல்பட விளையாட்டு முக்கியமாகும். எனவே இத்தகைய விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
மேலும் இன்று நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகளில் சுமார் 400 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டுள்ளனர். இம்மாற்றுத் திறனாளிகள் போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே பெரியாளூரில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் பெரியாளூர் இணைப்பு சாலையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி துரை பாண்டியன் தலைமை தாங்கினார். திருமுருகன் முன்னிலை வகித்தார். கொள்கை பரப்பு செயலாளர் ஜெயசீலன் சிறப்புரையாற்றினார்.
ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், இந்திய ஜன நாயக வாலிபர் சங்க நிர்வாகி கர்ணா, மக்கள் அதிகாரம் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமாணவர்கள் கலந்து கொண்டனர்.
விராலிமலை:
விராலிமலை துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் விராலிமலை நகர்பகுதி, கோமங்கலம், கல்குடி, பொருவாய், அத்திப்பள்ளம், நம்பம்பட்டி, ராஜாளிபட்டி, பொய்யாமணி, சீத்தப்பட்டி, செட்டியபட்டி, தேன்கனியூர், கொடும்பாளூர், மாதுரா பட்டி, ராமகவுண்டம்பட்டி,
விராலூர், வானதிராயன்பட்டி, ராஜகிரி, மலைக்குடிபட்டி, கோத்திராபட்டி, கட்டகுடி, பாப்பாவயல், முருகேசன்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின் வினியோகம் இருக்காது என விராலிமலை உதவி செயற்பொறியாளர் கண்ணன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைபள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா லேப் டாப் சமீபத்தில் வழங்கப்பட்டது. இதற்காக மாணவர்களிடம் இருந்து 50ரூபாய் முதல் 250ரூபாய் வரை கட்டணமாக பள்ளி நிர்வாகத்தினர் வசூலித்தனராம்.
கொடுக்க மறுத்த மாணவர்களுக்கு லேப் டாப் தர மாட்டோம் என்று கூறியதோடு, பள்ளியில் பெரிய அளவில் நிகழ்ச்சியை நடத்தியதற்கான செலவு தொகையை ஈடுகட்ட இந்த பணம் வசூலிக்கப்படுவதாக பள்ளி நிர்வாகத்தினர் கூறியிருந்தனர்.
இந்த பணத்தை ஆசிரியர் ஒருவர் வசூலிக்கும் போது அவருக்கு தெரியாமல் செல்போனில் அதை வீடியோ எடுத்த மாணவர்களில் சிலர், வாட்ஸ் அப்பில் பதிவு செய்து பல்வேறு குரூப்களுக்கு அனுப்பி வைத்ததால் அது வைரலாகி மற்ற பள்ளி மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அப்பள்ளி மாணவர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு இந்த பள்ளியில் படித்த 130 மாணவர்களுக்கு லேப் டாப் வழங்கப்பட்டது. அப்போது ஆசிரியர் ஒருவர், வாகன கட்டணம் மற்றும் நிகழ்ச்சி நடத்தப்பட்ட செலவை ஈடுகட்ட பணம் வசூலிக்கிறோம் என்றார். அப்படியென்றால் அனைத்து மாணவர்களிடமும் ஒரே மாதிரியான கட்டணம்தானே வசூலிக்க வேண்டும். ஏன் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்களிடம் மட்டும் ரூ.250ம், வரலாறு, காமர்ஸ் பிரிவை சேர்ந்த மாணவர்களிடம் 50 ரூபாயும் வசூலிக்கிறீர்கள் என்று கேட்டோம். இதனால் நீண்ட நேரம் காக்க வைத்து லேப்டாப் கொடுத்தனர் என்று கூறினர்.
இது குறித்து பள்ளி தலைமையாசிரியர் நாகராஜன் கூறும் போது, லேப் டாப் வழங்குவதற்காக பள்ளியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கான செலவினை ஈடுகட்ட அனைத்து மாணவர்களிடமும் 50ரூபாய் வசூலித்து கொள்ளலாம் என்று பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் முடிவு செய்து அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர்களிடம் அரசுக்கு செலுத்த வேண்டிய கல்வி கட்டணம் 200ரூபாயை வசூலிக்க மறந்து விட்டோம். அதை லேப் -டாப் வாங்கும் போது சேர்த்து வசூலித்தோம். அந்த தொகையை அரசு கருவூலத்தில் செலுத்தியுள்ளோம். பள்ளி மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு படித்த மாணவர்களே இது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவது வேதனையை ஏற்படுத்துகிறது என்றார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி செந்தில்வேல்முருகன் இன்று முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைபள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று 180 விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த சத்தியராஜ் என்பவருக்கு சொந்தமான படகில், அதேபகுதியை சேர்ந்த அன்பரசன் (வயது 25), நாகரத்தினம் (38), சவுந்தரராஜன் (26), அருள் (19) ஆகிய 4 பேரும் மீன்பிடிக்க சென்றனர்.
இந்நிலையில் 4 பேரும் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த வழியாக குட்டி ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கண்டதும் அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தனர்.
இதையடுத்து அன்பரசன் உள்பட 4 மீனவர்களும் கரையை நோக்கி தங்கள் விசைப்படகினை செலுத்தி கொண்டிருந்தனர். அப்போது வரும் வழியில் விசைப்படகில் என்ஜின் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நின்றது. உடனடியாக இலங்கை கடற்படையினர் அங்கு வந்து விசைப்படகினை சுற்றி வளைத்தனர். பின்னர் படகில் இருந்த அன்பரசன் உள்பட 4 பேரையும் கட்டை மற்றும் கயிற்றால் பயங்கரமாக தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் அன்பரசன், நாகரத்தினம், சவுந்தரராஜன், அருள் ஆகிய 4 பேரும் காயமடைந்து தங்கள் படகில் கிடந்தனர். இதை அருகில் மற்றொரு விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்த முருகன் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் தனது விசைப்படகில் கயிற்றை கட்டி 4 பேர் காயமடைந்து கிடந்த விசைப்படகை இழுத்துக்கொண்டு ஜெகதாப்பட்டினத்திற்கு வந்தார். பின்னர் காயமடைந்த 4 பேரும் 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறியதாவது:-
ரோந்து கப்பலில் வந்து சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் எங்கள் படகிற்குள் குதித்தனர். அங்கிருந்த அனைத்து பொருட்களையும் தூக்கி கடலில் வீசினர்.
பின்னர் தங்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்களால் கடுமையாக எங்களை தாக்கினர். அப்போது எங்களில் சிலர் கதறி அழுதனர். அடிப்பதை நிறுத்துங்கள், நாங்கள் திரும்பி சென்று விடுகிறோம் என்று கூறினோம். அதற்கு அவர்கள் தமிழில் பேசினால் தொடர்ந்து அடிப்போம் . அதை தவிர்த்து வேறு மொழியில் பேசுங்கள், உங்களை விட்டு விடுகிறோம் என்று கூறியவாறு மீண்டும் தாக்கினர். அதன்பின்பு எங்களை கரைப்பகுதியை நோக்கி விரட்டியடித்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த சம்பவம் புதுக் கோட்டை மாவட்ட மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மாங்குடியை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 47), விவசாயி. இவரது மகன் அருண் பாண்டியன் (23). இவர்களது பக்கத்து வீட்டில் உறவினரான சவுந்திர பாண்டியன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அருண் பாண்டியன் கோவையில் கூல்டிரிங்க்ஸ் கடை நடத்தி வந்தார். தந்தையை பார்க்க அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார்.
இந்நிலையில் உறவினர்கள் என்பதால் அருண்பாண்டியனும், சவுந்திரபாண்டியனின் மகள் சுவிதாவும் (21) நெருங்கி பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு அறிவழகன் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இதனால் அருண்பாண்டியன் நேற்று முன்தினம் சுவிதாவை அழைத்து கொண்டு வீட்டை விட்டு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த அறிவழகன் நேற்று மாலை அறந்தாங்கி ரத்தினக்கோட்டை சாலையில் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு படுத்து விட்டார்.
மயங்கி கிடந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அறிவழகன் இறந்தார்.
புதுக்கோட்டை வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த இல்லத்தில் இருந்தது ஜெயலலிதா, சசி கலாதான். அதற்கு பிறகு அங்கு என்னென்ன இருந்தது என்ற விபரங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்குத்தான் தெரியும்.
எனவே அவர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தவேண்டும். மேலும் வருமான வரித்துறை சோதனை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சரும், துணை முதல்வரும் அறிக்கை அளிக்க வேண்டும்.

ராமேசுவரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூடு விவகாரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தவறான தகவல்களை கூறி வருகிறார். நேற்று சென்னையில் பேட்டியளித்த அவர் ராமேசுவரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது உண்மை, அது இந்திய கடற்படையினர் நடத்தவில்லை என்று கூறியுள்ளார்.
இதேபோல் தான் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வாங்கி தருவதாக உறுதியளித்தார். அதன்பிறகு பின்வாங்கி விட்டார். மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்தில் இந்திய கடற்படையே மன்னிப்பு கேட்ட பிறகு அதனை திசை திருப்ப அமைச்சர் நிர்மலா சீதாராமன் முயல்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் ஊழல் மலிந்து கிடக்கிறது. எதற்கெடுத்தாலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கே ரூ.3 லட்சம் கொடுக்கவேண்டிய சூழல் உள்ளது. புதுக்கோட்டையில் இதுதொடர்பாக வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மாநில சுயாட்சியை விட்டுக்கொடுக்க அனைத்து அமைச்சர்களும் தயாராகி விட்டனர். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோவையில் ஆய்வு மேற்கொண்டதை நியாயப்படுத்தி வருவதே இதற்கு சாட்சி. இது ஏற்புடையது அல்ல.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்டோரை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே துவார் பகுதியை சேர்ந்தவர் பெரமைய்யா (வயது 35). இவர் கருக்காகுறிச்சி கிழக்கு ஊராட்சியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சொந்த வேலை காரணமாக புதுக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் வேலையை முடித்து விட்டு மீண்டும் அதே மோட்டார் சைக்கிளில் துவாரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பெரமைய்யா ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த பெரமைய்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கிராம நிர்வாக அதிகாரி பெரமைய்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை நகராட்சி, கலீப்நகர் தனியார் பள்ளியில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை புதுக்கோட்டை சார்பில் உணவு பாதுகாப்பு முறை பற்றிய விழிப்புணர்வு முகாமினை மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் பி.கே.வைரமுத்து முன்னி லையில்மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் .சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
முகாமில் அமைச்சர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மழைக்காலத்தில் உணவு பாது காப்பு மேலாண்மை சம்மந்தமாக கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கையேட்டினை வழங்கினார். பொது மக்கள், பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடி நீரும் வழங்கினார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:
பொதுமக்களிடையே இன்றைய காலகட்டத்தில் ஏற்படும் தொற்று நோய்களுக்கு மாறுபட்ட உணவு பழக்க வழக்கங்களே காரணமாகும். எனவே பொதுமக்கள் உடல் நலன்களை பாதுகாக்க உணவு பாதுகாப்பு மேலாண்மை குறித்து உரிய விழிப்புணர்வு பெற்றிட வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி வளாகங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
தேங்கி நிற்கும் சுத்தமான நீரில் டெங்குகொசு உருவாகிறது. டெங்குகொசு பகலில் மட்டுமே கடிக்கும். உலக சுகாதார நிறுவன அறிவுறுத்தலின்படி டெங்கு காய்ச்சலுக்கு ஊசி போடக் கூடாது. இப்பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் தங்களது வீட்டில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களிடம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மழைக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு மேலாண்மை குறித்தும் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் சிறப்பான முறையில் கல்வி கற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கூறினார்.
நிகழ்ச்சியில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பா.ஆறுமுகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மரு.ரமேஷ்பாபு, மத்திய தொலைத்தொடர்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் பாஸ்கர், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் சேட் (எ) அப்துல்ரகுமான் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






